வெள்ளி, 15 ஜூன், 2018

ஒற்றை எலக்ட்ரான் கோட்பாடு (Single Electron Universe)
இறந்து போன ஒரு  கோட்பாடு!
பரம்பொருள் என்பதெல்லாம்
வெற்று நம்பிக்கை (Blind belief)!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
ஒற்றை எலக்ட்ரான் பிரபஞ்சம் என்பது
பல பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பேராசிரியர்
ஜான் வீலர் ((John Archibald Wheeler 1911-2008) கூறிய
விஷயம் ஆகும். ஒட்டு மொத்தப் பிரபஞ்சமும்
அதில் உள்ள பொருட்களும் உயிர்களும் நீங்களும்
நானும் ஆகிய எல்லாம் ஒரே ஒரு எலக்ட்ரானால்
மட்டும் ஆனது என்பதே வீலரின் கோட்பாடு. இதை
இயற்பியல் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

எலக்ட்ரான் போன்ற துகள்கள் பிரித்து அறியவோ
வேறுபாடு காணவோ இயலாதவை. இது துகள்களின்
பொதுவான தன்மை. இதை indistinguishability என்று
சொல்வார்கள். இந்தத் தன்மையைக் கொண்டு
ஒற்றை எலக்ட்ரான்தான் இந்தப் பிரபஞ்சம்
என்று சொல்ல இயலாது. ரிச்சர்டு பெயின்மேனுக்கு
நோபல் பரிசு கிடைத்தது ஒற்றை எலக்ட்ரான்
கோட்பாட்டுக்காக அல்ல.

ஒற்றை எலக்ட்ரான் கோட்பாடு ஒரு நகைச்சுவை.
அவ்வளவே. அது இன்றளவும் சரியென்று நிரூபிக்கப்
படவில்லை. அதற்காக பேராசிரியர் வீலர்
முன்வைத்த பல வாதங்களில் ஓரளவு தர்க்கம் இருந்த
போதிலும் கூட, ஒற்றை எலக்ட்ரான் கோட்பாட்டை
நிரூபிக்கவோ அல்லது பொய்யாக்கவோ
(either to prove or to disprove) பேராசிரியர் வீலரின்
சமகாலத்திய விஞ்ஞானிகள் முன்வரவில்லை.
இதற்குக் காரணம்  நிரூபிக்கவோ அல்லது
பொய்ப்பிக்கவோ அருகதை உடைய ஒரு
கோட்பாடாக விஞ்ஞானிகள் .அதைக் கருதவில்லை.

இயற்பியலின் பரணில் ஆயிரம் கோட்பாடுகள்
உள்ளன. அவற்றில் கவைக்கு உதவாத ஒரு
கோட்பாடாக  இதுவும் உள்ளது. மேலும்
இக்கோட்பாடு தற்போது உயிருடன் இல்லை.
இதை வைத்துக்கொண்டு பரம்பொருள்
இருப்பது உண்மை என்று கூறுவது அல்லது
கூற முற்படுவது அறிவியலுக்கு எதிரானது.

பரம்பொருள் இருக்கிறது என்பது வெறும் நம்பிக்கை!
வெற்று நம்பிக்கை! Faith has no logic, அதாவது
நம்பிக்கைக்கு தர்க்க நியாயம் எதுவும் கிடையாது!
எனவே பரம்பொருள் இருக்கிறது என்ற கருத்து
அறிவியலால் நிரூபிக்கப் .படாத ஒன்று. எனவே
பரம்பொருளோ கடவுளோ இல்லை என்கிறது
அறிவியல். துல்லியமாகச் சொன்னால், பரம்பொருள்
அல்லது கடவுள் என்பதற்கு மொத்தப் பிரபஞ்சத்திலும்
மொத்த வெளி-காலத்திலும் ஒரு பௌதிக இருப்பு
கிடையாது. கிடையவே கிடையாது.

அப்படி இருப்பதாக இதுவரை யாரும் நிரூபித்தது இல்லை.

வீலருக்கு மறுப்பு: எமது நிரூபணம் இதோ!
-------------------------------------------------------------------------
இந்தப் பிரபஞ்சம் ஒற்றை எலக்ட்ரானால் மட்டும்
ஆனதல்ல என்பதற்கு நியூட்டன் அறிவியல் மன்றம்
தரும் நிரூபணம்! (காப்புரிமை மற்றும் பதிப்புரிமை:நியூட்டன் அறிவியல் மன்றம்)

சூரியனில் பருப்பொருள் (matter) உள்ளது. பூமியிலும்
பருப்பொருள் உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும்
உள்ள தொலைவு 15 கோடி கிலோமீட்டர் ஆகும்.

சூரியனில் இருந்து புறப்படும் ஒளியானது பூமியை
வந்தடைய 500 வினாடி (8 நிமிடம்) ஆகிறது. ஒளியின்
வேகம் வினாடிக்கு 3 லட்சம் கி.மீ ஆகும். 15000 கோடி
கி.மீ தூரத்தைக்  கடக்க ஒளிக்கு 500 வினாடி அதாவது
8 நிமிடம் ஆகும்.

இப்போது பேராசிரியர் வீலரின் ஒற்றை எலக்ட்ரான்
கோட்பாடு சரிதானா என்று பரிசீலிப்போம். மொத்தப்
பிரபஞ்சத்திலும் ஒரே ஒரு எலக்ட்ரான் மட்டும்தான்
இருக்கிறது. அது சூரியனில் இருப்பதாக வைத்துக்
கொள்வோம். அப்படியென்றால், அந்த நேரத்தில்
(at that instant of time) பூமியில் எலக்ட்ரான் இருக்க
முடியாது. ஏனெனில் சூரியனில் உள்ள எலக்ட்ரான்
பூமியை வந்தடைய 8 நிமிடம் ஆகும்.

எலக்ட்ரான் பூமிக்கு வந்து சேராத இந்த 8 நிமிடத்தில்
பூமியில் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
எலக்ட்ரான் இல்லாத பூமி,அதாவது பூமி என்னும் பொருள்
நிலைத்தன்மை கொண்ட அணுக்களால் ஆனதாக
இருக்க முடியாது. எலக்ட்ரான் இல்லாவிட்டால்,
பூமியில் உள்ள மொத்த அணுக்களும் அயனிகளாக
(ions) மாறிப்போய் மின்னேற்றம் அடைந்த
நிலையில்தான் (charged condition) இருக்க முடியும்.

அதாவது மொத்த பூமியும் ஒரு குழம்பாக
ஆகி விடும். இதன் பொருள் நீங்களும் நானும்
இன்னும் அனைத்துப் பொருட்களும்
முழுசாக இருக்க முடியாது. உருகிப்போய் குழம்பாக
மாறி விடுவோம். அதாவது யாரும் உயிரோடு
இருக்க மாட்டோம்.

பூமி மட்டுமல்ல.பூமிக்கு அப்பால் உள்ள செவ்வாய்,
வியாழன், சனி போன்ற கோள்கள் சூரியனில் இருந்து
பூமியை விட அதிக தூரத்தில் இருப்பவை. அங்கெல்லாம்
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி போய்ச்சேர
மேற்கூறிய  நிமிடத்தை விட அதிக நேரம் ஆகும்.
உதாரணமாக, சூரியனில் இருந்து புறப்படும் ஒளி
நெப்டியூனை அடைய தோராயமாக 250 நிமிடம்
ஆகும். அதாவது 4 மணி 10 நிமிடம் ஆகும்.

இந்த 4 மணி நேரத்தில் நெப்டியூன் என்ன ஆகும்?
மின்சாரக் குழம்பாக மாறி விடும்.

எனவே ஒரே ஒரு எலக்ட்ரானை மட்டுமே கொண்டு
மொத்தப் பிரபஞ்சமும் ஆக்கப் பட்டது என்னும்
பேராசிரியர் வீலரின் கூறு முற்றிலும் தவறானது.
இது இங்கே நிரூபிக்கப் பட்டுள்ளது. QED. 

பின்குறிப்பு: ஜான் வீலர் மகத்தான இயற்பியலாளர்.
இயற்பியலுக்கு அவரின்  பங்களிப்புகள்
பிரம்மாண்டமானவை. கருந்துளை (Black hole) என்ற
பதத்தையே அவர்தான் முதன் முதலில் உருவாக்கினார்.
அவரின் மகத்தான பங்களிப்புக்கு நியூட்டன் அறிவியல்
மன்றம் நிரந்தரமாகத் தலைவணங்கி நிற்கிறது.
இக்கட்டுரை வீலருக்கு எதிரானது என்றோ, வீலர்
தவறான கோட்பாட்டைக் கூறிய ஒரு சாதாரண
விஞ்ஞானி என்றோ வாசகர்கள் புரிந்து கொள்ளக் கூடாது.       
***************************************************************
      




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக