சனி, 28 மார்ச், 2015

(7) ராமானுஜரின் சீடர்களின் கண்களைப் பிடுங்கி 
எறிந்த குலோத்துங்க சோழன்!
ஹொய்சள நாட்டுக்குத் தப்பி ஓடிய ராமானுஜர்!
கலைஞரின் கைவண்ணத்தில் காணுவோம்!
---------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------------------------
தமிழ் பிராமணக் குடும்பத்தில், திருப்பெரும்புதூரில் 
கி.பி 1017இல், கேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதியருக்கு 
மகனாகப் பிறந்தவர் ராமானுஜர். யாதவப் பிரகாசர் என்ற 
அத்வைதியிடம் வேதம் பயில்கிறார். குருவை விஞ்சிய 
சீடனாக இருந்த ராமானுஜரை யாதவப் பிரகாசர் 
விரும்பவில்லை. எனவே திருக்கோஷ்டியூர் நம்பி 
என்ற சூத்திரரிடம் வேதம் பயின்றார். அந்தக் காலத்தில் 
சூத்திரர்களும் தீண்டத் தகாதவர்களாகவே நடத்தப் 
பட்டனர்.
**
திருவரங்கம் மடத் தலைவராக ராமானுஜர் இருந்தபோதும்,
அங்கேயே தங்கி விடவில்லை. நாடு முழுவதும் 
சுற்றுப் பயணம் செய்து தமது விஷிஷ்டாத்வைத 
தத்துவத்தைப் பரப்புகிறார். காசி, காஷ்மீர், பத்ரிநாத் 
உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களுக்குச் செல்கிறார்.
திரும்பும் வழியிலும் பல்வேறு இடங்களில் தங்கி 
தம் கொள்கையைப் பரப்புகிறார். திருப்பதியில் 
தங்குகிறார். தென்னிந்தியத் திருத்தலங்களைத் 
தரிசிக்கிறார். இறுதியில் திருவரங்கம் வந்து நிலைக்கிறார்.
அப்போது அவருக்கு வயது எழுபது.
**        
ஓரிடத்தில் முடங்கி விடாமல் நாடு முழுவதும் சுற்றித் 
தம் கொள்கைகளைப் பரப்பிய ராமானுஜரை, தம் மதத்துக்கு 
ஆள் பிடிக்கவே தாழ்த்தப் பட்டோரைச் சீடர்களாக 
ஏற்றுக் கொண்டார் என்று பேசுவது, வரலாறே அறியாத 
மடமை அல்லவா!
**
திருவரங்கம் வந்து நிலையாக இருக்கலாம் 
என்று எண்ணிய எண்ணம் ராமானுஜருக்கு 
ஈடேறேவில்லை. அப்போதைய சோழ மன்னன் 
இரண்டாம்  குலோத்துங்கன் தீவிர சைவன். (சில வரலாற்று 
ஆசிரியர்கள் முதலாம் குலோத்துங்கன் என்று 
கூறுகின்றனர்.). 
அவன் ராமானுஜரை சைவத்தைத் தழுவுமாறு பணித்தான்.     
அதை ஏற்காத ராமானுஜர், மன்னனுக்கு வைணவத்தின் 
மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டுத் தமது இரண்டு 
சீடர்களைத் தூது அனுப்பினார். சீடர்களைப் பேசவே 
அனுமதிக்காத மன்னன், அவர்களின் கண்களைப் 
பிடுங்கி எறிந்து நாட்டை விட்டு விரட்டினான்.
ராமானுஜரையும் சிறை செய்ய ஆணையிட்டான்.
**
இச்செய்தி கிடைக்கப் பெற்றதும் ராமானுஜர் தம் முதிர்ந்த 
வயதில் சோழ நாட்டை விட்டுத் தப்பி ஓடி, மைசூருக்கு 
அருகில் உள்ள ஒரு மலைப் பகுதிக்குச் சென்றார். அது 
ஹொய்சள மன்னன் பத்தி தேவன் ஆண்ட நாடு. அம்மன்னன் 
ராமானுஜரை ஆதரிக்கிறான். ராமானுஜரின் போதனையால் 
அவன் வைணவத்தை ஏற்கிறான்.
----------------------------------------------------------------------------------------
தொடரும் 
***********************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக