ஞாயிறு, 5 ஜூலை, 2015

காதலா உயிரா எதைக் காப்பாற்ற வேண்டும்?
------------------------------------------------------------------------
காதல் அடைதல் உயிர் இயற்கை என்கிறார் பாரதியார்.
நன்கு கவனிக்கவும்; மானுட இயற்கை என்று சொல்லவில்லை, 
உயிர் இயற்கை என்கிறார். காதல் கொள்வது எல்லா 
உயிர் இனங்களுக்கும் இயற்கையான, இயல்பான ஒன்று 
என்கிறார் பாரதி.
**
நீர் வேட்கை மிகுந்த இணைமான்கள் சிறிது நீரைக் கண்ட
போது, ஆண்மான் குடிக்கட்டும் என்று பெண்மானும், 
பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண்மானும், இரண்டுமே 
குடிக்காமல் இருந்த அன்புக் காட்சியை தமிழ் இலக்கியத்தில் 
காணலாம். ஆக, காதல் அடைதல் உயிர் இயற்கை என்பது 
இப்பாடலால் புலப்படுகிறது.
**
பாரதிக்கு தெய்வங்கள் மீதே காதல் வந்தது.
"பின்னோர் ராவினிலே பெண்மை அழகொன்று 
வந்தது கண்முன்பு;    
கன்னி வடிவமென்றே களிகொண்டு 
சற்றே அருகில் சென்று பார்க்கையிலே...
அன்னை வடிவமடா 
இவள் ஆதிபராசக்தி தேவியடா 
இவள் இன்னருள் வேண்டுமடா 
பின்பு யாவும் உலகில் வசப்பட்டுப் போகுமடா"
**
ஆக, காதல் என்று வந்து விட்டால், அது யார் மீது 
வேண்டுமானாலும் வரும். திருமணமான பெண் மீது கூட 
ஓர் இளைஞனுக்குக் காதல் வரலாம். And vice versa.
(மேலை நாடுகளில் ஆணுக்கும் ஆணுக்கும் அதுபோலப் 
பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் ஓரினக் காதல் 
குறித்து இக்கட்டுரை பேசவில்லை)
**
Love is blind. காதலுக்குக் கண்ணில்லைதான். அதனால்தான் 
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒவ்வொரு சமூகமும் (society) 
காதலுக்குச் சில வரம்புகளை ஏற்படுத்துகிறது. இந்த 
வரம்புகள் அவ்வப்போது மீறப் படுகின்றன. இந்த மீறல்கள் 
சிலபோது சகித்துக் கொள்ளப் படுகின்றன; சிலபோது 
தண்டிக்கப் படுகின்றன. உயிர்க்கொலை அதிகபட்சத்
தண்டனையாக இருக்கிறது.
**
இளைஞர்களும் இளம்பெண்களும் காதலிக்கும்போது 
சமூகத்தின் வரம்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதன் பொருள் வரம்பு மீறக்கூடாது என்பதல்ல. வரம்பு 
மீறும்போது, உயிரிழப்பு நிகழ்ந்து விடாமல் எச்சரிக்கையாக 
இருக்க வேண்டும்.
**
காதலை விட, உயிர் மேலானது. உயிரை விடக் காதலே 
மேன்மையானது என்று நினைப்பவன் மூடன்.
காதலிப்பது வாழ்வதற்கே தவிர, சாவதற்கு அல்ல.
**
சமகால இளைஞர்கள் அனைவரும் குட்டி முதலாளித்துவ 
மனப்பான்மை கொண்டவர்களே. புரட்சிகர மார்க்சிய 
லெனினிய இயக்கம் தவிர, தமிழ்நாட்டில் செயல்படும் 
இயக்கங்கள் அமைப்புகள் யாவும் குட்டி முதலாளித்துவ 
இயக்கங்களே. எனவே, அனேகமாக நூறு சதம் 
இளைஞர்களும் குட்டி முதலாளித்துவச் சிந்தனைப் போக்கைக் கொண்டவர்களே. புரட்சிகர இயக்கத்தில் சிலகாலம் 
பணியாற்றிய பிறகுதான், குட்டி முதலாளித்துவ 
மனநிலையை விரட்டி அடிக்க முடியும்.
**
தான் கண்டிப்பாக ஒரு பெண்ணால் காதலிக்கப் பட்டே 
ஆக வேண்டும் என்ற மனநிலை குட்டிமுதலாளித்துவ 
இளைஞர்களை ஆட்டிப் படைக்கிறது. காதலிக்கப் 
படாவிட்டால் வாழ்வே பாழ் என்ற மனநிலை உச்சியில் 
ஏறுகிறது. ஒருதலைக் காதல்கள், காதல் தோல்விகள்,
விரக்தி தாடிகள், தற்கொலைகள், கொலைகள் என்று 
வாழ்க்கை பலவாறாகச் சிதைந்து போகிறது.
**
காதல் மட்டுமல்ல, வாழ்க்கையை அர்த்தபுஷ்டி உள்ளதாக 
ஆக்க, நிறைய வழிகள் உள்ளன; நிறைய வாய்ப்புகள் 
உள்ளன. அவற்றின் மீது இளைஞர்கள் கருத்துச் 
செலுத்த வேண்டும். மிகச் சுலபமாக உயிரை இழந்து 
விடக் கூடாது.
****************************************************************** 

     


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக