ஞாயிறு, 25 டிசம்பர், 2016

கீழ வெண்மணிப் படுகொலையும் - ஈ.வெ.ரா.பெரியார் அறிக்கையும்
25.12.1968 அன்று ஆதிக்க சாதிவெறி, பண்ணையடிமை முறைக்கு எதிராகப் போராடி வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 44 பேர் கீழவெண்மணியில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு அன்றைக்கு தமிழகத்தையே உலுக்கியது.
கீழவெண்மணி போராட்டத்தை முன் நின்று நடத்திய சி.பி.எம். கட்சி இக்கொடூர கொலைக்கு காரணமான கோபால கிருஷ்ண நாயுடுவை கைது செய்து தண்டிக்குமாறு போர்க்குரல் எழுப்பியது. அப்போது கோபால கிருஷ்ண நாயுடுவை கண்டிக்கவும், இறந்து போன தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் மறுத்தவர் ஈ.வெ.ரா.பெரியார் ஆவார்.
அதுமட்டுமின்றி, கலவரமூட்டிய சி.பி.எம்.கட்சியை தடை செய்ய வேண்டுமென்று (28.12.1968) அறிக்கையும் வெளியிட்டார்.
இந்த அறிக்கை குறித்து சி.பி.எம்.கட்சியோ, பெரியாரைக் கொண்டாடும் தலித் இயக்கங்களோ எவ்வித கருத்தும் சொல்வதில்லை. வெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முதன்மைப் படுத்தும் போக்குகள் கீழ்வெண்மணிப் போராளிகளை சிறுமைப் படுத்தும் செயலாகும். உண்மைநிலை தெரிந்தோ, தெரியாமலோ பெரியாரைப் பயன்படுத்தும் அமைப்புகளுக்கு அவரது கீழ்வரும் அறிக்கையினை தொகுத்து தருகிறோம்.
1. சட்ட மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் மாறி விட்டார்கள்.
2. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை, கொலைகாரத்தனம், நாசவேலைகள் செல்வாக்கு பெற்று விட்டபடியால் காந்தியார் கொல்லப்படுதல், காமராசர் கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகளை கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்படுதல், நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள், பல வாகனங்கள் கொளுத்துதல் என வளர்ந்து விட்டன.
3. கடைசி நடவடிக்கையாக நேற்று முன் தினம் தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டு கொளுத்தி 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.
4. இன்றைய நிலை மாற வேண்டுமானால் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரண்டு கட்சிகளைத் தவிர அரசியல் சம்மந்தமான எல்லாக் கட்சிகளையும் இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.
5. எந்தக்கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்து விட வேண்டும்.
6. எந்தக் காரியத்திற்கும் சட்ட மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.
7. இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி வாய்ப்பு ஏற்படும்வரை தான். இந்த நிலையில் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.
8.தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் (ஜான்சன்).
மேற்கண்ட பெரியாரின் அறிக்கையை படிப்பவருக்கு தலைசுற்றல் தான்வரும். ஏனெனில், அந்தளவிற்கு வெண்மணிக்கு சம்மந்தமில்லாத உளறல்களே அதிகமாக உள்ளன. காந்தியார் சட்ட மீறுதல் மூலம் மக்கள் அயோக்கியர்களாக்கி விட்டபடியால் நாடு முழுவதும் நாசவேலைகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கீழ்வெண்மணிப் படுகொலை நடந்து விட்டது. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பது தான் பெரியாரின் விரிவான அறிக்கையின் சாரமாகும்.
கீழவெண்மணியில் மக்களோ, கம்யூனிஸ்ட் கட்சியோ எந்த வன்முறையிலும் ஈடுபட வில்லை என்பது தான் அதன் உண்மை வரலாறு அறிந்தோர் கூறுவர். 25.12.1968 அன்று மாலை 5 மணிக்கு வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மிராசுதரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் விடுவிக்கும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அதில் கோபால கிருஷ்ண நாயுடுவின் அடியாள் பக்கிரி என்பவன் இறந்து விடுகிறான். அதைக் கேள்விப்பட்டு கோபால கிருஷ்ண நாயுடுவும், அவரின் ரவுடிக்கும்பலும் அங்கு வந்து சேர்ந்தது. போராடிய மக்களை ஆயுதங்களைக் கொண்டு விரட்டியது. அதன் பிறகு இராமையா என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்த போது கதவைப் பூட்டி ஈவு இரக்கமின்றி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியது. அதில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 5 முதியவர்கள் துடிதுடிக்க இறந்தனர்.
இதை மூடி மறைத்து விட்டு மக்களையும், கம்யூனிஸ்டு கட்சியையும் சாடுவதிலிருந்து கோபால கிருஷ்ண நாயுடுவை பெரியார் காப்பாற்ற முயல்வது தெரிகிறது.
கீழ்வெண்மணிப் படுகொலை என்பது ஒரு நாளில் நடந்த நிகழ்வல்ல. இது 25 ஆண்டு காலமாக வர்ணசாதி ஆதிக்கம், பண்ணையடிமை முறைக்கு எதிராக நடந்து வரும் நீண்ட நெடிய போராட்டமாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் வாயில் சாணிப்பாலை ஊற்றுவது, குருதிப் பீறிடும் வரை சவுக்கடி தருவது எனும் காட்டுமிராண்டி கால கொடுமைகள் நிகழ்ந்த போது அதற்கு எதிராக களப்பால் குப்பு, வாட்டக்குடி இரணியன் ஆகியோர் போராடி உயிர் நீத்தனர்.
பி.சீனிவாசராவ் என்பவர் தலைமையில் மக்கள் போராடி ஓரளவு சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனால் கலக்கமுற்ற ஆண்டைகளின் உச்சபட்ச தாக்குதல் தான் கீழ்வெண்மணிப் படுகொலையாகும்.
கீழவெண்மணிப் போராட்டம் என்பது வெறும் கூலி உயர்வுப் போராட்டம் மட்டுமல்ல. இது வர்ண சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் கூட. எனவே உண்மை வரலாறு தெரியாமல் கீழவெண்மணி படுகொலை நினைவு நாளில் பெரியாரை முன்னிறுத்துவது என்பது நேர்மையற்ற வரலாற்று மோசடியாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக