புதன், 16 நவம்பர், 2016

எந்தக் கடனையும் ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்யவில்லை!
பொய்யான அவதூறுகளுக்கு  ஸ்டேட் வங்கியின்
தொழிற்சங்கங்கள் கண்டனம்!
ஸ்டேட் வாங்கி ஒருநாளும் திவால் ஆகாது!
----------------------------------------------------------------------------------------------------------
வாராக் கடன்கள் என்ற இனத்தில் ரூ 7016 கோடியை
ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்து விட்டதாக ஒரு
பொய்ச் செய்தி வேகமாகப் பரவி வருகிறது.

விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ்
நிறுவனத்தின் வாராக்கடன் ரூ 1201 கோடி உட்பட,
63 நிறுவனங்களின் வாராக் கடன் தொகையான
ரூ 7016 கோடியை ஸ்டேட் வங்கி நிர்வாகம் தள்ளுபடி
செய்து விட்டதாக பொய்ச் செய்திகள் தீவிரமாக
உலா வருகின்றன.

ஸ்டேட் வங்கி நிர்வாகம் அப்படி எந்தக் கடனையும்
தள்ளுபடி செய்யவில்லை என்பதே உண்மையாகும்.
மேலும் அத்தகைய வாராக் கடன்களை வசூலிக்கத்
தேவையான எல்லா முயற்சிகளையும், சட்ட
நடவடிக்கைகள் உட்பட முடுக்கி விடப் பட்டு
இருப்பதாகவும் ஸ்டேட் வங்கி தரப்பில், வங்கி
நிர்வாகமும் தொழிற்சங்கத் தலைமையும்
கூட்டாகத் தெரிவிக்கிறார்கள்.

WRITE OFF என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வங்கியியல்
மொழியில் (banking language) தள்ளுபடி (waiver) என்று
பொருள் அல்ல என்று உறுதியுடன் தெரிவித்தனர்
நாங்கள் தொடர்பு கொண்ட AIBEA மற்றும் BEFI
தொழிற்சங்கத் தலைவர்கள்.

ரொக்க வசூலுக்கு (cash collection) பயன்படும்
இயந்திரங்களை அன்றாடம் zeroise செய்ய வேண்டும்.
அதாவது பூஜ்யத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
இது அன்றாட நடைமுறை. கிட்டத்தட்ட இதுபோன்ற
நடைமுறைதான் write off செய்வது. இவ்வாறு write off
செய்வதால், கடனைத் தள்ளுபடி செய்வதாகப்
பொருள் கொள்ளக் கூடாது. ஆனால் இந்தியா போன்ற
கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய நாட்டில்,
சமூக விரோதிகள் இவ்வாறு அவதூறுகளையும்
பொய்களையும் பரப்புவது சுலபமானது.

ஸ்டேட் வங்கி என்பது இந்தியாவின் தலைமையான
பொதுத்துறை நிறுவனம். தனியார்மயக் கைக்கூலிகளும்
சமூக விரோதிகளும் பொதுத்துறை மீது திட்டமிட்ட
முறையில் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு பொதுத்துறை
நிறுவனமான BSNL மீது "திவாலாகும் BSNL" என்ற
தலைப்பில் அவதூறுகள் பரப்பப் பட்டன. கடைசியில்
அவதூறு பரப்பிய நாச சக்திகள்தான் திவால்
ஆனார்களே தவிர, BSNL திவால் ஆகவில்லை;
ஒருநாளும் திவால் ஆகாது.

அதேபோல், வாராக்கடன்களை ஸ்டேட் வங்கி
தள்ளுபடி செய்து விட்டதாகவும், அதனால்
ஸ்டேட் வங்கி திவால் ஆகிவிடும் என்றும்
சமூக விரோதிகள் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
ஸ்டேட் வங்கி ஒருநாளும் திவால் ஆகாது என்று
அடித்துக் கூறுகிறோம்.

இந்த நாட்டின் அமைப்புரீதியாகத் திரண்ட தொழிலாளி
வர்க்கம், இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை
அழிவில் இருந்தும், தனியார்மயத் தாக்குதலில்
இருந்தும் காத்து வருகிறது. தொடர்ந்து காத்து வரும்.

ஒவ்வொரு வேலைநிறுத்தத்தின் போதும்,
நிர்வாகம்-தொழிற்சங்கம் பங்கேற்கும் இருதரப்புப்
பேச்சு வார்த்தையின் போதும், வாராக் கடன்களை
வசூலிப்பதில் தொழிற்சங்கங்கள் எவ்வளவு
அழுத்தம் கொடுக்கின்றன என்பது தொழிற்சங்க
முன்னோடிகளுக்குத் தெரியும்.

எனவே வாராக் கடன்களை வசூலிப்பதில் ஸ்டேட் வங்கி
பின்வாங்காது. அப்படிப் பின்வாங்குவதற்கு
தொழிற்சங்கங்கள் அனுமதிக்காது.
-------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ஸ்டேட் வங்கியின் இன்பெக் தொழிற்சங்கம்

 காங்கிரஸ் சங்கமாகும். அவர்கள் விளக்கம் அளிக்காமல்
மௌனமாக இருப்பதால், அவர்களையும் சேர்த்து
AIBEA BEFI சங்கங்கள் சுமக்க வேண்டி உள்ளது.
*********************************************************************                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக