வெள்ளி, 9 டிசம்பர், 2016

அண்ணன் ஓபிஎஸ்சை முதல்வர் ஆக்கியது யார்?
-------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவின் ஒரு substandard versionதான் சசிகலா.
IQ குறைவானவர் என்ற போதிலும், ஜெ.வின் நிழலாக
இருந்து கட்சியை, ஆட்சியை நடத்தி அனுபவம்
பெற்றவர். தற்போது அதிமுகவின் தலைவிதி
இவருடன் பின்னிப் பிணைந்துள்ளது.

ஜெ மறைந்தவுடன், ஓ.பி.எஸ்.சுக்குப் பதிலாக தானே
முதல்வராக வேண்டும் என்று சசிகலா முயற்சி செய்தார்.
அதை வெங்கையா நாயுடு முறியடித்தார். வேறு வழியின்றி
சசிகலாவும் அவரின் கணவர் நடராசனும் அதை
ஏற்க நேர்ந்தது. அதிமுகவின் 135 எம்.எல்.ஏ.க்களிடம்
ஏற்படும் பிளவு கலைஞருக்குச் சாதகமாகி விடும்
என்ற யதார்த்தத்தை வெங்கையா நாயுடு சுட்டிக்
காட்டியபோது, நடராசன் அதை உணர்ந்து ஆமோதித்தார்.
ஆனாலும் சசிகலா பிடிவாதமாக இருந்தார்.

ஐந்தாண்டு ஆட்சியில் ஆறு மாதம் போக, மீதி நாலரை
ஆண்டுகள் உள்ளன;  கிட்டத்தட்ட முழுசாக உள்ள
ஆட்சி இது. இந்த ஆட்சியில் சசிகலாவை முதல்வராக்கும்
புதிய பரிசோதனையை இப்போது செய்வது விவேகம் ஆகாது; முன்யோசனை இல்லாமல் இந்த ஆட்சியை
நழுவ விடுவது கலைஞருக்குத்தான் சாதகமாக அமையும்
என்று நாயுடு மேலும் விளக்கினார்.

சாம பேத முறைகளைநாயுடு கையாண்ட போதும்
சசிகலாவின் பிடிவாதம் நீங்கவில்லை. இப்போது
முதல்வர் ஆகாவிட்டால், பின் எப்போதுமே முதல்வராக
முடியாது என்று சசிகலா கருதினார்.

இப்போது நாயுடு தண்டத்தை மேற்கொண்டார். என்
பேச்சை மீறி, சசிகலாவை சட்ட மன்றக் கட்சித்
தலைவராகத் தேர்ந்தெடுத்தால், ஒரு எம்.எல்.ஏ.வாக
இல்லாத சசிகலாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்
செய்து வைக்க மாட்டார் என்று சசிகலாவுக்கு
உண்மையை உணர்த்தினார் நாயுடு. இதன் பிறகே
நடராசன் தம் மனைவியைச் சமாதானம் செய்து
சம்மதிக்க வைத்தார்.

ஓபிஎஸ்சுக்குப் பதில் வேறு ஒருவர் என்ற பேச்சை
நாயுடு காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ஓபிஎஸ்
மட்டுமே ஜெ.வால் அடையாளம் காட்டப் பட்டவர்;
இரண்டு முறை முதலைவராக அவர் இருந்ததை
மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே அவருக்குப்
பதில் இன்னொருவர் என்ற பேச்சுக்கே இடமில்லை
என்று கறாராகச் சொன்னார் நாயுடு. இப்போது
எந்த ரிஸ்கும் எடுக்க முடியாது என்ற நாயுடுவின்
கருத்தில் உள்ள உண்மை சசிகலாவை அமைதிப்
படுத்தியது.

பாஜகவைப் பொறுத்த மட்டில் தமிழக ஆட்சி என்பது
அவர்களின் அஜெண்டாவிலேயே இல்லாத ஒன்று.
சட்ட மன்றத்தில் குறைந்தது 20 உறுப்பினர்கள்
இருந்தால்தான், பாஜகவால் கட்சித் தாவலை
ஊக்குவித்து ஆதாயம் அறுவடை செய்ய முடியும்.
ஒவ்வொரு சட்ட மன்றத்திலும் பூஜ்யம் என்ற அளவில்
தொடர்ந்து இருந்து வரும் பாஜக, தமிழக ஆட்சி
குறித்து அக்கறைப் படுகிறது என்பதே அப்பட்டமான
பொய். அதிமுகவின் 37 மக்களவை உறுப்பினர்கள்
மற்றும் 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீதுதான்
பாஜகவுக்கு அக்கறை.   அவர்களின் ஆதரவை உறுதி
செய்வது மட்டுமே பாஜகவின் உடனடி அஜெண்டா ஆகும்.
**************************************************************




சோனியாவுக்கு வாய்த்த மன்மோகன் போன்று
சசிகலாவுக்கு ஓபிஎஸ் அமையவில்லை. எனவே
சூழ்நிலை கனியும்போது, ஓபிஎஸ்சை அகற்றி விட்டு,
தான் அந்த இருக்கையில் அமர வேண்டும் என்பது
சசிகலாவின் விருப்பம்.

அதிமுக உடையுமா? நிச்சயம் உடையும். எப்போது
என்பதுதான் கேள்வி. தற்போது அதிமுகவின்
உள்முரண்பாடுகள் மேற்பரப்புக்கு வராமல்
ஆழத்திலேயே கிடக்கின்றன. "ஒய்யாரக் கொண்டையாம்
தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்"
என்ற நிலையில்தான் அதிமுக உள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா டான்சி வழக்கு காரணமாக
பதவி இழந்தபோது, சசிகலாவை முதல்வர் ஆக்க
ஆளுநரிடம் கோரிக்கை வைத்தபோது, அன்றைய ஆளுநர்
ரங்கராஜன் ( முன்னாள் ரிசர்வ் வாங்கி கவர்னர்)
அதற்கு மறுத்தார். காரணம் சசிகலா சட்ட மன்ற
உறுப்பினராக இல்லை என்பதுதான்.
**
மேனன் இறந்தபோது, ஜானகி ராமச்சந்திரனை முதல்வர்
ஆக்கிய அன்றைய ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு
மேற்கொள்ளுமாறு பணித்தார். அந்த நம்பிக்கை
வாக்கெடுப்பில் ஜானகி அரசு தோற்றது.
**
தற்போது, ஜெயா மறைவின் பின்னர், சசிகலாவை
ஆளுநர் முதல்வர் ஆக்கினால் , அவர் நம்பிக்கை
வாக்கெடுப்பை வலியுறுத்தக் கூடும். இதெல்லாம்
சிக்கலை உருவாக்கும். ஆனால் ஓபிஎஸ் ஏற்கனவே
முதலமைச்சரின் துறைகளைக் கவனித்து வருவதால்,
எந்த விதமான நம்பிக்கை வாக்கெடுப்பும்
தேவையற்றதானது. இதை நன்கறிந்த நடராசன்
தன மனைவி சசிகலாவை சம்மதிக்க வைத்தார். 


ஆளுநரின் discretionary powers குறித்த புரிதல் இருப்பது
நல்லது. அத்தகைய புரிதல் இக்கட்டுரையைப்
புரிந்து கொள்வதில் உதவி செய்யும். புதுச்சேரி
முதல்வர் நாராயணசாமி முதல்வரான சூழல் வேறு.

சற்றுப் பொறுங்கள். விளக்கம் தருகிறேன்.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக