ஞாயிறு, 1 மே, 2016

அறிவியலின் அத்வைதமும்
வரலாற்றின் துவைதமும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
எத்தியோப்பிய நாட்டு மாணவன் ஆப்பிரிக்க
வரலாற்றைப் படிப்பான். தமிழ்நாட்டு மாணவன்
அதைப் படிக்க மாட்டான்.

அரேபிய மாணவன் அரேபியப் போர்கள் பற்றிப்
படிப்பான். அரேபிய தீபகற்பத்தின் பூகோளம்
பற்றிப் படிப்பான். அரேபியாவில் மாநில முதல்வன்
(state first) தகுதியில் தேறிய ஒரு மாணவனிடம் 
தக்காணப் பீடபூமி ஒரு மழைமறைவுப்
பிரதேசமா என்று கேட்டால், அவனுக்கு விடை
சொல்லத் தெரியாது. ஏனெனில் அவன் படித்த
பாடத்திட்டத்தில், தக்காணப் பீடபூமி இல்லை.

நேத்தாஜி சுபாஸ் போஸ் பற்றி, பகத்சிங் பற்றி
இந்திய மாணவனுக்குத் தெரியும். ஆனால்
சுவிட்சர்லாந்து மாணவனுக்குத் தெரியாது.

தேவாரம் திருவாசகத்தில் ஏதாவது ஒரு பாடலைச்
சொல்லச் சொன்னால் உத்தரப் பிரதேச மாணவன்
சொல்ல மாட்டான். அதே போல், துளசி ராமாயணத்தில்
ஒரு பாடலைக் கேட்டால் தமிழ் மாணவனுக்கு
விடை தெரியாது.

என்ன காரணம்? மாணவர்கள் படித்த பாடத்திட்டம்
வேறுபட்டது. தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலாவது
துளசி ராமாயணம் பாடமாக இருக்கிறதா? இல்லை.
அதுபோலவே, உத்திரப் பிரதேசத்தில் கம்ப ராமாயணம்
பாடமாக இல்லை/

இது போலவே, 1) வரலாறு 2)பூகோளம் 3) மொழிப்பாடம்
ஆகியவை மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு
வேறுபடும். எனவே பாடத்திட்டங்களும் வேறுபடும்.
இதனால், உத்திரப் பிரதேசத்தின் தலை மாணாக்கனுக்கு
தேவாரப் பாட்டு ஒன்று கூடத் தெரியாது. தமிழ்நாட்டின்
state first மாணவனுக்கு துளசிதாசர் பற்றியோ,
பவபூதி பற்றியோ ஒரு இழவும் தெரியாது.

ஆனால் அறிவியல் அப்படியல்ல, கணிதம் அப்படியல்ல.
நார்வே நாட்டின் பத்தாம் வகுப்பு மாணவனும்,
நாங்குநேரி அரசுப் பள்ளியின் பத்தாம் வகுப்பு
மாணவனும் இருபடிச் சமன்பாடு (quadratic equation)
பற்றிப் படித்து இருப்பார்கள். திரிகோணமிதி
(trigonometry) பற்றிப் படித்து இருப்பார்கள்.

இந்தக் கணக்கைப் பாருங்கள்:
Differentiate with respect to x: cos x cos 2x cos 3x.

அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை,
அரேபியா முதல் அறவக்குறிச்சி வரை,
பாரிஸ் முதல் பாளையங்கோட்டை  வரை
எல்லா மாணவனும் இந்தக் கணக்கைச் செய்வான்.
செய்து இருப்பான். விடை தெரியும்.

ஆக்சிஜன் அணுவின் உட்கருவில் எத்தனை
புரோட்டான்கள் இருக்கின்றன என்று சிக்காகோ
மாணவனைக் கேட்டாலும் சரி, சிந்தாதிரிப்பேட்டை
மாணவனைக் கேட்டாலும் சரி ஒரே விடைதான்
சொல்வான்.

Zn+ H2SO4=>ZnSO4+ H2 என்ற வேதியியல் சமன்பாடு
எகிப்திலும் சரி, எருக்கஞ்சேரியிலும் சரி ஒன்றுதான்.

ஏனெனில், அறிவியல் பிரபஞ்சத் தன்மை உடையது.
இடத்துக்கு இடம் மாறாதது. வேறு வேறு சிலபஸ்
என்ற கூப்பாடு அறிவியலுக்குப் பொருந்தாது.

CBSE பாடத்திட்டத்திற்கும் TN state board பாடத்
திட்டத்திற்கும் பாடங்களைப் பொறுத்து எந்த
வேறுபாடும் கிடையாது. பின் வேறுபாடு எதில்?
1)knowledge 2) understanding 3)application 4)skill ஆகிய நான்கு
விதங்களில் CBSE கேள்வித்தாள் அமையும்.
TN state boardஇல் knowledge மட்டும்தான்.

தமிழன் முட்டாளாகவே இருக்க வேண்டும். அப்படி
இருந்தால்தான் அவனை ஏய்த்துப் பிழைக்க
முடியும் என்பது தமிழக அரசியல்வாதிகளின்
நோக்கம். எனவே ஒருநாளும் பாடத்திட்டத்தை
மேம்படுத்த மாட்டார்கள்.

ஆக, கட்டுரையின் தலைப்பு கடவுள் அருள்
இல்லாமலேயே இப்போது புரிந்திருக்கும்.
****************************************************************    



 



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக