திங்கள், 16 மார்ச், 2015

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!
---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------
அன்னா ஹசாரே ஒரு ஏகாதிபத்தியக் கைக்கூலி 
என்கிறார்கள் சிலர். யார் இந்தச் சிலர்? முற்போக்காளர்கள், 
இடதுசாரிகள் என்று அறியப் படுகிற, அல்லது அவ்வாறு 
தங்களைக் கருதிக் கொள்கிறவர்கள்தான் அந்தச் சிலர்.
(இந்த வாக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதினால்,
"so called"என்ற ஒரே வார்த்தையில் விஷயம் முடிந்து விடும்.
மன்னிக்கவும், விடயம் என்று திருத்திக் கொள்ளவும்).
---------------------------------------------------------------------------------------------
நல்லது, அன்னா ஹசாரே ஏகாதிபத்தியக் கைக்கூலியாகவே 
இருந்து விட்டுப் போகட்டும்! அவர் என்ன தம்மை ஒரு 
பாட்டாளி வர்க்கக் கைக்கூலி என்றா சொல்லிக் கொண்டு 
திரிகிறார்? இல்லையே! கல்வி அறிவற்ற, ஆங்கிலம் தெரியாத 
இக்கிழவர் அண்மையில் டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளைத் 
திரட்டி, மோடி அரசின் நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்த்துப் 
போராட்டம் நடத்தினார்.(பெப்ரவரி 23, 2015).
------------------------------------------------------------------------------------------------------
நிலப்பறிப்பு அவசரச் சட்டத்தை (ordinance ) எதிர்த்து, முதன் 
முதலில் போராட்டம் நடத்தியவர் அவர்தான். பொலிட்பீரோ,
சென்ட்ரல் கமிட்டி, மாநிலக்குழு என்றெல்லாம் கட்சி 
அமைப்புகளோ, கிசான் சபா போன்ற அமைப்புகளோ, இவ்வாறு 
எவ்விதமான அமைப்பு பலமும் இல்லாத ஒற்றைத் தனி 
மனிதரான அன்னா ஹசாரே விவசாயிகளின் நலனுக்காகப் 
போராடும்போது, இடதுசாரிகளான CPI, CPM கட்சிகளும்,    
பாஜக எதிர்ப்பு  பேசும் பிற முற்போக்குக் கட்சிகளும் 
திண்ணையில் படுத்து உறங்குவது ஏன்?
-------------------------------------------------------------------------------------------------
ஐந்து நாள் முதல் ஐம்பது நாள் வரை அசராமல் 
உண்ணாவிரதம் இருக்கும் மனவலிமை படைத்தவர் 
ஹசாரே. எதிர் முகாமில், இடதுசாரி முகாமில் இப்படி 
ஒருவர் உண்டா? விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 
திலீபன், தண்ணீர் கூட அருந்தாமல், உண்ணாவிரதம் இருந்து 
உயிர் நீத்தார். பூர்ஷ்வா அரசியல்வாதி மமதா பானர்ஜி 
நில அபகரிப்பை எதிர்த்து நீண்டநாள் உண்ணாவிரதம் இருந்து 
தம் கோரிக்கையில் வென்றார். இவர்களைப் போல், 
அதிகபட்சத் தயார்நிலையுடன், தியாக உணர்வுடன் 
உடலை வருத்திப் போராட்டம் நடத்தும் போராளிகள் 
இடதுசாரி, முற்போக்கு முகாமில் உண்டா? கிடையாது.
------------------------------------------------------------------------------------------------
நிலப் பறிப்புச் சட்டத்தை எதிர்த்து, பிரகாஷ் காரத்தும் 
டி.ராஜாவும் டெல்லியில் ஜந்தர் மந்தரில், அல்லது வேறு 
வசதியான இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் 
இருக்கத் தயாரா?    
-----------------------------------------------------------------------------------------------
அன்னா ஹசாரே தம் ஊரான ராலேகான் சித்தியில் உள்ள 
கோவிலில் படுத்து உறங்கக் கூடியவர். ஆனால் போலிக் 
கம்யூனிஸ்ட் தலைவர்களோ, வசதியான கட்டிலில்,
நுரை மெத்தையில் படுத்து உறங்கிச் சுகம் கண்டவர்கள்.
இந்த சுகத்தை இழக்க அவர்கள் ஒருநாளும் சம்மதிக்க 
மாட்டார்கள். இவர்கள் சுகபோகக் கம்யூனிஸ்ட்கள்!
-------------------------------------------------------------------------------------------
மக்களை ஏமாற்றுவதற்காக, கண்துடைப்பாக ஏதேனும் 
ஒரு போராட்டத்தை(!) நடத்திக் காட்டிவிட்டு, பெரு
முதலாளிகளுக்கு ஆதரவாகச் செய்ய வேண்டியதை எல்லாம் 
சத்தமில்லாமல் செய்து கொண்டு, பம்மாத்து அரசியல்
பண்ணுவது ஒன்றே இவர்களின் நடைமுறை.
ஆம், இவர்கள் பாலுக்கும் காவலாக, பூனைக்கும் 
தோழனாக இருக்கும் கலை தெரிந்தவர்கள்.
எத்தனை காலம் இவர்களால்  மக்களை ஏமாற்ற 
முடியும் என்பதை இந்த நாடு பார்க்கும்!
---------------------------------------------------------------------------------------     
***********************************************88888888888888            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக