வெள்ளி, 29 ஜூன், 2018

(8) மதம் நாத்திகம் பற்றிய மூல ஆசான்களின்
போதனையில் எவ்வித சந்து பொந்தும் இல்லை!
ஞானிக்கு மறுப்பு! கட்டுரையின் 8ஆம் பகுதி!
----------------------------------------------------------------------------------
யோவானுக்கு வெளிப்படுத்திய விசேஷம் பற்றிய
கட்டுரையில்  எங்கல்ஸ் கிறிஸ்துவம்
பற்றி விவரித்திருப்பார். மேலும் ஜெர்மனி
பல்கலைக் கழகப் பேராசிரியர் புரூனோ பவ்வரின்
மறைவை ஒட்டி நடந்த அஞ்சலிக் கூட்டத்தில்
உரையாற்றிய எங்கல்ஸ் கிறிஸ்துவம் பற்றி
மேலும் குறிப்பிடுகிறார்:

"உலகளாவிய மாபெரும் ரோமானியப் பேரரசை
மண்டியிட வைத்த கிறிஸ்துவ மதத்தை,
1800 ஆண்டுகளாக நாகரீகமடைந்த மனித இனம்
வாழும் உலகின் பெரும்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய
கிறிஸ்துவ மதத்தை அபத்தம் என்றோ மோசடியாகப்
பிறந்தது என்றோ ஒதுக்கித் தள்ள முடியாது."

("A religion that brought the Roman world empire into subjection, and 
dominated by far the larger part of civilized humanity for 1,800 years, 
cannot be disposed of merely by declaring it to be nonsense gleaned 
together by frauds.")
(பார்க்க: புரூனோ பவ்வரும் ஆரம்பகால கிறிஸ்துவமும்,
Marx and Engels; On Religion, Progress Publishers, Moscow, 1966)  

"மதங்களை மக்களே உருவாக்குகிறார்கள்.
தங்களுக்கு ஒரு மதம் வேண்டும் என்று தாங்களே உணர்ந்தவர்களும், மக்களுக்கு மதம் தேவை என்று உணர்ந்தவர்களுமான மக்களே மதங்களை
உருவாக்குகிறார்கள்".
(அதே நூல்)

("Religions are founded by people who feel a need for religion 
themselves and have a feeling for the religious needs 
of the masses".)  

தொடர்ந்து எங்கல்ஸ் கூறுகிறார்.
" கோடிக்கணக்கான இதயங்களில் எதிரொலிக்கும்   
ஒரு இசை நரம்பை கிறிஸ்துவம் மீட்டுகிறது".
(அதே நூல்)

("Christianity struck a chord that was bound to echo in countless hearts.")

மக்களே மதங்களை உருவாக்குகிறார்கள் என்ற
எங்கல்சின் கருத்தால் கவரப்பட்ட ஈ எம் எஸ்,
வேதகால இனக்குழுச் சமூக மக்கள் உருவாக்கிய
மதத்தையும் நால்வகை வேதங்களையும் பற்றி
தமது வேதங்களின் நாடு என்ற நூலில்
குறிப்பிடுகிறார். ஈ எம் எஸ்சின் கருத்துக்களால்
கவரப்பட்ட ஞானி, நாகராஜன் ஆகியோர்
எங்கல்சை மேலும் படித்து, எங்கல்சிடம் இருந்து
தங்களின் மதம் பற்றிய கருத்துக்களை உருவாக்கிக்
கொண்டதாகக் கூறுகின்றனர்.

நாகராஜனின் ஆதரவாளர்கள் சிலர் என்னுடன்
இன்று காலை வாதிட்டனர். எங்கல்ஸ்
கிறிஸ்துவத்தைப் புகழ்வது போலவே நாகராஜன்
ஆழ்வார்களைப் புகழ்கிறார். இதில் எப்படித்
தவறு காண முடியும் என்றனர்.

எனவே மூல ஆசான்களின் மதம், கடவுள்
பற்றிய பார்வை எப்படிப்பட்டது என்பதை
நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஆகியோர்
கம்யூனிஸ்ட் கட்சியின் கடவுள் கொள்கை
இயங்கியல் பொருள்முதல்வாதமே என்று
உறுதிபடத் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்கள்
கூறும் பொருள்முதல்வாதம் என்பது, அவர்கள்
காலத்திய அறிவியலை பெருமளவு உள்வாங்கிக்
கொண்ட பொருள்முதல்வாதம் ஆகும்.

இதில் எத்தகைய சந்து பொந்தும் (loopholes) இல்லை.
அதே நேரத்தில் பொருள்முதல்வாத நாத்திகத்தை
முரட்டடியாக துப்பாக்கி முனையில் செயல்படுத்த
முடியாது, செயல்படுத்தக் கூடாது என்பதில்
அவர்கள் உறுதியாக இருந்தனர்.

"விக்கிரகங்களை உழவர்கள்தான் வைத்தனர்;
அவர்களே அவற்றைத் தூக்கி எறிவார்கள்;
அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும்"
என்று சொன்னார் மாவோ.

அல்பேனியா நாட்டில் அன்வர் ஹோக்சா
முரட்டடியாக பொது இடங்களில் வழிபாடு
செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றினார்.
இஸ்லாமியர்களைக் கொண்ட அந்த நாட்டில்
இது மக்களின்  வழிபாட்டு உரிமை  மறுப்பு
என்பதாகக் கருதப் பட்டது. மிகச் சரியான
நடவடிக்கை என்ற போதிலும், இது விரும்பிய
பயனை அளிக்கவில்லை.     

மூல ஆசான்கள் பொருள்முதல்வாத நாத்திகத்தைச்
செயல்படுத்துவதில், என்ன அணுகுமுறையை
மேற்கொள்வது என்பதில் மட்டுமே  சில சலுகைகளை
அளித்தனர். இது அணுகுமுறை சார்ந்த விஷயம்.

ஆக கொள்கையில் (நாத்திகத்தில்) 100 சதம்
கறார்த் தன்மை; அணுகுமுறையில் மட்டுமே
நெளிவு சுளிவு!
இதுதான் மூல ஆசான்களின் போதனை!

ஞானி நாகராஜன் இருவருக்கும் உள்ள பிரச்சினை
அணுகுமுறையில் உள்ள பிரச்சினை என்றால்,
அவர்கள் சொல்வதை அப்படியே நாம் ஏற்றுக்
கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு
அணுகுமுறையில் அல்ல, கொள்கையிலேயே
பிரச்சினை!

பொருள்முதல்வாதம் கூடவே கூடாது என்றோ
கடவுள் இருக்கிறார் என்றோ அவர்கள் வாதிடவில்லை.
கற்பனையாகவே இருந்தாலும் கூட, மனித
சமூகத்திற்கு கடவுள் தேவை என்கிறார்கள்.

பொருள்முதல்வாதம் மட்டுமே மார்க்சியம்
என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
மாறாக, சுமார் 70 சதம் பொருள்முதல்வாதமும்
30 சதம் கருத்துமுதல்வாதமும் கொண்ட ஒரு
கலவையை மார்க்சியம் அனுமதிக்க வேண்டும்
வேண்டும் என்கின்றனர். இதுதான் கான்டியம்.

ஆக, ஞானி நாகராஜன் இருவரின் கருத்துக்களை
எப்படி மதிப்பிடுவது? இதுவரையிலான எட்டுக்
கட்டுரைகளிலும் மதம் பற்றிய இவர்களின்
பார்வையை மட்டுமே பார்த்தோம். மற்ற
அம்சங்களிலும் இவர்களின் பார்வை எத்தகையது
என்பதை பரிசீலித்த பிறகே இவர்கள் குறித்து
ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும்.
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு: கருத்துமுதல்வாதம், மதம், கடவுள்
பற்றிய ஞானியின் பார்வை என்ற அம்சம்
இத்துடன் முடிகிறது. பிற விஷயங்கள் பற்றி
அடுத்த கட்டுரையில்)
********************************************************  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக