வியாழன், 26 மார்ச், 2015

நம்பியாரால் எம்.ஜி.ஆருக்கு ஆபத்து என்று பயப்படும் 
அந்தக் காலத்துக் கிழவிகளைப் போல....
-------------------------------------------------------------------------------------------
1) "எந்த நேரமும் குஜராத் போலிசால் கைது செய்யப் 
படலாம் என்ற அச்சுறுத்தலுக்கு நடுவில்" தீஸ்தா 
இருக்கிறார் என்பது உண்மையல்ல. இது அவரது 
தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை நிறுத்தும் 
முயற்சி ஆகும். உண்மையில் தீஸ்தாவுக்கே அத்தகைய 
மன இறுக்கம் எதுவும் இல்லாதபோது, ராஜனை மிஞ்சிய 
ராஜவிசுவாசம் நமக்கு ஏன்?
**
தீஸ்தா ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி. அவரை ஆளும் வர்க்கம் 
பாதுகாக்கும். மேலும், உயர்சாதி மேட்டுக்குடிச் சீமாட்டியான 
அவருக்கு மிகப்பெரிய LEGAL CLOUT உண்டு. இந்தியாவின் 
முதல் அட்டார்னி ஜெனரலும், இந்திய சட்ட ஆணையத்தின் 
முதல் தலைவருமான செதல்வாத் அவர்களின் பேத்தியே 
தீஸ்தா. மேலும், சென்னைக் கூட்டத்தில் அவர் பேசியபோது,
பார்ப்பன ஞானி சங்கரனும் நீதியரசர் சந்துருவும் துவார 
பாலகர்களாக, தீஸ்தாவைக் காத்து அருள்பாலிக்கும்போது,
வேறு எவரும் தீஸ்தாவுக்காக அடியாள் வேலை பார்க்க 
வேண்டியது இல்லை.
**
தர்மபுரியில் தலித்துகள் மீதான வன்னிய சாதி வெறியாட்டம் 
நடந்து முடிந்த உடனேயே, நீதியரசர் சந்துரு அவர்கள் 
பா.ம.க நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு, சின்ன அய்யா
அன்புமணி ராமதாசின் புகழ் பாடும் புத்தகங்களை வெளியிட்ட 
செய்தியை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க 
முடியாது. அதே நீதியரசர் சந்துரு, இங்கு வந்து தீஸ்தாவின்  
புகழ் பாடுகிறார்.
**            
சமணத் துறவிகளும் அஹிம்சாவாதிகளும் நிறைந்த 
ஜீவகாருண்யப் பேரிரக்கம் கொண்டதல்ல மோடியின்
குஜராத் போலிஸ் படை. போலிசாரின் கருணையாலோ 
அல்லது கையாலாகாத் தனத்தாலோதான் தீஸ்தா 
கைது செய்யப் படாமல் இருக்கிறார் என்று கருதுவது 
பரிதாபத்துக்கு உரிய பேதைமை. சிவில் உரிமைப் போராளி 
டாக்டர் ராமநாதம் (வாரங்கல்) அவர்களை அவரின் 
கிளினிக்கில் வைத்தே சுட்டுக் கொன்ற போலிசும், டாக்டர் 
விநாயக் சென் அவர்களைச் சிறையில் அடைத்து, ஜாமீன் 
கிடைக்கும் வழிகளை எல்லாம் அடைத்த பாஜகவின் 
போலிசும், இன்னும் யார் மீதும் கஞ்சா கேஸ் போடும் 
ஜெயலலிதாவின் போலிசும் "போலிஸ் என்றால் என்ன"
என்று தெரியாத அப்பாவிகளுக்குத் தெரியப் படுத்திக் 
கொண்டுதான் இருக்கிறார்கள்.
**
ஆளும் வர்க்கம் எப்போது நினைக்கிறதோ, அப்போது 
மோடியின் போலிஸ் தீஸ்தாவைக் கைது செய்யும்.
அதுவரை விட்டு வைத்திருக்கும். அரசு எந்திரம் பற்றிய 
மார்க்சிய பால பாடத்தைப் படித்தவர்களுக்கு இதில் 
சந்தேகம் இருக்க முடியாது. இது புரியாமல், 
நம்பியாரால் எம்.ஜி.ஆருக்கு ஆபத்து என்று பயப்படும் 
மூடக் கிழவிகளைப் போல, தீஸ்தாவுக்கு ஆபத்து
என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
**
மதுரை மத்திய சிறையில் மாவோயிஸ்ட் தலைவர் 
தோழர் விவேக் அவர்களை, சிறைக் காவலர்கள் 
தாக்கி உள்ளனர். இதைக் கண்டித்து, தமிழ்நாட்டின் 
பல்வேறு சிறைகளிலும் இருக்கும் மாவோயிஸ்ட்கள் 
இன்று இரண்டாம் நாளாக உண்ணா விரதம் இருந்து 
கொண்டு இருக்கின்றனர். முதலாளித்துவ ஊடகங்கள் 
இதை இருட்டடிப்புச் செய்கின்றன. ஆனால் அதே 
ஊடகங்கள் தீஸ்தாவை காமிரா வெளிச்சத்தில் 
மூழ்கடிக்கின்றன. சிறைக் கொடுமைகளுக்கு  
இலக்காகும் விவேக் போன்ற புரட்சியாளர்களின்  மீது 
அக்கறை காட்டத் தயாராக இல்லாத குட்டி முதலாளித்துவப் 
பார்ப்பனர்கள், தீஸ்தாவுக்காகக் கண்ணீர் சிந்துவது 
எதை உணர்த்துகிறது? 
**
........................தொடரும்...................................
**************************************************888888888888    
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக