திங்கள், 25 ஜூன், 2018

தொழிற்சாலைகள்  ஏற்படுத்தும் மாசும்
ஸ்டெர்லைட் ஆலை  மூடலும்!
=================================
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------
ஒவ்வொரு தொழிலும் மாசு ஏற்படுத்துகிறது.
மாசு ஏற்படுத்தாத தொழில் என்று எதுவும்
கிடையாது. குறைவான மாசு, கூடுதலான மாசு
என்பதுதான் வேறுபாடு..

மத்திய அரசு அதிகமாக மாசு விளைவிக்கும்
17 தொழில்களை சிவப்பு நிறத் தொழில்களாக
ஏற்கனவே வகைப்படுத்தி இருந்தது. குறைவான மாசு
விளைவிக்கும் தொழில்களை ஆரஞ்சு நிறத்திலும்
மாசு விளைவிக்காத தொழில்களை பச்சை
நிறத்திலும் வகைப்படுத்தி இருந்தது.

இந்த வகைமை 2016ஆம் ஆண்டு வரை நீடித்தது.
2016 மார்ச்சில் புதிய வகைமையை (new categorization)
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்தது.
சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மார்ச் 5, 2016இல் இதற்கான அரசாணையைப்
பிறப்பித்தார்.

புதிய வகைமையில் சிவப்பு நிறப் பிரிவில்
60 தொழில்கள் உள்ளன. முன்பு 17 தொழில்கள்
மட்டுமே ஆபத்தானவை என்ற நிலைமை மாறி
60 தொழில்கள் ஆபத்துப் பட்டியலில் கொண்டு
வரப் பட்டுள்ளன. அணுமின்சாரம் தயாரிக்கும்
தொழில் பழைய பட்டியலில் சிவப்புப் பிரிவில்
இல்லை. தற்போது அது சிவப்புப் பட்டியலில்
உள்ள 60 தொழில்களில் ஒன்றாக உள்ளது.

தொழில்களை வகைப் படுத்துவதில் மாசுக்குறியீடு
(pollution index) முக்கிய அளவுகோலாக உள்ளது
("Re-categorization of industries based on their pollution load is a 
scientific exercise") என்கிறது சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அறிக்கை.
0 முதல் 100 வரையிலான எண்களைக் கொண்டது
இந்த மாசுக் குறியீட்டு அளவுகோல்.

புதிய வகைமையின்படி தொழில்கள் நான்கு
பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
சிவப்பு = அதிக ஆபத்து,
மாசுக் குறியீடு (pollution index) 60ம் அதற்கு மேலும்.

ஆரஞ்சு = இரண்டாம் நிலை ஆபத்து
மாசுக்குறியீடு 41 முதல் 59 வரை.

பச்சை = மிகக் குறைந்த மாசு
மாசுக்குறியீடு 21 முதல் 40 வரை.

வெள்ளை= மிக மிகக் குறைவான மாசு.
மாசுக்குறியீடு 20 வரை (20ஐ உள்ளடக்கியது).

ஒவ்வொரு வகையிலும் எத்தனை தொழில்கள்
உள்ளன என்பதைப் பார்ப்போம்.
சிவப்பு = 60
ஆரஞ்சு = 83
பச்சை = 63
வெள்ளை = 36.

60 சிவப்புத்  தொழில்களில் சில:
1. சர்க்கரை ஆலைகள் (வரிசை எண்:12)
2. பட்டாசு ஆலைகள் (எண்: 14)
3.சிமிண்டு ஆலைகள் (எண்: 26)
4. அணு மின்சார உலைகள் (எண்: 36)
5.தோல் பதனிடும் ஆலைகள் (எண்: 44)
6.தாமிர உருக்காலை (எண்: 50)
இன்னும் பல.

தோல் பதனிடும் ஆலைகளும் தாமிர உருக்காலையும்
ஏற்கனவே 17 தொழில்களைக் கொண்ட பழைய
பட்டியலிலும் இருந்தன.

ஆரஞ்சுப் பட்டியலில் உள்ள 83 தொழில்களில் சில:
1. குறுந்தகடு, கணினி பிளாப்பி தயாரிப்பு (CD, FLOPPY)
2. ஐஸ்கிரீம் தயாரிப்பு
3. ஸ்பிரே பெயிண்டு தயாரிப்பு
4. கொசு விரட்டிச் சுருள் தயாரிப்பு
5.மென்பானங்கள் தயாரிப்பு (soft drinks)

பச்சைப் பிரிவில் வரும் தொழில்களில் சில:
1. அலுமினியப் பாத்திரம் தயாரிப்பு
2. ஆயுர்வேத மருந்து தயாரிப்பு
3. மாவு அரவை ஆலைகள் (flour mills)
4. நீற்றுச் சாம்பல் ஏற்றுமதி (Fly ash export)
5. மினரல் வாட்டர் தயாரிப்பு

வெள்ளைப் பிரிவில் வரும் தொழில்கள்:
1. நீற்றுச் செங்கல் தயாரிப்பு (Fly ash bricks/block)
2.வாசனைப் பாக்கு தயாரிப்பு
3. பவுன்டன் பேனா தயாரிப்பு
4.கைத்தறி மற்றும் ஜமுக்காளம் நெசவு
5. கயிறு தயாரித்தல் (பிளாஸ்டிக் மற்றும்  பருத்தி)

ஸ்டெர்லைட் ஆலை மூடல்!
------------------------------------------------
தூத்துக்குடியில் மீளவிட்டான் கிராமத்தில் உள்ள
ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருக்காலையை
தமிழக அரசு மூட உத்தரவிட்டு உள்ளது. அந்த
ஆலை மூடப்பட்டு விட்டது. மூலத்தாதுவில் இருந்து
தாமிரத்தைப் பிரித்தெடுக்கும் தாமிர உருக்காலைகள்
(copper smelter) சிவப்பு நிற வகைமையில் வருகின்றன.

தமிழ்நாட்டில் இனிமேல் இதுபோன்ற, சூழலை அதிகமாக
மாசு படுத்தும் சிவப்பு நிற ஆலைகளுக்கு மக்களின் ஒப்புதல்
கிடைப்பது கடினம். ஆலை தொடங்குவதாக
அறிவிப்பு வெளியிட்ட உடனேயே மக்களின்
போராட்டங்கள் வெடிக்கும். இதுதான் மக்களின்
இன்றைய மனநிலை. எனவே தமிழக அரசு ஸ்டெர்லைட்
உருக்காலையைத் தமிழகத்தில் தொடர்ந்து இயங்க
அனுமதிப்பதில்லை என்று கொள்கை முடிவு
எடுத்திருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில்
அறிவித்துள்ளது/ இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட்
ஆலை நிரந்தரமாக மூடப் படுவதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது.
*******************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக