வெள்ளி, 23 டிசம்பர், 2016

ராம மோகன்ராவ் உதிர்ந்த ரோமம் ஆனார்!
உலகியல் என்றால் என்ன? உலகியல் குறித்து
வள்ளுவர் குறிப்பிடுவது என்ன?
=====================================================
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை.

உலகியல் என்றால் உலகத்தின் இயல்பு என்று பொருள்.
இயல்பு என்றால் இயற்கையான தன்மை என்று பொருள்.
சமூகத்தின் கூட்டு மனச்சான்றே உலகியல்.

மயிரானது தலையில் இருக்கும்வரை, அது அலங்கரிக்கப்
படுகிறது. எண்ணெய் தடவப் பட்டு சீவப் படுகிறது.
அதாவது தலையில் உள்ள மயிர் மதிக்கப் பெறுகிறது.
ஆனால், அதே மயிர் தலையை விட்டு நீங்கி விட்டால்,
உதிர்ந்த ரோமம் ஆகி விடுகிறது. மதிப்பை இழக்கிறது.
இது உவமை.

இந்த உவமையை மனிதர்களுக்குப் பொருந்துகிறார்
வள்ளுவர். அவர்கள் தங்களின் உயர்ந்த நிலையை
விட்டு, அறம் வழுவி, கீழே இறங்குவார்கள் என்றால்,
அவர்களும் உதிர்ந்த ரோமம் ஆகி விடுவார்கள்
என்கிறார் வள்ளுவர்.

ராம்மோகன் ராவ் தமது உயர்ந்த நிலையில் இருந்து
வழுவினார். இன்று உதிர்ந்த ரோமம் ஆனார். எனவே
மதிப்பு இழக்கிறார். மரியாதையை இழக்கிறார்.
இதுநாள் வரை அவர், இவர் என்றும் அவர்கள் என்றும்
மரியாதை காட்டிய உலகம், இனி அவன் இவன் என்று
ஏக வசனத்தில் பேசும் என்கிறார் வள்ளுவர்.

இன்று காலை தினசரிப் பத்திரிகைகளைப் பிரித்ததுமே
வள்ளுவர் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனமானது
என்று எண்ணி வியந்தேன்; மகிழ்ந்தேன். நேற்று வரை
திருமிகு என்றும் அவர்கள் என்றும் போற்றப்பட்டு வந்த
ராம மோகன்ராவை தினமலர் ஏடு அவன் இவன் என்று
ஏக வசனத்தில் பேசத்  தொடங்கி உள்ளது. இதுதான்
உலகியல்.

2000 ஆண்டுகளுக்குப் பின்னரும் வள்ளுவரின் கருத்து
வெற்றி முரசு கொட்டி நிற்கிறது. இது வள்ளுவரின் வெற்றி!
***********************************************************************

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக