புதன், 8 ஜூலை, 2015


நவீன அறிவியலின் வளர்ச்சி கலவி குறித்த பல்வேறு
சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுள்ளது. பாலியல் நோய்களுக்கான
மருத்துவம், கருத்தடை, பாதுகாப்பான கருச்சிதைவு ஆகியவை
இன்று சாத்தியம் ஆகியுள்ளன. எனினும், இது எவ்விதத்திலும்
கட்டுப்பாடற்ற கலவிக்கான உரிமத்தை சமூகத்துக்கு
வழங்கி விடவில்லை.
**
 ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் மற்றும் இந்தியச் சூழலில்,
கலவி மட்டுமே ஒரே கேளிக்கையாக இருந்தது. Procreation is the only
recreation என்ற பழமொழி இதைச் சுட்டுகிறது. பேரளவிலான கலவி,
அதீதமான கலவி என்பது சமூகத்தின் இயல்பாக இருந்தது. மின்சாரம்
கூட மக்களிடம் பரவலாகச் சென்று சேராத அக்காலத்தில்,
அதீதமான கலவிக்கான புறச்சூழ்நிலை (objective) சமூகத்தில்
இயல்பாக இருந்தது. அதீதமான (excessive) கலவி இயல்பானதாக
இருந்த இக்காலக் கட்டத்தில் கூட, கலவி குறித்த சமூகம் விதித்த
தடைகளும் கட்டுப்பாடுகளும் கறாராகப் பின்பற்றப் பட்டு வந்தன.  
**
சமகால உலகில் அதீதக் கலவிக்கான புறச்சூழ்நிலை எங்கும்
நிலவவில்லை. இந்நிலையில் கட்டுப்பாடற்ற கலவிக்கான
ஏக்கம் என்பது முற்றிலும் அகநிலை விருப்பமே ( purely a
subjective wish). அதாவது இது எவ்விதத்திலும் சமூகம் சார்ந்து
முன் எழுகின்ற ஒரு தேவை அல்ல. ஒட்டு மொத்த
சமூகத்திலும் வியாபித்து நிற்கிற ஒரு வேட்கையும் அல்ல.
எனவே எந்நிலையிலும், சமூகத்தின் இயல்பான இயக்கப்
போக்கில் இருந்து எழாத, இந்தக் கட்டுப்பாடற்ற கலவிக்கான
ஏக்கத்தை சமூகம் அங்கீகரிக்கத் தேவையில்லை.
**
நிலப்பிரபுத்துவ காலச் சமூகத்தின் அறம் சார்ந்த கோட்பாடு
களான, புத்தர் கூறிய பிழையுறு காமம் தவிர்த்தல், வள்ளுவர்
கூறிய பிறனில் விழையாமை ஆகியவை, சமூகத்தின்
இயக்கப் போக்கில் சேதாரம் அடைந்துள்ளன. ஒருவனுக்கு
ஒருத்தி என்ற கோட்பாடு கூட, பெருமளவு நீர்த்துப் போய்
உள்ளது.  சமூகமானது தொடர்ந்து இயங்கிக் கொண்டும்
மாறிக் கொண்டும் இருப்பதால், மேற்கூறிய மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்து வருகின்றன. இந்த மாற்றங்கள்
இயல்பானவை. செயற்கையாக வலிந்து திணிக்கப்
பட்டவை அல்ல.
**
ஆனால், எந்த இரண்டு பேரும், அது அண்ணன்-தங்கையாக
இருந்தாலும் சரி, பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு
கொள்ளலாம் என்ற கோட்பாடு ஏற்கத் தக்கது அல்ல.
இந்தக் கோட்பாடு சமூகத்தின் இயல்பான இயக்கப் போக்கின்
ஊடாகப் பிறந்த கோட்பாடு அல்ல. பின்நவீனத்துவம்
செயற்கையாகவும் வலிந்தும் திணிக்க முயலும் ஒரு
கோட்பாடு. அண்ணன்-தங்கை உறவு கொள்ள வேண்டிய
சமூக அவசியம் எந்தச் சமூகத்திலும் இன்று இல்லை
என்னும் நிலையில், பின்நவீனத்துவம் இதற்காகக் குரல்
எழுப்ப வேண்டிய அவசியம் என்ன?
**
முழுமையான பாலுறவு சுதந்திரம், தடையற்ற பாலுறவு
சுதந்திரம் ஆகியவற்றுக்கான புறநிலை அவசியம் எதுவும்
சமகால சமூகத்தில் இல்லை. பல்லாயிரம் ஆண்டுக்கால
அறிவியல் வளர்ச்சியையும் சமூக மாற்றத்தையும்
சுலபமாக ஒதுக்கி விட்டு, ஆதிக் காட்டுமிராண்டி சமூகத்தில்
நிலவி வந்த கட்டுப்பாடற்ற கலவிக்காகக் கோரிக்கை
விடுப்பது ஏற்புடைத்து அல்ல.
              
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக