புதன், 29 ஜூலை, 2015

அப்துல் கலாமை ஏன் எதிர்க்க வேண்டும்?
------------------------------------------------------------------------
1) ஜவர்கர்லால் நேரு காலம் முதல் இன்று மோடி காலம் வரை
முந்திரா ஊழல் முதல் வியாபம் ஊழல் வரை எத்தனையோ
ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால், எந்த ஒரு ஊழலிலும்
அப்துல் கலாம் பெயர் அடிபடவில்லை. ஊழல் செய்யக் கூடத்
துப்பில்லாத கலாமை எப்படி ஆதரிக்க முடியும்?
**
2) இவர் பேரில் எந்த சொத்தும் இல்லை. சொத்துக் குவிக்கத்
தெரியவில்லை. தமிழ்நாட்டில் எவ்வளவோ புறம்போக்கு
இடங்கள் இருக்கின்றன. ஒரு செண்டு நிலத்தைக் கூட
வளைத்துப் போடத் தெரியவில்லை. இவரெல்லாம் என்ன
தலைவர்?
**
3) ஏதேனும் ஒரு பாலியல் விவகாரத்திலாவது இவர் பேர்
அடிபட்டதா! கல்யாணம் பண்ணவில்லை, போகட்டும்!
ஒரு வைப்பாட்டியாவது வைத்துக் கொள்ளக் கூடாதா?
என்.டி.திவாரி முதல் சங்கராச்சாரியார் வரை எத்தனை
எத்தனை காம லீலைகள்! எது ஒன்றிலும் இவருக்குப்
பங்கில்லையே! இவரெல்லாம் என்னய்யா மனுஷன்?
**
4) ஒய்வு பெற்றதும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து
வெளியேறும்போது, இரண்டே இரண்டு சூட்கேஸ்களில்
தமது துணிகளையும் புத்தகங்களையும் மட்டுமே எடுத்து
வந்தாராம். தமக்கு வந்த பரிசுப் பொருட்களை எல்லாம்
அங்கேயே விட்டு விட்டு வந்தாராம். இதெல்லாம்
நியாயாமா? ஜனாதிபதி மாளிகையை சூறையாடி
இருக்க வேண்டாமா?
**
5) தனது உறவினர்கள் டெல்லிக்கு வந்தபோது, அவர்களுக்கு
டெல்லியைச் சுற்றிக் காட்ட, அரசு வாகனத்தைப் பயன்படுத்த
வில்லை. அவர்களின் சாப்பாட்டுச் செலவுக்குக் கூட,
தன் சம்பளப் பணத்தில் இருந்து கொடுத்தாராம். இவர்தான்
கொள்ளை அடிக்கவில்லை. சொந்தக்காரனையாவது கொள்ளை
அடிக்க விட வேண்டாமா?
**
6) எல்லோரும் அம்மணமாக இருக்கும் ஊரில், இவர்
மட்டும் கோவணம் கட்டிக் கொண்டு திரிவது நியாயமா?
**
7) ஆகவே, நான் கலாமை எதிர்க்கிறேன்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக