செவ்வாய், 12 ஜூன், 2018

2001  A Space odyssey
ஒரு திரைப்படத்தைப் பற்றி படித்தேன். யம்மோய் காலம் கடந்தும் வியக்க வைக்கிறது. ஆச்சரியப்பட வைக்கிறது.அற்புதமாய் இருக்கிறது.
ஸ்டேன்லி குப்ரிக்கின் 2001 ஒரு விண்வெளிப்பயணம் 2001 A Space Odyssey.. 1968ல் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. அரை நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றுவரை உலகின் தலைசிறந்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
1968ல் வெளியான இந்தப் படத்தின் பெரும்பாலான கதைக்களன் 2001ல் நடப்பதால் உண்மையில் 2001ல் இந்தப் படத்தை பார்க்க கூடியவர்கள் தன்னைப் பார்த்து கேலியாக சிரித்து விடக்கூடாது என்பதில் ஸ்டேன்லி உறுதியாக இருந்தார். அதனால் சிறப்பு வடிவமைப்பாளர்களை விடுத்து உண்மையான அறிவியலாளர்களையும் நாசாவின் தொழில்நுட்ப பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார். விண்கலம் அதன் உள்ளே இருக்கும் தொழில்நுட்பம் விண்வெளி வீரரின் உடைகள் கணிணி என்று எல்லாவற்றிலும் தன் காலத்தை மீறிய சித்தரிப்பை தருவதற்காக நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து தான் இந்தப் படத்தை ஸ்டேன்லி குப்ரிக் எடுத்தார். படம் வெளியான 50 ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும் போது நாசாவே குப்ரிக்கிடம் பின் தங்கியிருப்பதை உணர முடிகிறது.
இந்தப்படத்தின் தொழில்நுட்பத் துல்லியம் பற்றி நாசா தன் இணைய தளத்தில் ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. படத்தில் காட்டப்படும் விண்வெளிநிலையம் அன்று கற்பனை இன்று நிஜம். 1968ல் தட்டையான திரைகளை கொண்ட கணிணிகளை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது இன்று அதுவும் நிஜம். இப்படத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விஷயங்களை மனிதகுலம் இனிதான் செயல்படுத்த வேண்டும் என்றும் இறுதியில் நாசா கூறுகிறது.
ஆக 2001 ஒரு விண்வெளிப்பயணம் படம் தன் அரை நூற்றாண்டு பயணத்தை நிறைவு செய்திருக்கும் தருணத்தில் அது வெறும் படமாக மட்டும் அல்லாமல் ஒரு கலாசார அறிவியல் நிகழ்வாக உருவெடுத்திருப்பதை தெளிவாக உணர முடிகிறது.
ஸ்டேன்லி குப்ரிக்கிற்கு நிறைய பூங்கொத்துக்களுடன் கைகுலுக்கல்களும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக