வெள்ளி, 2 டிசம்பர், 2016

தங்க நகைகளுக்கு உச்ச வரம்பு இல்லை!
விரும்பிய அளவு தங்கம் வாங்கத் தடையில்லை!
நிதி அமைச்சக உத்தரவு விளக்கம்!
-------------------------------------------------------------------------------------------
ஒரு தனி நபர் தான் விரும்பும் அளவுக்கு தங்கம்
வாங்கிக் கொள்ளலாம். எவ்வளவு வேண்டுமானாலும்
வாங்கிக் கொள்ளலாம். அதற்குத் தடை எதுவும் விதிக்கப்
படவில்லை. 100 சவரன் தங்கம் வாங்க விரும்பினாலும்
சரி, 500 சவரன் தங்கம் வாங்க விரும்பினாலும் சரி,
வாங்கிக் கொள்ளலாம். நிதி அமைச்சக உத்தரவு
தடுக்கவில்லை.

நரசிம்மராவ் காலத்தில் என்ன சட்டமோ, மன்மோகன் சிங்
காலத்தில் என்ன சட்டமோ அதே சட்டம்தான் இப்போதும்
நீடிக்கிறது. இச்சட்டத்தில், ஒருவர் வாங்க விரும்பும்
தங்கத்தின் அளவு குறித்தோ அல்லது வைத்திருக்கும்
தங்கத்தின் அளவு குறித்தோ எவ்வித மாற்றமும்
செய்யப் படவில்லை.

ஒரு கம்யூனிச நாட்டில்தான் ஒருவர் எவ்வளவு தங்கம்
வைத்திருக்கலாம் என்பதற்கு உச்ச வரம்பு விதிக்கப்
படும். அதிகமான தங்கம் ஒருவரிடம் இருந்தால்,
அதை அரசு கைப்பற்றி விடும். ஏனென்றால். தனிச்
சொத்து உரிமையை கம்யூனிசம் ஏற்பதில்லை.
கம்யூனிச சமூகத்தில் தனிச்சொத்து உரிமை கிடையாது.
கம்யூனிசம் என்றாலே தனியுடைமை ஒழிப்புத்தான்.
அங்கு எல்லாமே பொதுடைமை. Abolition of private property
என்பதுதான் கம்யூனிசத்தின் ஆதாரக் கொள்கை.
தங்கத்தை மஞ்சள் பிசாசு என்று வர்ணிப்பார்
காரல் மார்க்ஸ். ரஷ்யாவிலும் சீனாவிலும் கியூபாவிலும்
பணமுதலைகளின் சொத்துக்கள் பூராவையும்
அரசு கைப்பற்றிக் கொண்டது.

ஆனால், இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு. இது
தனிச்சொத்து உரிமையை ஏற்றுக் கொண்ட நாடு.
எனவே தனி நபர் வாங்கக் கூடிய அல்லது வைத்து
இருக்கக் கூடிய தங்கத்திற்கு இங்கு தடை எதுவும்
கிடையாது. உச்ச வரம்பும் கிடையாது.

அப்படியானால், நிதி அமைச்சக உத்தரவு கூறுவது
என்ன? அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள்
அறிவிக்கப் படாத வருமானம் ( undisclosed income)
உடையவர்கள். அவர்கள் வரி செலுத்தாமல் ஏய்த்தவர்கள்.
அவர்கள் தங்களிடம் உள்ள தங்க இருப்புக்கு
விளக்கம் சொல்ல வேண்டும். கணக்கு காட்ட வேண்டும்.

அப்போது, பாரம்பரிய நகைகள் போக, பெண்களுக்கான
நகைகள் போக. ஒரு ஆணுக்கு பத்து சவரன் என்ற
கணக்கில் வருகிற நகை போக, மீதியிருக்கும்
நகைக்கு கணக்கு காட்ட வேண்டும். வரி செலுத்த
வேண்டும்.

கணக்கு காட்ட முடியாமல் போனால், அரசு விதிக்கும்
வரியைச் செலுத்தாமல் போனால், அரசு அத் தங்கத்தைக்
கைப்பற்றும். அதுதான் நிதியமைச்சக உத்தரவு.

இதில் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கவலைப்பட
ஒன்றுமில்லை. நடுத்தர வர்க்கத்திற்கும் கவலைப்
பட எதுவும் இல்லை. கறுப்புப்பணம் ரொக்கமாகவும்
இருக்கிறது; தங்கமாகவும் இருக்கிறது. ரூபாய் நோட்டு
மதிப்பிழப்பு மூலம் ரொக்கமான கறுப்புப்பணம்
வெளிக்கொண்டு வரப்பட்டு வரி வரவு ஏற்பட்டது.
இப்போது கணக்கு காட்டாத தங்கம் வெளிக் கொணரப்
பட்டு, வரி வரவு ஏற்படும்.
**********************************************************************
பாரம்பரிய நகை என்பது முன்னோர்களின் நகை.
பாட்டி, அம்மா, பேத்தி என்று இந்த நகைகள் தலைமுறை
தலைமுறையாக, அடுத்த வாரிசுகளுக்கு கொடுக்கப்
படுகின்றன. இவை பழைய நகையாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. நவீன டிசைனில் உள்ள
தங்க நகை என்றாலும் அது பாரம்பரிய நகை என்ற
வகைப் படுத்தலில் வரும். எங்க பாட்டி கொடுத்த
அட்டியலை நான் இரட்டை வடம் சங்கிலியாகச்
செய்து உண்டேன் என்று சொல்லலாம். அது ஏற்கப் படும்.
**
பாரம்பரிய நகை என்பதற்கு ஆதாரம் காட்டி ஆக
வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அது அதன்
முக மதிப்பில் (face value) ஏற்றுக் கொள்ளப் படும்.
அதாவது ஒரு சாதாரண நடுத்தர வர்க்கம் அல்லது
வறிய  குடும்பம் என்றாலும் கூட, அவர்களிடம்
பாரம்பரிய நகை உண்டு என்று இந்தியச் சட்டங்கள்
ஏற்றுக் கொள்கின்றன. ஏனெனில் இந்தியா ஒரு
நிலவுடைமைச் சமூக அமைப்பைக் கொண்ட நாடு
(feudal society). ஒரு முதலாளித்துவ சமூகத்தில்
பாரம்பரிய நகைகளுக்கு இடம் கிடையாது. அங்கு
தங்கம் என்பது ஒரு usable commodity; அவ்வளவே.   


சாதி என்பது இந்தியாவில் எல்லா விஷயங்களிலும்
இயல்பாகக் கலந்திருக்கும். தற்போது, மதமும்
அதுபோல எல்லா விஷயங்களிலும் தலை காட்டுகிறது.
இந்திய சமூகம் ஒரு நிலவுடைமைச் சமூகம். எனவே
சாதி மதம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும்
பேச முடியாது. எனவேதான் உலகிலேயே மிக
அதிகமாக அடையாள அரசியல் செயல்படும்
ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. இது சமூகத்தின்
நிலைமை.
**
அதே நேரத்தில், சட்டங்கள் எல்லாம் சாதிப் பாகுபாட்டை
எதிர்ப்பவை. எனவே சட்டப்படி சாதி அடிப்படையில்
ஒரு விஷயத்தை மதிப்பிட முடியாது. உதாரணமாக,
இவர் ஒரு தலித் என்பதால் இவரிடம் பாரம்பரிய
நகைகள் இருக்க வாய்ப்பில்லை என்று தங்கத்தை
மதிப்பிடும் அதிகாரி சொல்ல முடியாது. அந்த
அடிப்படையில் வரி போட முடியாது.

 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக