திங்கள், 9 மார்ச், 2015

(1) தமிழர் திருமணத்தில் தாலியும் 
தாலி அணிவது குறித்து தந்தை பெரியாரின் வழிகாட்டுதலும்!
.....பகுதி: ஒன்று: இலக்கியத்தில் இல்லாத் தாலி ............
------------------------------------------------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------------------------- 
தமிழர் திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்குத் தாலி 
அணிவித்தல் என்பது தொன்றுதொட்டு இருந்து வந்த
வழக்கம் அன்று. தமிழ்ச் சமூக வரலாற்றில், மிகச் சில 
நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இவ்வழக்கம் ஏற்பட்டது.
அகச்சான்றுகளைத் தேடி ஆராய்ந்தபோது பெறப்படும் 
முடிவு இதுவே.
--------------------------------------------------------------------------------------- 
இராமன் சீதையை மணம் புரிந்த நிகழ்வினை வருணிக்கும் 
கம்பர்,
"தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்"
என்கிறார். (தையல்=பெண்,சீதை; தடக்கை=பெரிய கை )
இராமன் சீதையைக் கைப்பிடித்தான் என்றுதான் மணவினை 
நிகழ்ந்தமை பற்றிக் கம்பர் குறிப்பிடுகிறார். இராமன் தாலி 
கட்டினான் என்று கம்பர் எழுதவில்லை. எனவே, கம்பர் காலத்தில் 
தாலி கட்டும் வழக்கம் இல்லை என்பது புலனாகிறது.
---------------------------------------------------------------------------------------------------
அரங்கருடன் தனது மணவினை குறித்துக் கனவு காணும் 
ஆண்டாள்,
"மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"
என்கிறாள்.  "கழுத்தில் தாலி கட்டக் கனாக் கண்டேன்"
என்று பாடவில்லை.
"பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன்" என்றும்,
"காப்பு நான் கட்டக் கணக்க கண்டேன்"என்றும் 
மண வினைகளை  முற்றாக வருணிக்கும் ஆண்டாள்,
ஓரிடத்திலும் தாலி கட்டுவது பற்றிக் குறிப்பிடவில்லை.
------------------------------------------------------------------------------------------------ 
சிலப்பதிகாரத்தில் கோவலன்-கண்ணகி மணவினைகளை 
வருணிக்கும் இளங்கோவடிகள்,
"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் 
தீமிதி வலம் வந்து"
என்கிறாரே அன்றி, தாலி கட்டுவது பற்றிக் குறித்தார் 
இல்லை.
---------------------------------------------------------------------------------------
பிறிதோர் இடத்தில், கோவலர்ப் பிரிந்த கண்ணகி 
நிலையைக் கூறும்போது,
"கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் 
மங்கல அணியின் பிறிதணி  மகிழாள்"
என்கிறார். இங்கு மங்கல அணி என்பது தாலி அன்று
என்பது வெளிப்படை. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய 
அடியார்க்கு நல்லார் முதல் புலியூர்க் கேசிகன் வரை 
எந்த உரையாசிரியரும், கோவலன்  கண்ணகிக்குத் தாலி
கட்டியதாகக் கூறவில்லை.
-----------------------------------------------------------------------------------------
இன்னும் சீவக சிந்தாமணி, வில்லி பாரதம் ஆகியவற்றிலும் 
திருத்தக்கத் தேவரும் வில்லிபுத்தூர் ஆழ்வாரும் 
தாலி பற்றிக் குறிப்பிடவில்லை. இருப்பினும் தற்போது 
அவற்றை மீண்டும் துழாவி வருகிறேன். தடயம் 
கிடைப்பின் வெளிப்படுத்துகிறேன்.
----------------------------------------------------------------------------------------------- 
ஆக, கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 
சிலப்பதிகாரம் முதல், பக்தி இயக்கக் காலத்து 
இலக்கியங்கள் வரை, அதாவது, பன்னிரண்டாம் நூற்றாண்டு 
வரையிலான இலக்கியங்கள் வரை, தாலி பற்றிய 
குறிப்புகள் இல்லை. எனவே அதன் பின்னரே தமிழர் 
பண்பாட்டில் தாலி இடம் பெற்று இருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------
ஆக, அதிகம் போனால், ஓர் ஐந்தாறு நூற்றாண்டுகளின் 
வரலாறுதான் தாலிக்கு உரியதாக இருக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------
......தொடரும்...... பகுதி இரண்டைப் பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்.
*************************************************************      
         
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக