ஞாயிறு, 24 ஜூன், 2018

(6) கடந்த 40 ஆண்டாக மார்க்சியத்தை விமர்சிக்கும்
ஞானியை எதிர்க்க முடியாமல், வாயில்
கொழுக்கட்டையை அடைத்துக்கொண்ட
ஆண்மையற்ற பேடிகள்!
ஞானியின் கருத்தும் எமது மறுப்பும்! கட்டுரை-6.
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------
(மதம் கடவுள் பற்றிய ஞானியின் பார்வை
மீதான விமர்சனம்)

தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப்
பிரசண்டன் என்று திருநெல்வேலிப் பகுதியில்
ஒரு பழமொழி உண்டு. கம்யூனிஸ்ட் கட்சிகள்
தட்டிக் கேட்காததால் ஞானியும் எஸ் என்
நாகராஜனும் சண்டப் பிரசண்டன் ஆகி விட்டனர்.

I think Gnani is an octogenarian and Nagarajan a nonagenarian.
கடந்த 40, 50 ஆண்டுகளாகவே நாகராஜனும்
ஞானியும் பொதுவான மார்க்சிய நீரோட்டத்தில்
இருந்து விலகி, தங்களின் தனித்துவமான
கண்ணோட்டத்தில் இருந்து மார்க்சியத்துக்கு
விளக்கம் அளித்து வந்தனர்; கம்யூனிஸ்ட் கட்சித்
தலைமையால் தங்களின் அணிகளுக்குச்
சொல்லப்படாத, சொல்லப்படாமல் மறைக்கப்பட்ட
ஏடன் தோட்டத்து ஆப்பிள்களை தங்களின்
வாசகர்களுக்கு உண்ணக் கொடுத்தனர்
எனவே இவர்களின் பிரகாரங்களில் எப்போதுமே
ஜனத்திரளைக் காண முடிந்தது.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையோ அணிகளோ
இவ்விருவரின் கருத்துக்களுக்கு காத்திரமான
எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை. இதனால்
தங்கு தடையின்றி இவ்விருவரின் கருத்துக்கள்
அறிவாளிப் பகுதியினரிடம் சென்று சேர்ந்தன.
மார்க்சிய அறிவுப்புலத்தில் 40, 50 ஆண்டு காலமாக
இவர்களின் ஆதிக்கம்  நீடித்து வருவதோடு
நிலைபேறு உடையதாகவும் ஆகி விட்டது.

இளைதாக முள்மரம் கொள்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து.

ஆக 50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சித்
தலைமைகள் செய்யத் தவறிய பணியை இன்று
நியூட்டன் அறிவியல் மன்றம் செய்கிறது.
ஞானியையும் நாகராஜனையும் ரோட்டில்
இழுத்தப் போட்டு அடிக்கிறது நியூட்டன்
அறிவியல் மன்றம். கம்யூனிஸ்ட் போர்வையில்
இருக்கும் பேடிப்பயல்கள் பார்த்தும் பாராமல்
போவதைப் பற்றி எமக்குக் கவலை இல்லை. நிற்க.

மதம் பற்றி ஞானி கூறுவது என்ன?
-------------------------------------------------------------
உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை
மதம் என்பது மக்களுக்கு எதிரான, ஒற்றைத்
தன்மையான நிறுவனம் என்பது மார்க்சியப்
பார்வை.

மதம் என்பது இரண்டு தன்மைகளின்
ஒன்றிணைப்பு (an integrated binary). மதத்தில்
வெளிப்புறம், உட்புறம் (inner and outer) என்று
இரண்டு கூறுகள் உண்டு. வெளிப்புறப் பகுதியில்
மதகுருக்கள், சடங்குகள், கட்டுப்பாடுகள்
ஆகியவை உள்ளன. இவை மக்களுக்கு
எதிரானவை. இவற்றை எதிர்க்க வேண்டும்

அதேநேரத்தில் மதத்தின் உட்புறப் பகுதி மக்களுக்குத்
தேவையானது. அதில் கடவுள் இருக்கிறார்.
அது துயரத்தில் மூழ்கித் தத்தளிக்கும்
மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது.
எனவே மதத்தின் இந்த உட்புறப்பகுதியை எதிர்க்க வேண்டியதில்லை. இதுவே மதம் கடவுள் பற்றிய
ஞானி நாகராஜன் ஆகிய இருவரின் பார்வை.

ஞானி தரப்பு தரும் விளக்கம்!
------------------------------------------------------
வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள் எல்லாம்
என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு
இளைப்பாறுதல் தருவேன் என்கிறார் கடவுள்.
கடவுளிடம் தஞ்சமடைந்து ஆறுதல்  பெறுகிறார்கள்
மக்கள்.

கர்த்தர் என் மேய்ப்பனாய் இருக்கிறார்; நான்
தாழ்ச்சி அடையேன் என்ற பழைய ஏற்பாட்டின்
வாசகம் என்ன சொல்கிறது? கடவுள் காப்பார்
என்கிற எண்ணம் மனிதனுக்கு ஒரு நம்பிக்கையைத்
தருகிறது.

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு!
இந்த வாசகம் என்ன சொல்கிறது? இதுவும் ஒரு
நம்பிக்கையைத் தருகிறது அல்லவா?

இப்படி மனிதனுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும்
தரும் கடவுளை, மதத்தை ஏன் எதிர்க்க வேண்டும்
என்கிறார் ஞானி.

ஊரிலேன் காணியில்லை உறவுமற் றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே.
......தொண்டரடிப் பொடியாழ்வார் (திருமாலை).......

ஏதும் இல்லாத பாவியாகிப் போய்விட்ட எனக்கு
உன்னை விட்டால் யார் என்று அரங்கனிடம்
சரண் அடையும் ஒரு வைணவ பக்தனைக்
காட்டுகிறார் ஞானி இந்தப் பாடல் மூலம்.

இஸ்லாமிய மார்க்கத்தலும் அல்லா (கடவுள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகக் காட்டப் படுகிறான்.
(In the name of Allah the most benevolent and merciful).

பெற்றோர்கள் வெளியே போயிருக்கும் நிலையில்
வீட்டில் தனியே இருக்க நேரும் ஒரு இளம்பெண்
வீட்டுக் கதவில் ஒரு முருகன் படத்தை ஒட்டி
வைத்துக் கொள்கிறாள். தீங்கு எதுவும் நேராமல்
முருகன் தன்னைக் காப்பாற்றுவான் என்பது
அவளின் நம்பிக்கை.

ஆக, மேற்கூறிய பல எடுத்துக் காட்டுகளைக்கூறி
ஆறுதலும் நம்பிக்கையும் தரும் கடவுளை,
மதத்தை அடித்து நொறுக்க வேண்டிய தேவை
என்ன என்கிறார் ஞானி.

கடவுள் இருக்கிறார் என்று ஞானியோ நாகராஜனோ
வாதிடவில்லை. கடவுள் ஒரு கற்பனையாகவே
இருந்து விட்டுப் போகட்டும். அதனால் என்ன?
மனித வாழ்க்கைக்குக் கற்பனையும்
தேவைதானே என்கிறார்கள் இருவரும்.

மார்க்சின் மதம் பற்றிய மேற்கோள்!
--------------------------------------------------------------
Religion is the sigh of the oppressed creature, the heart of a 
heartless world, and the soul of soulless conditions. It is the 
opium of the people. -----Karl Marx.
ஹெக்கல் எழுதிய உரிமையின் தத்துவம் என்ற
நூல் மீதான விமர்சனத்தின் முன்னுரையில் 
காரல் மார்ஸ் இந்த மேற்கோளைக் கூறுகிறார்.
மார்க்ஸ் இதை எழுதியது 1843ல். அப்போது 
மார்க்சுக்கு வயது 25. 

மார்க்சின் பிரசித்தி பெற்ற இந்த மேற்கோளைக்  
கொண்டு, தமது தரப்புக்கு வலு சேர்க்கிறார் ஞானி.
கடவுளுக்கும் மதத்துக்கும் ஒரு ஆக்கபூர்வமான 
பாத்திரம் இருப்பதை மார்க்சே ஒப்புக் 
கொண்டுள்ளார் என்கிறார் ஞானி.

"மதம் என்பது இதயமற்ற உலகில் ஒரு இதயம்;
அது ஒடுக்கப் பட்டவர்களின் நிம்மதிப் பெருமூச்சு;
அது வாழ்வு மறுக்கப் பட்டவர்களுக்கான வாழ்க்கை. 
அது கடுமையான வலியை மரத்துப் போகச் 
செய்யும் ஒரு மரப்பு மருந்து."

(மதம் பற்றிய மார்க்சின் மேற்கோள்; ஆங்கிலத்தில் 
இருந்து தமிழாக்கம் இக்கட்டுரை ஆசிரியர்).
மார்க்சின் மேற்கோளுக்கு இது மட்டுமே சரியான 
மொழிபெயர்ப்பு.

ஆக ஞானி மார்க்சின் மேற்கோளில் அடைக்கலம் 
தேடுகிறார். மார்க்சே கூறிவிட்ட படியால், மதத்தை 
அதாவது மதத்தின் இந்த உட்புறப் பகுதியை 
எதிர்க்கத் தேவையில்லை என்கிறார் ஞானி.

ஞானியின் இந்தக் கருத்து தத்துவார்த்த ரீதியில் 
இன்று வரை சரியாக மறுக்கப் படவில்லை.
இதுவே உண்மை.

ஞானிக்கு நியூட்டன் அறிவியல் மன்றம் தரும் 
மறுப்பை அடுத்த கட்டுரையில் விரிவாகக் 
காணலாம். எமது பதிலைப் புரிந்து கொள்ள 
வேண்டுமெனில், மேற்கூறிய மேற்கோள் அடங்கிய 
கட்டுரையை வாசகர்கள் நன்றாகப் படித்து 
விட வேண்டும். அதைப் படிக்காமல் எமது 
பதிலை விளங்கிக் கொள்ள முடியாது.
நீங்கள் படிக்க வேண்டிய கட்டுரை:
A contribution to the critique of Hegel's Philosophy of Right:
Introduction. Written by Marx in 1843.

வாசகர்களிடம் இருந்து காத்திரமான கருத்துக்கள் 
வரவேற்கப் படுகின்றன.
-----------------------------------------------------------------------------
தொடரும் 
***************************************************************         




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக