செவ்வாய், 27 டிசம்பர், 2016

கழற்றி எறியப்பட்ட ஆணுறையாக மநகூ!
வைகோவின் புது அவதாரம்!
(அரசியல் ஆய்வுக் கட்டுரை)
-----------------------------------------------------------------------------
நந்த வனத்தில் ஓர் ஆண்டி--அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-- அதைக்
கூத்தாடிக்  கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

என்பது போல மக்கள் நலக் கூட்டணியை உடைத்து
எறிந்து விட்டார் வைகோ.

மக்கள் நலக் கூட்டணியை அமைத்தபோது
திமுக--அதிமுகவுக்கு மாற்று இதுதான் என்று வைகோ
உரக்கக்கூவினார். தேர்தல் பரப்புரையின்போது,
அதிமுகவுக்கும் மநகூவுக்கும் இடையில்தான் போட்டி
என்றும் திமுகவுக்கு மூன்றாம் இடம்தான் என்றும்
பலூனைப் பெரிதாக ஊதினார்.

ஆனால் மக்கள் சரியான பாடம் கற்பித்தனர். மநகூவின்
முதல்வர் வேட்பாளர் டெப்பாசிட் இழந்தார். இதே
கதிதான் தனக்கும் என்று முன்னுணர்ந்த வைகோ
கோவில்பட்டியில் போட்டியிடாமல் ஒதுங்கினார்.

தற்போது மநகூ தேவையில்லை என்று அதில் இருந்து
விலகியுள்ளார் வைகோ. அவரைப் பொறுத்த மட்டில்
மநகூ என்பது பயன்படுத்தப்பட்ட ஒரு நிரோத்.
எனவே அதைக் கழற்றி வீசி விட்டார்.

இந்த முடிவின் மூலம் வைகோவின் மீதான நம்பகத்
தன்மை முற்றிலுமாக நீங்கி விட்டது. இனி மக்களோ
பிற கட்சிகளோ அவரை எள்ளளவும் நம்ப மாட்டார்கள்.
இனி எந்தவொரு அணியையும் அவரால் அமைக்க
இயலாது. மீறி அமைத்தாலும் அது மக்களால் எடுத்த
எடுப்பிலேயே புறக்கணிக்கப் படும்.

தேர்தல் தோல்வி காரணமாக மநகூவை கலைக்க
வேண்டியதில்லை, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்
வரை, 2019 வரை, குற்றுயிரும் குலையுயிரும் ஆகவேனும்
அதை  உயிருடன் வைத்திருக்கலாம். அப்படி
வைத்திருப்பதால் பெரும் ஆதாயம் எதுவும்
விளையப்  போவதில்லை என்றாலும், வைகோ
மீதான நம்பகத் தன்மை மக்களிடம் எஞ்சி இருக்கும்.

வைகோ நிலையில்லாதவர், அடிக்கடி
புத்தி தடுமாறுபவர் என்பது அரசியல் அரங்கில்
உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. இவர் மீதான
கோமாளி பிம்பம் மேலும் உறுதியாகி இருக்கிறது.

வைகோ ஒரு அரசியல் தலைவர் அல்ல, மாறாக
ஒரு அரசியல் புரோக்கர் என்ற எண்ணம் மக்களிடம்
வலுப்பட்டு வருகிறது. கிண்டலுக்காகச் சொல்லப்
பட்ட புரோக்கர் என்ற வாசகம், வைகோவின்
நடத்தையால்   அவரின் பண்பை, ஆளுமையைக்
குறிக்கும்  வாசகமாக நிலைபெற்று விட்டது.

வைகோ ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?
அவரின் எதிர்காலத்  திட்டம்தான் என்ன?

வைகோவின் அரசியல் திவால் ஆகிப்போன ஒரு
அரசியல். அது அவரை ஒரு முட்டுச் சந்துக்குள்
கொண்டு வந்து நிறுத்தி விட்டது. ஒரு ராஜ்யசபா
எம்.பி பதவி கிடைத்தால் இந்த முட்டுச் சந்தில்
இருந்து மீண்டு விடலாம் என்று நம்புகிறார் வைகோ.

அதை அவருக்குத் தருவார் யாருமில்லை. என்றாலும்
தற்போதைய சூழலில், பாஜக அல்லது அதிமுக என்னும் இரண்டு கட்சிகள் மூலமாக மட்டுமே அதை அவர்
பெற முடியும். இதுதான் யதார்த்தம். எனவே அதை
நோக்கி அவர் காய் நகர்த்துகிறார்.

எங்களால் ராஜ்யசபா தர முடியாது என்று கைவிரித்து
விட்டது பாஜக. அதே நேரத்தில், அதிமுகவிடம்
இருந்து ஒரு ராஜ்யசபா இடத்தை வைகோவுக்காகப்
பெற்றுத் தருவதில் பாஜகவுக்கு ஆட்சேபம்
எதுவும் இல்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எழுந்துள்ள
அசாதாரண சூழலின் விளைவாக, அதிமுக தனக்கு
கதவை அடைக்காது என்று வைகோ கணக்குப்
போடுகிறார் வைகோ. சசிகலா குழுமத்திற்குத்
தேவையான லாபியை டெல்லியில் செய்வதற்கு
அதிமுக தரப்பில் தோதுவான ஆள் எவரும் இல்லை.
தம்பிதுரையால் பெரிய அளவில் எதுவும் செய்ய
இயலாது. எனவே ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை
தன்னால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை
கொண்டுள்ளார் வைகோ.

என்னதான் ரகசியமாக வைத்திருந்தாலும்,
வைகோவின் காய் நகர்த்தல்கள் அவரின்
திட்டங்களை அம்பலப் படுத்தி வருகின்றன.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான அவரின்
சந்திப்புகள், பிரதமர் மோடியை அண்மையில்
அவர் சந்தித்தது, சசிகலா கணவர் நடராசனை
அவர் ரகசியமாகச் சந்தித்து வருவது ஆகிய
செயல்கள் அவரின் திட்டங்களை அம்பலப் படுத்தி
விடுகின்றன.

சசிகலா வைகோவை நம்புவாரா? நம்புவார்.
வைகோவின் ஊசலாட்டம், புத்தி தடுமாற்றம்,
எடுத்த முடிவில் ஊன்றி நிற்காமல் நழுவி
விடுதல் ஆகிய கல்யாண குணங்கள் அவரிடம்
இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தில் அவர்
பாறையைப் போல் உறுதியுடன் இருந்து வருகிறார்.
அதுதான் கலைஞர் எதிர்ப்பு.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, பத்து இருபது
எம்.எல்.ஏக்கள் திமுகவுக்குச் சென்று விட்டாலோ
அல்லது முன்பு கட்சிப் பிளவினால் ஜானகி ஆட்சி
கவிழ்ந்தது போல, ஓபிஎஸ்சின் ஆட்சி கவிழ்ந்து
விட்டாலோ மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விடும்
சூழல் நிகழ்கால  அரசியலில் உள்ளது.

திமுக எதிர்ப்பில் ஊறிப்போனவர் வைகோ. எனவே
எந்த நிலையிலும் திமுக ஆட்சிக்கு வருவதை
வைகோ விரும்ப மாட்டார் என்று சசிகலாவும்
பாஜகவும் நம்புகின்றனர். இந்த விஷயத்தில்
வைகோவை எல்லோரும் திடமாக நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கை மட்டும்தான் வைகோவின் ஒரே
மூலதனம். வைகோவின் திமுக எதிர்ப்பில் யாரும்
சந்தேகம் கொள்வதில்லை. இந்த அஸ்திரத்தை
வைத்துக் கொண்டுதான், ஒரு ராஜ்யசபா எம்.பி
சீட்டுக்காக வைகோ காய் நகர்த்திக் கொண்டு
வருகிறார். மநகூ அவரின் பாதையில் உள்ள
முள்ளாக இருப்பதால், அதை வெட்டித் தூர எறிந்து
விட்டார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அமர்சிங்கை
முலாயம்சிங் யாதவ் மீண்டும் சேர்த்துக்
கொண்டதைப்  போல, பாஜகவும் தன்னை ஒரு
ஏஜெண்டாக ஏற்றுக் கொள்ளும் என்று வைகோ
நம்பிக்கையுடன் இருக்கிறார். தாயுள்ளத்தோடு
சசிகலா தமக்கு ஒரு எம்.பி பதவி வழங்குவார்
என்றும் வைகோ கனவு காண்கிறார்.

ஒருவேளை வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா
கிடைக்கலாம். பாஜக அல்லது அதிமுக அதை
அவருக்கு வழங்கலாம். ஆனால் அதற்கு அவர்
கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகமாக
இருக்கும். அந்த விலை அவரின் கட்சியை காவு
கேட்கும். என்றாலும் தீர்க்கதரிசி ஆப்ரஹாம் தன்
மகனையே பலி கொடுக்க முன்வந்து தன்
விசுவாசத்தை நிலைநாட்டியது போல, வைகோவும்
மதிமுகவைப் பலி கொடுத்து, தன் விசுவாசத்தை
நிலைநாட்டத்  தயங்க மாட்டார்.

ஆக, வைகோ என்னும் ஒரு மாபெரும் அரசியல்வாதி
ஒரு தரகராக மறுவாழ்வு பெறுகிறார். மதிமுக என்னும்
கொள்கைப் பிடிப்புள்ள ஒரு திராவிடக் கட்சியானது
ஒரு ராஜ்யசபா இடத்திற்காக, தன் இறுதி மூச்சை
விடப் போகிறது.

விசுவாசித்தவர்கள் தேவனின் மகிமையைக்
காண்பார்கள்.
*******************************************************************   
 
    

   

 




       


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக