வியாழன், 19 மார்ச், 2015

(1) இராமானுஜரும் கலைஞரும்!
-------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------
கலைஞரின் கைவண்ணத்தில் இராமானுஜர் குறித்த
ஒரு தொடர் ஒளிபரப்பாக இருப்பதை அறிய நேர்ந்தது.
கைவண்ணம் என்றால் திரைக்கதையும் வசனமும் 
என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.
கைவண்ணம் என்ற சொல்லாட்சிக்குத் தமிழகம் 
கம்பனுக்குக் கடன் பட்டுள்ளது.
"மைவண்ணத் தரக்கி போரில் 
மழைவண்ணத் தண்ணலே உன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன் 
கால்வண்ணம் இங்குக் கண்டேன்"
என்கிறான் கம்பன்.
---
தந்தை பெரியார் தமிழ் இலக்கியங்களைப் பெரிதும் 
இகழ்ந்தவர். சிலப்பதிகாரத்தை வன்மையாகக் கண்டித்தவர்.
எனினும், அறிஞர் அண்ணாவும் கலைஞரும், பெரியார் இகழ்ந்த 
பல இலக்கியங்களைத் தூக்கிப் பிடித்தனர். கலைஞர் 
சிலப்பதிகார நாடக காப்பியம் இயற்றினார். குறளோவியமும்
தொல்காப்பியப் பூங்காவும், சங்க இலக்கியத் தங்க வரிகளும் 
இயற்றினார். எனினும் இது பெரியாரோடு முரண்படுவது அன்று.
மேலும், கம்யூனிஸ்ட்களால் புறக்கணிக்கப் பட்ட, மாக்சிம் 
கார்க்கியின் தாய் நாவலை புதுக்கவிதை வடிவில் தந்தார்.
---
தற்போது இராமானுஜர் பற்றிய காவியத்தை அவர் தருவது 
வரவேற்கத் தக்கது ஆகும். இராமானுஜர் வைணவ ஆசான்,
சமய குரவர், ஆன்மிகவாதி என்பன அனைவரும் அறிந்தவையே.
அத்துடன், இராமானுஜர் மாபெரும் சாதி ஒழிப்புப் போராளி.
இந்த உண்மையை அறிந்தவர்கள் மிகவும் குறைவு.
--
லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலை இறையியல் 
(Liberation Thiology) என்ற ஒரு தத்துவம் தோன்றியது.
கிறிஸ்துவ மதத்துக்கு உள்ளிருந்து கொண்டே, அம்மதத்தைச் 
சீர்திருத்துவதே விடுதலை இறையியல் ஆதரவாளர்களின் 
நோக்கம். இதுபோன்றே,இராமானுஜர் தம் சொந்த மதத்தைச்  
சீர்திருத்த முற்பட்டார். 
--
இராமானுஜர், வள்ளலார் போன்றோரின் சாதி ஒழிப்புப் 
பணி, போற்றத் தக்கதே. அந்த அடிப்படையில், கலைஞரின் 
இராமானுஜர் தொடர் சாதி ஒழிப்புச் சிந்தனைகளை 
தமிழ் நிலத்தில் விதைக்கும் என்று நம்புகிறேன்; வரவேற்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------
****************************************************************8     
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக