வெள்ளி, 9 டிசம்பர், 2016

இறந்த உடலைப் பதப்படுத்தல் (EMBALMING)
என்றால் என்ன? ஜெயலலிதாவின் உடல்
எம்பாமிங் செய்யப் பட்டுள்ளதா?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
இறந்த உடல் அழுகத் தொடங்கும். உடல் அழுகுவது
நோயை உருவாகும். இந்த நோய் தொற்றிக் கொள்ளும்
தன்மை உடையது. எனவே உடல் அழுகுவதையும்
அதனால் நோய் தொற்றுவதையும் தடுக்க, இறந்த
உடல் பதப்படுத்தப் படுகிறது. இதற்கு பதனப்படுத்திகள்
(preservatives) என்னும் வேதிப்பொருட்கள் பயன்படுகின்றன.
ஆக, இறந்த உடலை அழுகாமலும் நோய் தொற்றாமலும்
வைத்திருக்கும் பொருட்டு அதை பதப் படுத்துவது
பதப்படுத்தல் (embalming) எனப்படும்.

பதப்படுத்தல் என்பது நவீன அறிவியல் வளர்ந்த பிறகே
வழக்கத்திற்கு வந்த ஒன்று அல்ல. இது உலகம் முழுவதும்
தொன்று தொட்டு இருப்பது. இந்தியாவிலும் இந்த வழக்கம்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கம்ப ராமாயணத்தில், அயோத்தியா காண்டத்தில்
தைலமாட்டு படலம் என்று ஒரு படலம் உண்டு. தைலம்
என்றால் எண்ணெய் என்று பொருள். தசரதன் இறந்தபோது,
பரதனும் சத்ருக்கனும் நாட்டில் இல்லை. அதாவது
அயோத்தியில் இல்லை. அவர்கள் திரும்பி வரும் வரை,
தசரதனின் உடல் எண்ணெய் முழுக்குச் செய்யப்பட்டு
பதனப் படுத்தப்பட்டு இருந்தது என்று கம்பர்
குறிப்பிடுகிறார். வாசகர்கள் தைலமாட்டு படலத்தின்
செய்யுட்களைப் படிப்பது நல்லது.

ஊறுகாய் தயாரிப்பில் பயன்படும் எண்ணெய், உப்பு
ஆகியவை சிறந்த காப்புப் பொருட்களே (preservatives).

நவீன அறிவியலில், வேதிப்பொருட்கள் மூலம் இறந்த
உடல் பாதுகாக்கப் படுகிறது. இதில் மெத்தனால்
(methanol) மிகவும் அதிகமாகப் பயன்படுகிறது.
மெத்தனால் என்ற ஆர்கானிக் பொருளின் அதிகாரபூர்வ
வேதியியல் பெயர்  (IUPAC name) Formaldehyde ஆகும். இது
நிறமற்ற ஒரு வாயு (gas) ஆகும். இந்த வாயுவை நீரில்
கரைத்தால் கிடைக்கும் திரவத்தின் (aqueous solution)
பெயர் பார்மலின் (formalin) ஆகும்.

ராஜேஷ் குமார் எழுதிய பல்வேறு துப்பறியும் நாவல்களில்
இறந்த உடல்கள் பார்மலின் திரவத்தில் முக்கி வைக்கப்
பட்டு இருந்ததாக நிறையவே எழுதி உள்ளார். அதே
திரவம்தான் இது.

குறுகிய கால உடல் காப்பு (short time preservation) என்னும்போது,
பெரிதும் பார்மல்டிஹைட் பயன்படுகிறது. இறந்த
உடலில் உள்ள ரத்தம், நிணநீர் உள்ளிட்ட திரவங்கள்
வெளியேற்றப்பட்டு, பார்மல்டிஹைட் உட்செலுத்தப்
படும். இதன் மூலம் உடல் அழுகாமல் பாதுகாக்கப்
படுகிறது.

வெறுமனே பார்மல்டிஹைட் செலுத்துவது மட்டும்
எம்பாமிங் ஆகாது. இது பல்வேறு கூறுகளைக்
கொண்டது.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஜெயலலிதாவின்

உடல் எம்பாமிங் செய்யப் பட்டுள்ளதா அல்லது
குறுகிய கால உடல்காப்பு ( short time preservation) மட்டும்
செய்யப் பட்டதா? இக்கேள்விக்கு அப்பல்லோ
மருத்துவர்கள் மட்டுமே பதிலளிக்க இயலும்.

யூகத்தின் அடிப்படையிலோ அல்லது அனுமானத்தின்
அடிப்படையிலோ இக்கேள்விக்கு நியூட்டன் அறிவியல்
மன்றம் பதிலளிக்க விரும்பவில்லை. எனினும்,
ஜெயலலிதாவின் இறந்த உடல் காட்சிக்கு வைக்கப்
படும் என்பது காமன் சென்ஸ் என்பதால், அப்பல்லோ
நிர்வாகம், கண்டிப்பாக ஏதேனும் ஒரு வேதியியல்
காப்புப் பொருளை (preservative) பயன்படுத்தி
இருக்கக் கூடும்.

அது  எம்பாமிங் என்ற வகையில் அடங்கியதா  
இல்லையா என்பதை அப்பல்லோ நிர்வாகமோ
அல்லது துறை சார் நிபுணர்களோ மட்டுமே கூற இயலும்.

**********************************************************************            
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக