வெள்ளி, 27 மார்ச், 2015

(3) கலைஞரின் ராமானுஜர் திரைக்காவியம்! 
------------------------------------------------------------------------
"என்னைக் கேட்டால் நான் முதலியார் என்று 
சொல்லுவேன்; கருணாநிதியைக் கேட்டால் 
அவர் என்ன சொல்லுவார்?--நாவலர் நெடுஞ்செழியன்.
------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------- 
சமய ஆசான்களில் ஆதி சங்கரரே மிகப் பெரிதும் 
அறியப் பட்டவர். அதற்கு அடுத்த நிலையில்தான் 
ராமானுஜர் வருகிறார். தமிழ்ச்  சூழலிலும்கூட,
ராமானுஜரை அறிந்தவர்கள் குறைவு. அவ்வாறு 
அறிந்தவர்களிலும் பலர், ராமானுஜரின் சாதி ஒழிப்புக் 
கருத்துகளை விரும்பாமல், அவரை மூடி மறைப்பவர்களே.
**
வைணவத்துக்கு அப்பால் ராமானுஜர் பற்றி அறிந்தோர் 
மிக மிகக் குறைவு. விரல் விட்டே எண்ணி விடலாம்.
அவருள் தலைமை இடத்தில் கலைஞர் திகழ்கிறார்.
அடுத்த இடத்தில் இக்கட்டுரை ஆசிரியர் மிகுந்த 
தன்னடக்கத்துடன் நிற்கிறார். இஃது தற்பெருமை அல்லவா 
என்று எவரும் எண்ணிடத் தேவையில்லை.
"தன்னுடை ஆற்றல் உணரார் இடையில் 
 தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே"
என்ற நன்னூல் இலக்கணம் அறிந்தோர் அவ்வாறு 
எண்ண மாட்டார்.
**
கலைஞரின் குடும்பம் அளவில் பெரியது; பெரிதினும் 
பெரியது.பெண் கொடுத்தல், பெண் எடுத்தல் என,
தமிழகத்தின் அனைத்துச் சாதிகளையும் சார்ந்தோர் 
கலைஞரின் குடும்ப உறுப்பினர்களாய் உள்ளனர்.
இவ்வாறு சாதி என்பதை ரோமத்துக்குச் சமமாகக் 
கருதி, சாதி ஒழிப்பைத் தம் சொந்த வாழ்க்கையில் 
நடைமுறைப் படுத்தி, போற்றத்தக்க முன்மாதிரியாய் 
வாழ்ந்து காட்டுபவர் கலைஞர். இதைப் பாராட்ட 
மறுப்பவன் எவனும் சாதி வெறியனே.
**
அகமண முறையை ஒழித்தால்தான் சாதி ஒழியும் 
என்று வீராவேசம் கொள்ளும் ஒரு பயலும், 
அகமண  முறையை ஒழித்துக் கட்டி, கலங்கரை 
விளக்கமாக நின்று கொண்டிருக்கும் கலைஞரை 
சான்றாதாரமாகச் சுட்ட முன்வரவில்லையே, ஏன்?
சாதிக் காழ்ப்பேறிய சின்னத்தனம்தானே காரணம்!
**
அண்ணாவின் மறைவுக்குப் பின், கலைஞர் முதல்வர் 
ஆகிறார். முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்ற 
நாவலர் அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒதுங்கி 
இருக்கிறார். அப்போது அவர் கூறிய மணிவாசகம் இது:
" என்னைக் கேட்டால் நான் முதலியார் என்று 
சொல்லுவேன், கருணாநிதியைக் கேட்டால், அவர் 
என்ன சொல்லுவார்?"
**
இவ்வாறு சாதிக் கொடுமைகள் குத்தீட்டியாய் நெஞ்சில் 
இறங்கிய போதெல்லாம், அந்த ரணத்தின் வலியை 
அனுபவித்த கலைஞரால் மட்டுமே, சாதி ஒழிப்பின்  
தேவையை உணர முடியும்; சாதி ஒழிப்புப் போராளியான 
ராமானுஜரை இனம் காண முடியும். மற்றவர்களால்
இது இயலாது. இதனால்தான், வைணவர்களாலும் 
பிற அனைத்து ரக 'முற்போக்கு', 'கம்யூனிச',
'புரட்சி'களாலும் கைவிடப் பட்ட ராமானுஜரை 
கலைஞர் தூக்கிப் பிடிக்கிறார்.
------------------------------------------------------------------------------------
தொடரும் 
**************************************************************** 
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக