சனி, 1 அக்டோபர், 2016

(8) சாதியை பிராமணர்கள் உண்டாக்கவில்லை
என்று அடித்துக் கூறுகிறார் அம்பேத்கார்!
ரங்கநாயகம்மா நூலின் திறனாய்வு!
----------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------------
அம்பேத்கார் கூறுகிறார்:
"நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதெல்லாம்
சாதி பற்றிய சட்டத்தை மநு வழங்கவில்லை.
மநுவுக்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நீண்ட
நெடுங்காலமாகச் சாதி நிலவி வருகிறது."
(அம்பேத்கார் எழுத்தும் பேச்சும், தொகுதி-1, பக்-22-23).
(ரங்கநாயகம்மா நூல், பக்-23)

அம்பேத்கார் மேலும் கூறுகிறார்:
-----------------------------------------------------------
"..... அதே போல், பிராமணர்களே சாதியைப்
படைத்தனர் என்னும் கோட்பாடும் அர்த்தமற்றதே.
மநுவைப் பற்றி நான் விளக்கியதற்கும் மேலாக
சொல்வதற்கு ஏதுமில்லை.பிராமணர்கள் பல
வகைகளில் குற்றம் இழைத்தவர்களாக இருக்கலாம்;
குற்றம் இழைத்தவர்கள்தான் என நான் துணிந்து
கூறவும் செய்வேன். ஆனால் சாதிமுறையை
பிராமணர்கள், பிராமணரல்லாதோர் மீது
திணித்தார்கள் என்பது உண்மையல்ல. அதற்குரிய
துணிவோ ஆற்றலோ அவர்களுக்குக் கிடையாது."
( தொகுதி-1, பக்-22-23)
(ரங்கநாயகம்மா நூல் பக்-24)

இடச்சுருக்கம் கருதி இக்கட்டுரையில் நீண்ட
மேற்கோள்கள் தரப்படவில்லை. ஆனால்
ரங்கநாயகம்மா  தமது நூலில் மிக நீண்ட
மேற்கோள்களைத் தந்திருக்கிறார்.

திராவிட இயக்கம் ஏற்கவில்லை!
-----------------------------------------------------------
இந்தியாவிலேயே பார்ப்பன எதிர்ப்பு என்பது
கொழுந்து விட்டு எரியும் மாநிலம் தமிழ்நாடு.
பெரியாரியவாதிகள், திராவிட இயல் கருத்தாளர்கள்,
பிற வகையிலான பார்ப்பன எதிர்ப்பாளர்கள்,
இப்படிப் பலரும் அம்பேத்காரின் மேற்கூறிய
கோட்பாடுகளை ஏற்கப் போவதில்லை.
இகழ்ச்சியுடன் நிராகரிக்கவே செய்வார்கள்.

திராவிட இயக்கத்தின் அடிப்படையையே வெடி
வைத்துத் தகர்க்கும் கோட்பாடு இது. பார்ப்பனர்கள்
சாதியை உண்டாக்கவில்லை என்றால், பின்
சாதியை உண்டாக்கியது யார்? இந்தக் கேள்வியை
வலுவாக எழுப்புகிறார் ரங்கநாயகம்மா.

இந்நிலையில் அம்பேத்கார்-பெரியார் படிப்பு
வட்டங்களை அமைக்கும் ஆர்வலர்கள்,
அம்பேத்கார்-பெரியார் ஆகிய இருவருக்கும்
இடையிலான இந்த பாரதூரமான முரண்பாட்டைத்
துளியும் அறிந்திருப்பார்களா?

"அறியாமையே சகல தீமைகளுக்கும் தாய்"
(Ignorance is the source of all evils) என்கிறார் சாக்ரட்டிஸ்.
அறியாமையை அகற்றி விட்டு அதன் இடத்தில்
அறிதலை முன்வைக்கும் எவரும் சமூக
மேம்பாட்டிற்குப் பங்களிப்போரே. அந்த வகையில்
ரங்கநாயகம்மாவின் இந்த நூல் அறியாமை
இருளை அடித்து விரட்டுகிறது.

மநு சாஸ்திரம் சிறந்த அறவியல் நூல்!
---------------------------------------------------------------------
அம்பேத்கார் கூறுகிறார்: "அறவியலும் ஒழுக்க
நெறிமுறையும் மக்களின் கடமைகளையும்
பற்றியவை என்று கொண்டால், மநு ஸ்மிருதி
ஓர் அறவியல் நூல் என்பதில் ஐயமில்லை."
( அறம்+இயல்=அறவியல்; அறம் = ethics)
(தொகுதி-3, பக்-260-261)
(ரங்கநாயகம்மா நூல் பக்-25)

அம்பேத்காரின் மேற்கூறிய கருத்துக்களில்
இடதுசாரிகள் உள்ளிட்ட பிற முற்போக்காளர்கள்
எவருக்கும் உடன்பாடு இல்லை என்பது
சொல்லாமலே விளங்கும். பார்ப்பன, இந்துத்துவ
சக்திகள் மட்டுமே இக்கருத்துக்களில் உடன்பாடு
கொள்ள முடியும். இதனால்தான் "இந்துத்துவ
அம்பேத்கார்" என்ற நூல் வெளிவந்துள்ளது.

ரங்கநாயகம்மா தமது நூலில் அம்பேத்காரின்
மேற்கூறிய கருத்துக்களுடன் கடுமையாக
முரண்படுகிறார். அவரை எதிர்த்து வாதிடுகிறார்.
அம்பேத்காரின் கருத்துக்கள் ஏற்க இயலாதவை
என்று நிறுவுகிறார்.

இவ்வாறு இந்துத்துவத்திற்கு உகந்த அம்பேத்காரின்
மேற்கூறிய கருத்துக்களை எதிர்த்து
ரங்கநாயகம்மா தமது நூலில் சமர் புரிகிறார்.
ஆக, அந்த அடிப்படையில் பார்த்தால், இந்த நூல்
பார்ப்பனியத்தின் "இந்துத்துவ அம்பேத்கார்"
என்ற நூலைக் கருத்தியல் ரீதியில் எதிர்க்கும்
நூல் என்றும் கூறலாம்.

பின்குறிப்பு: இந்துத்துவ அம்பேத்கார் என்ற நூல்
அண்மையில் வெளிவந்தது; ரங்கநாயகம்மாவின்
நூல் அதற்கு முன்னரே தெலுங்கில் டிசம்பர்
2000இல் வெளிவந்தது. எனவே மேற்கூறிய
வாக்கியத்தை அதன் உரிய பொருளில் புரிந்து
கொள்ள வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
தொடரும்
----------------------------------------------------------------------------------------  

        
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக