திங்கள், 12 டிசம்பர், 2016

ஜெயலலிதா இறந்த நேரம் இரவு 11.30 மணி!
மோடி டுவிட்டரில் இரங்கல் எழுதியது இரவு 11.09 மணி!
ஜெயலலிதா இறக்கும் முன்னரே மோடி இரங்கல்!
இது எப்படி? அறிவியல் விளக்கம்!
--------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------------
இந்தக் கேள்விக்கு சில முகநூல் பதிவுகளின்
பின்னூட்டங்களில் ஏற்கனவே நியூட்டன் அறிவியல்
மன்றம் பதில் அளித்துள்ளது. எமது முகநூல்
நண்பர்களான வெளிநாடுவாழ் சில பொறியாளர்களும்
விடையளித்து உள்ளனர். விகடன் மின்னிதழ் ஏடும்
கூட, விடையளித்து உள்ளதாக எமக்குச் சொல்லப்
படுகிறது. இவ்வளவுக்கும் பிறகும் பலரும் பொதுவெளியில்
இதே கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றனர்.

நமது பூமி முழுவதும் நேரம் ஒன்று போல் இருப்பதில்லை.
1) பூமி தன்னைத்தானே சுற்றுவதும் 2) செங்குத்தாக
இல்லாமல் தன அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுவதும்
3) சூரியனைச் சுற்றி வருவதும் ஆகியவை இதன்
காரணங்கள் ஆகும்.

உலகம் முழுவதும் ஒரே நேரம் என்று இருந்தால் மட்டுமே
குழப்பம் தவிர்க்கப் படும். எனவே GMT (Greenwich Mean Time)
எனப்படும் பொது நேரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்
படுகிறது. கிரீன்விச் என்பது லண்டனில் உள்ள வானிலை
நோக்குக் கூடத்தின் (Royal Observatory) நேரம் ஆகும். 

காலப்போக்கில் அறிவியலின் வளர்ச்சியில் UTC எனப்படும்
(Coordinated Universal Time) பொதுநேரம் அறிவியல் துறைகளில்
கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. சென்னை வானிலை
ஆய்வு மையத்தில் அன்று ரமணன் அவர்களும் இன்று
பாலச்சந்திரன் அவர்களும் வெளியிடும் புயல்
எச்சரிக்கை அறிக்கைகளில், புயல் குறித்த நேரங்கள்
UTC நேரங்களே ஆகும்.

மேலும் செயற்கைக் கோள்களை விண்ணில்
செலுத்தும்போது, ஏவுகணைகள் செலுத்தப் படும்
நேரம் (launch time) விண்வெளித் துறையினரால்
UTC நேரமாகவே குறிப்பிடப் படும். இவ்வாறு பொது
நேரமான GMT, UTC நேரங்களைக் கடைப்பிடித்தால்
குழப்பம் ஏற்படாது.

ஆனால், முகநூல் மற்றும் டுவிட்டர் வாசகர்கள்
பொது நேரத்தைக் கடைப்பிடிப்பதில்லை. தத்தம்
நாட்டின் சொந்த நேரத்தையே கடைப்பிடிக்கிறார்கள்.
இது நாட்டுக்கு நாடு வேறுபடும். நேரம் மட்டுமல்ல,
தேதியும் மாறுபடும். எனவே குழப்பம் உருவாகும்.
அப்படிப்பட்ட குழப்பம்தான் ஜெயலலிதா மறைவு
குறித்த பிரதமர் மோடியின் இரங்கல் செய்தியின்
நேரத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்த நேரம் டிசம்பர் 5, 11.30 PM ஆகும்.
அதாவது இரவு பதினொன்றரை மணி. இந்த AM, PM
போன்ற பாகுபாடுகளும் குழப்பத்தை ஏற்படுத்துபவை.
எனவேதான் ரயில்வே நேரம், தொலைபேசி-தந்தி
நேரம் எல்லாம் 24 மணி நேர மொத்தம் என்ற
அடிப்படையில் அமைந்திருக்கும்.

இந்தியத் திட்ட நேரப்படி (IST = Indian Standard Time)
டிசம்பர் 5 (திங்கள்) 2330 மணிக்கு ஜெயலலிதா இறந்தார்.
மோடியின் இரங்கல் செய்தி டிசம்பர் 6 (செவ்வாய்),
0030 மணிக்கு (அதாவது 12.30 PM) வெளியிடப் பட்டுள்ளது.
இது மோடியின் ஒரிஜினல் டுவிட்டர் பதிவில்
காணப்படுகிற நேரம் ஆகும்.

இந்தப் பதிவை, லண்டனில் உள்ள ஒருவர் படித்தால்,
அவரின் டுவிட்டர் பக்கத்தில் மோடியின் இரங்கல்
செய்தியின் நேரம் டிசம்பர் 5, இரவு 7 மணி என்பதாகத்
தெரியும். அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு நாலரை
மணி நேரம் முன்பாகவே மோடி இரங்கல் தெரிவித்து
விட்டதாகக் காட்டும்.

எனவே முகநூலிலோ அல்லது டுவிட்டரிலோ ஒரு
செய்தியின் நேரம் குறித்து நமக்கு ஐயம் ஏற்படுகிறது
என்றால், அந்தச் செய்தியின் நேரம் எந்த நாட்டின்
நேரம் என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். அதற்கு
விடை தெரியும்போது குழப்பம் அகலும்.

இக்கட்டுரையோடு இணைக்கப்பட்ட படத்தில்
இரண்டு டுவிட்டர் பதிவுகளின் பிரதிகள் காட்டப்
பட்டுள்ளன. இரண்டும் ஒரே செய்தியே ஆகும்.
அதாவது மோடியின் இரங்கல் செய்தி ஆகும்.

ஒன்றில் நேரம்  12.39 AM என்றுள்ளது. இது இந்திய
நேரப்படி உள்ளது. மற்றதில் 11.09 PM என்றுள்ளது.
இது ஐக்கிய அரபு அமீரக (UAE) நேரம் ஆகும்.
இந்தியாவுக்கும் அமீரகத்திற்கும் ஒன்றரை மணி
நேர வேறுபாடு உண்டு. அமீரக நேரம் இந்திய
நேரத்தை விடப் பிந்தியது ஆகும்.

ஜெயலலிதா இறந்த பிறகு, மோடி இரங்கல் செய்தியை
டுவிட்டரில் எழுதி உள்ளார். அது அமீரக நேரப்படி,
ஜெயலலிதா இறக்கும் முன்னரே எழுதப் பட்டதாகத்
தெரிகிறது. இதை புரிந்து கொள்ள இயலாத போது,
அறியாமை கொடிகட்டிப் பறக்கும். அது தேரேறி
ஊர்வலம் வரும்.
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ஒவ்வொருவரும் அவரவர் கணினி அல்லது
மொபைலில் என்ன நேரத்தைத் தெரிவு செய்து
வைத்து இருக்கிறார்களோ,  அந்த நேரத்தைத்தான்
அவரவர் கணினி/மொபைல்கள் காட்டும்.
*****************************************************************    
    


         



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக