சனி, 30 ஜூன், 2018

சீன குணாம்சங்களுடன் கூடிய
சோசலிசம் என்பது மார்க்சிய நோக்கில் சரியா?
மூலதனமும் உபரி மதிப்பும் நாட்டுக்கு நாடு மாறுமா?
அப்படியானால் நாகராஜனின் கீழை மார்க்சியம் சரியா?
மார்க்சின் மூலதனம் நூல் சீனாவுக்குப் பொருந்தாதா?
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
சீனாவில் சோசலிசம் கட்டப் பட்டுள்ளது. அதை
சீன குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம் என்கிறது
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. சீனாவில் கட்டப்படும்
சோசலிசம் மார்க்சிய லெனினிய  வழியிலான
விஞ்ஞான சோசலிசத்தின் விளைபொருள் என்று
1978ல் டெங் சியோ பிங் அறிவித்தார்.

நல்லது. அப்படியானால், சீன குணாம்சங்களுடன்
கூடிய முதலாளித்துவம் சீனாவில் உள்ளதா?
மூலதனத்துக்கு சீன குணாம்சம் உண்டா?
இப்படிக் கேள்விகள் எழுகின்றன. சீனத்தன்மை
உள்ள சோசலிசம் இருக்கும்போது, சீனத்தன்மை
உள்ள முதலாளித்துவமும் இருக்க வேண்டும் அல்லவா?

மூலதனம் என்பது அனைத்தும் தழுவிய
பொதுத்தன்மை (universal) கொண்டது என்றார் மார்க்ஸ்.
மூலதனத்தின் தன்மை நாட்டுக்கு நாடு
வேறுபடுவதல்ல என்கிறார் மார்க்ஸ். தண்ணீர்
நிறமற்றது மணமற்றது (colourless and odourless)
என்பதைப் போல, மூலதனமும் உபரிமதிப்பும்
எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை என்றார்
மார்க்ஸ். எனவேதான் மூலதனத்தை எதிர்த்த
போரில், "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்"
என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

மார்க்சின் காலத்தில் ஏகாதிபத்தியம் இல்லை.
அதாவது முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக
வளர்ச்சி முடிந்திருக்கவில்லை. ஆனால் லெனின்
காலத்தில் ஏகாதிபத்தியம் தோன்றி விட்டது.
இந்த உண்மையைக் கண்டறிந்து உலகுக்கு
அறிவித்தார் லெனின்.

ஏகாதிபத்தியம் என்றாலே தனியொரு
நாட்டோடு முடங்கி விடுவதல்ல என்பதும்,
அது உலகளாவியது என்பதும் சொல்லாமலே
விளங்கும். ஆக முதலாளித்துவம்
ஏகாதிபத்தியம் இவ்விரண்டுமே மூலதனத்தின்
விளைபொருட்கள் என்பதும் அனைத்தும் தழுவிய
பொதுத்தன்மை கொண்டவை என்பதும்   
எல்லோரும் அறிந்த அவற்றின் தன்மைகளே.

உண்மை இப்படியிருக்க, சீன குணாம்சங்களுடன்
கூடிய சோசலிசம் என்பது மார்க்சிய
லெனினியத்துடன் ஒத்திசைவாக இருக்கவில்லையே.
சரி, முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களைக்
கேட்டால், சீன முதலாளித்துவத்துக்கு என்று
பிற முதலாளித்துவத்தில் இருந்து வேறுபட்ட
தனித்த பண்புகள் இருப்பதாக அவர்கள்
ஒத்துக் கொள்ளவில்லை.

ஆக முதலாளித்துவ முகாம், மார்க்சிய முகாம்
இரண்டுமே ஒத்துக் கொள்ளாத நிலையில்,
சீன குணாம்சங்கள் கொண்ட சோசலிசம்
என்ற ஒன்று இருக்க முடியுமா?

எஸ் என் நாகராசன் போன்றோர் கீழை மார்க்சியம்,
மேலை மார்க்சியம் என்று மார்க்சியத்தை
இரண்டாகப் பிரிகின்றனர். இப்படிப் பிரிப்பதற்கான
தத்துவார்த்த வேர்கள் எங்கிருக்கின்றன என்று
பார்த்தால், அவை சீனாவில் இருக்கின்றன
என்பது தெரியும்.

"சீனத்தின் தலைவர் நமது தலைவர். சீனத்தின்
பாதை நமது பாதை" என்பது 1970களில்
நக்சல்பாரி இயக்கம் வெடித்துக் கிளம்பியபோது
கட்சி (CPI ML) முன்வைத்த ஒரு முழக்கம். இந்த 
முழக்கம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தோடு
ஒத்திசைவற்ற (incompatible) ஒரு முழக்கம்.

லெனின் அல்ல மாவோவே இந்தியர்களின்
தலைவர் என்றும், ரஷ்ய பாணியிலான புரட்சி அல்ல,
சீனப் பாணியிலான புரட்சியே இந்தியாவில்
நடத்த முடியும் என்றும் இந்த முழக்கத்தின்
மூலம் அணிகள் புரிந்து கொண்டனர்.

ஏகாதிபத்திய யுகம் முழுமைக்குமான மார்க்சியம்
என்பது லெனினியமே என்ற கோட்பாடு விஸ்தரிக்கப்
பட்டு மாவோ சிந்தனையே கீழை
நாடுகளின் புரட்சிக்கு வழிகாட்டி என்ற கோட்பாடு
உருவானது. இது மார்க்சிய வரலாற்றில் ஒரு
முக்கியமான திருப்பம் ஆகும். பின்னாளில்
மாவோ சிந்தனை (Mao thought) என்பது மாவோயிசம்
(Maoism) என்று வழங்கப்படத் தொடங்கி  விட்டது.

மாவோ சிந்தனை, மாவோயிசம்  என்ற இரண்டுக்கும்
இடையிலான வேறுபாடு குறித்து விவாதிப்பதில்
இக்கட்டுரை அக்கறை கொள்ளவில்லை.
மாவோயிசம் என்பது பொது நீரோட்ட
மார்க்சியத்தில் இருந்து வேறுபட்டதாகவும்
தனித்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது
என்பதைச் சுட்டிக் காட்ட மட்டுமே இக்கட்டுரை
விரும்புகிறது.

மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் ஆகியோரை 
வெறும் குறியீட்டுத் தலைவர்களாகவும் (symbolic leaders)
மாவோவை மட்டுமே நடைமுறைக்கான
செயல்பாட்டுத் தலைவராகவும் கருதுகிற
மனப்பான்மை 1970களில் மார்க்சிய லெனினியக்
காட்சிகளில் செயல்பட்ட நக்சல்பாரித் தோழர்களின்
மனநிலையாக இருந்தது என்பதை இங்கு
பதிவு செய்ய விரும்புகிறேன்.

இதன் மூலம் நான் யாப்புறுத்த விரும்புவது
என்னவெனில், பொது நீரோட்ட மார்க்சியமான
மார்க்சியம்-லெனினியம் என்பது புரட்சிக்கான
மிகவும் பொத்தாம் பொதுவான
வழிகாட்டுதல்களைக் கொண்டது (too general)
என்பதும், மாவோ சிந்தனை மட்டுமே இந்தியா
சீனா போன்ற கீழ்த்திசை நாடுகளுக்கான
குறிப்பான, துல்லியமான, நடைமுறைப்
படுத்துவதற்கு ஏற்ற (sharp specific and practicable)
வழிகாட்டுதல்களைக் கொண்டது என்பதுமான
புரிதல் அன்று 1970களில் மா-லெ  இயக்கத்தில்
வேலைசெய்த தோழர்களுக்கு இருந்தது
என்பதையே.

இக்கட்டுரை எந்தவொரு மார்க்சிய லெனினிய
அமைப்பையும் விமர்சிப்பதாக எவரும் கருதி
வீடாக கூடாது. அப்படி எவராவது கருதினால்
அது பிறழ்புரிதல் ஆகிவிடும்.

ஆக, கீழை மார்க்சியம் என்ற எஸ் என் நாகராஜனின்
வகைமை (categorisation) மேற்கூறிய அனைத்திலும் 
தனது வேர்களைக் கொண்டுள்ளது என்பதையும்
நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
*******************************************************          

         
      

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக