செவ்வாய், 5 ஜூலை, 2016

நான் திமிர் பிடித்தவன்தான்!
என் மயிரைக்கூட உன்னால் பிடுங்க முடியாது!
--------------------------------------------------------------------------------------
நான் ஒரு பணக்காரன். என்னிடம் பணத்திமிர் உண்டு.
இதில் என்ன தவறு? என் பணக்கார நண்பன் ஒருவன்
நேற்று BMW கார் வாங்கினான். அவன் ஒரு BMW பைத்தியம்.
அதைக் கொண்டாட ஹோட்டல் லே மிரிடியனில் ஒரு
பார்ட்டி கொடுத்தான்.

பார்ட்டி என்றால் மிடில் கிளாஸ் நாய்கள் கொடுக்கிற
SKC பார்ட்டியா? (SKC =  ஸ்வீட், காரம், காபி). இல்லை,
இது செம பார்ட்டி.பார்ட்டியில் ஓட்கா, ஒயின், விஸ்கி,
பிராந்தி என்று உயர் ரக வெளிநாட்டு மது தண்ணீராக
ஓடியது. 

பார்ட்டி முடிந்ததும் என் காரை எடுத்துக் கொண்டு
வீடு திரும்பினேன். சற்றுத் தடுமாறித்தான் காரோட்ட
முடிந்தது. வழியில் பூந்தமல்லி  ஹைரோட்டில்
ஒரு அற்ப கான்ஸ்டபிள் என்னை நிறுத்தினான்.
சட்டென்று மணிபர்ஸைத் திறந்து ஒரு தாளை
உருவினேன். அது ஓர் ஆயிரம் ரூபாய் நோட்டு.

நான் எறிந்த நோட்டைக்  கவ்விக்கொண்ட கான்ஸ்டபிள்
ஒரு ராயல் சல்யூட் அடித்து என்னை வழியனுப்பினான்.
ஒரு வழியாக பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்.
படுக்கையில் விழுந்து உறங்கிப் போனேன்.

மறுநாள் எழுந்ததும் கிடைத்த செய்தி எனக்கு
வேதனையைத் தந்தது. இந்த ஐஸ்வர்யா எவனோ
ஒரு பிளாட்பாரம் நாயை எமலோகத்துக்கு
அனுப்பி விட்டாளாம். பொறுக்கிக் கூட்டம் அவளைப்
பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டதாம்.

என்னோடு பார்ட்டியில் தண்ணி அடித்தவள்தான்
இந்த ஐஸ்வர்யா. அவள் எப்போதுமே ஆண்களை
மிஞ்சுபவள். நான் அடித்ததை விட அதிகமாக
அடித்தாள். இதற்காக  அவளைக் கைது செய்வதா?

எவனோ முனுசாமி நாயாம். இவள் காரில் வந்து
அந்த நாய் விழுந்து அடிபட்டுச் செத்துப் போச்சு.

சிறைக்குச் சென்று ஐஸ்வர்யாவைப் பார்த்தேன்.
அவளுக்கு ஆறுதல் கூறச் சென்றேன். ஆனால்
அவள் மிகுந்த துணிச்சலோடும் திமிரோடும்
இருக்கிறாள். நரைத்த மீசையோடுள்ள ஒரு கிழட்டு
ஜெயிலர் அவளை மேடம் மேடம் என்று மிகுந்த
மரியாதையோடு விளித்து, சேவகம் செய்வதைப்
பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்து நேரே காரை சேத்துப் பட்டுக்குத்
திருப்பினேன். ஐஸின் அம்மா அப்பாவைப் பார்த்து
ஆறுதல் சொல்ல. அங்கே ஏகப்பட்ட பத்திரிகை
ஆட்களின் கூட்டம். எல்லோருக்கும் டேனியல்
கவர்  பட்டுவாடா பண்ணிக்  கொண்டு இருந்தார்.

ஐஸின் அப்பா மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
நான் போகும்போது ராம் ஜெத்மலானியிடம் போனில்
பேசிக் கொண்டிருந்தார். எனவே ஆன்ட்டியிடம்
பேசிக் கொண்டிருந்தேன். இதுவரைக்கும் 20 சி
செலவாகி இருக்குதாம். எத்தனை சி செலவானாலும்
ஐஸை வெளியே கொண்டு வந்து  விடுவோம்
என்று நம்பிக்கையோடு கூறினார் ஆன்ட்டி.
விடை பெற்று வீட்டுக்கு வந்தேன்.

எனக்கு அந்த முனுசாமி நாய் மீது கோபம் கோபமாக
வந்தது. ஐஸைப் பிடித்துக் கொடுத்த நாய்களைச்
சுட்டுக் கொல்லலாம் போல ஆத்திரம் வந்தது.
பல்லைக் கடித்துக் கொண்டு காரோட்டினேன்.
******************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக