செவ்வாய், 27 டிசம்பர், 2016

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை அரசின் அனுமதி இல்லாமல்
கைது செய்ய இயலுமா?
ராம மோகன்ராவ் கூறுவது சட்டப்படி சரியா?
--------------------------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: இங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குச் சொல்லப்
படுவது ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட அகில இந்திய
சேவைக்கு உரிய அனைத்து அதிகாரிகளுக்கும்
பொருந்தும்.

1) ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி நெரிசல் மிகுந்த சாலையில்
காரை ஒட்டிச் செல்லும்போது, எதிரில் வந்த ஒருவர் மீது
காரை ஏற்றிக் கொன்று விடுகிறார் என்று வைத்துக்
கொள்ளுங்கள். அவரை உடனடியாகக் கைது செய்யலாம்.
அதற்கு சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.
யாரிடமும் முன் அனுமதி வாங்கத்  தேவையில்லை.

2) ஆனால், அதே ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது, ஊழல் தடுப்புச்
சட்டத்தின் கீழ் (Prevention of corruption Act) வழக்குத் தொடுக்க
வேண்டும் என்றால், அதற்கு அரசின் அனுமதி பெற
வேண்டியது கட்டாயம் ஆகும்.

3) அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, மத்திய அரசின் சேவையில்
இருந்தால், மத்திய அரசின் Dept of personnel and training
துறையின் அனுமதி பெற வேண்டும். அவர் ஐ.பி.எஸ்
அதிகாரியாக இருந்தால், மத்திய உள்துறை
அமைச்சகத்தின் (central Home Ministry) அனுமதி பெற
வேண்டும்.

4) அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, மாநில அரசின் சேவையில்
இருக்கும் பட்சத்தில், மாநில அரசின் அனுமதி பெற
வேண்டியது கட்டாயம் ஆகும்.

5) மேற்கூறிய அனைத்திலும், Competent Authority எனப்படும்
தகுதி வாய்ந்த அதிகாரி மட்டுமே அனுமதி வழங்க
இயலும்.

6) அதே நேரத்தில், வருமானவரித் துறையினர், எந்த ஒரு
ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியின் இல்லத்தில்
அல்லது அலுவலகத்தில் சோதனையிட எந்தத்
தடையும் இல்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு வழங்கப் பட்டுள்ள,
IMMUNITY எனப்படும் பாதுகாப்புக் கவசம்,
வருமான வரித்  துறையினர் நடத்தும் ரெய்டுகளுக்குப்
பொருந்தாது.

7) ஏன் வருமானவரித் துறைக்கு இந்த விதிவிலக்கு
வழங்கப் பட்டுள்ளது? கணக்கில் காட்டாமல்
வரி ஏய்ப்புச் செய்துள்ள வருமானத்தைக் கண்டறிவதும்,
அதைக் கைப்பற்றுவதும், அதற்கான வரி மற்றும்
அபராதத்தை விதிப்பதும், அவற்றை வசூலிப்பதும்
மட்டுமே வருமானவரித்  துறையின் வேலை.

8) உதாரணமாக, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, வருமானத்தை
மீறி, சொத்துக் குவித்துள்ளார் என்றால், அவர் மீது
சொத்துக் குவிப்பு வழக்கு (Disproportionate Assets Case)
தொடுப்பது வருமானவரித்  துறையினரின் வேலை
அல்ல. அதற்கான அதிகாரமும் வருமானவரித்
துறைக்கு இல்லை. சோதனையிட்டு வருமானத்தை,
வரிஏய்ப்பைக் கண்டறிவது, வரி மற்றும் அபராதத்தை
வசூலிப்பது மட்டுமே வருமானவரித் துறையின் வேலை.
எனவே அவர்கள் எந்தவொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின்
வீட்டையும் சோதனையிட சட்டம் அனுமதிக்கிறது.  

9) ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ( Prevention of corruption Act 1988)
மட்டுமே ஐ .ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக்
கவசம் (immunity) வழங்கப் பட்டுள்ளது. இச்சட்டத்தின்
கீழ் வழக்குத் தொடர அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.

10) என்றாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி முதல் பியூன் வரை
அனைவரையும் உள்ளடக்கி, எவர் மீதும் அரசின்
முன் அனுமதி பெறாமலேயே வழக்குத் தொடுக்க
வகை செய்வதுதான் லோக்பால் சட்டம். அந்தச் சட்டம்
செயல்பாட்டுக்கு வந்தால் இந்த முன் அனுமதி பெற
வேண்டிய கட்டாயம் அகன்று விடும். தமிழ்நாட்டில்
லோகபால் கிடையாது.

11) ஆக மொத்தத்தில், முன்னாள் தலைமைச் செயலாளர்
ராம மோகன்ராவின் இல்லம் மற்றும் தலைமைச்
செயலகத்து அறை ஆகியவற்றை வருமானவரித்துறை
சோதனையிட்டதில் எந்த விதமான சட்ட மீறலும்
இல்லை. இதுதான் உண்மை.
**********************************************************************         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக