திங்கள், 9 மார்ச், 2015

(3) தமிழர் திருமணத்தில் தாலியும் 
தாலி அணிவது குறித்து 
தந்தை பெரியாரின் வழிகாட்டுதலும்!
----------------------------------------------------------------------
பகுதி:மூன்று, மாவோவும் பெரியாரும்!
------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------- 
சுயமரியாதைத் திருமணம் என்பது தமிழ்ச் சமூகத்தில்,
பெரியார் நிகழ்த்திய மாபெரும் கலாச்சாரப் புரட்சி ஆகும்.
சீனத்தில் தலைவர் மாவோ நடத்திய கலாச்சாரப் 
புரட்சியின் பல கூறுகளை பெரியாரின் புரட்சி உள்ளடக்கி 
இருந்தது. எனவே, பூகம்பம் வெடித்த புரட்சிப் பெரியார் 
என்ற அடைமொழிக்கு மிகவும் பொருத்தமானவராகப் 
பெரியார் இருந்தார்.
----------------------------------------------------------------------------------------
மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்திருந்த மாவோ, 
காந்தியின் கிராமியப் பொருளாதாரக் கொள்கைகளை,
பெருந்தொழில் மயத்துக்கு எதிரான காந்தியக் 
கொள்கைகளைப் பாராட்டினார். ஆனால், பெரியார் 
பற்றி மாவோ அறிந்திருக்கவில்லை. இங்குள்ள 
பார்ப்பனக் கம்யூனிஸ்ட்கள் பெரியார் குறித்து,
உலகத் தலைவரான மாவோவுக்கு எடுத்துச் 
சொல்லவில்லை. பெரியார் பற்றி மாவோ 
அறிந்திருப்பாரே யானால், பெரியாரின் கலாச்சாரப் 
புரட்சி அனுபவங்களை மாவோ பகிர்ந்து கொண்டு 
இருக்கவும் கூடும்.
------------------------------------------------------------------------------------
லெனினும் ஸ்டாலினும் பொருளாதாரம் என்ற 
அடித்தளம் மாறும்போது, கலாச்சாரம் என்கிற 
மேற்கட்டுமானம் தானாகவே மாறிவிடும் என்றே   
கருதினர். தனித்த ஒரு கலாச்சாரப் புரட்சியின் தேவையை 
அவர்கள் ஏற்கவில்லை. ஐரோப்பிய சமூகத்தில் 
அதற்கான தேவையும் இல்லை. ஆனால் ஆசிய 
சமூகங்களில் அதற்கான தேவை இருக்கிறது என்று 
மாவோ கருதினார். அதுபோன்று, கலாச்சாரப் 
புரட்சிக்கேன்றே இயக்கம் நடத்தி அதில் குறிப்பிடத் 
தக்க வெற்றியும் கண்டார் பெரியார்.
------------------------------------------------------------------------------------------
மறைந்த மா.லெ. கட்சியின் பொதுச் செயலர் 
தோழர் வினோத் மிஸ்ரா (CPI ML LIBERATION)
எண்பதுகளில், சென்னைக்கு வந்திருந்தபோது, தமிழகத்தில் 
பரவலாக நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களை 
வியந்து பாராட்டினார். எங்கள் பீகார் மாநிலத்தில் 
இதுபோன்ற திருமணங்களைக் காண்பது அரிது என்றார்.
-----------------------------------------------------------------------------------------------
வட  இந்தியாவில் டாக்டர் ராம் மனோகர் லோஹியா 
 சோஷலிஸ இயக்கத்தைக் கட்டமைத்தார். முலாயம் சிங்,
லல்லு பிரசாத் போன்ற தலைவர்கள் எல்லாம் லோஹியாவின் 
சீடர்கள். என்றாலும், லோஹியா அவர்கள் பண்பாட்டுத் 
துறையில் அக்கறை செலுத்தவில்லை. அதன் விளைவு, 
சீர்திருத்தத் திருமணங்கள் என்பனவற்றை, வட இந்தியாவில் 
இன்றும் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
----------------------------------------------------------------------------------------------       
மொத்த இந்தியாவுமே நாணி நிற்கும் வகையில், தமிழகத்தில் 
மட்டுமே, பிற்போக்குக் கருத்தியல் வெட்டி வீழ்த்தப் பட்டது 
என்பது பெரியாரின் மகத்துவத்துக்குச் சான்றாகும்.  
ஆக, மானுடத்தின் பண்பாட்டு வரலாற்றில், மாவோ,
பெரியார் இருவருக்கும் சிறப்பான இடம் என்றும் உண்டு.
---------------------------------------------------------------------------------------------
மூன்றாம் பகுதி முற்றியது! அடுத்து 4ஆம் பகுதி...
--------------------------------------------------------------------------------------
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
************************************************************     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக