புதன், 2 நவம்பர், 2016

தீபாவளியும் போலிப் பகுத்தறிவுவாதிகளின்
மூடத்தனமும்!
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
தொலைதொடர்புத் துறையில் வேலை கிடைத்துப்
பணியாற்றிய அந்த முதல் ஆண்டில் தீபாவளியன்று
HOLIDAY DUTY போட்டு இருந்தார்கள். மகிழ்ச்சியுடன்
பணிக்குச் சென்று, உணவு இடைவேளையில் வெளியில்
வந்து பார்த்தால் ஒரு ஓட்டலும் இல்லை. பூக்கடை தொடங்கி
கடற்கரை ரயில் நிலையம் வரை எந்த ஓட்டலும் இல்லை.
பிறகு என்ன செய்வது? டீக்கடையில் பன்-பட்டர்-ஜாமும்
டீயும் சாப்பிட்டு விட்டு பணியைத் தொடர்ந்தேன்.

அடுத்த ஆண்டு டியூட்டி சார்ட் பிரகாரம் எனக்கு தீபாவளியன்று
விடுமுறைப் பணி அளிக்கப்படவில்லை. ஆனால், நிறையப்
பெண்கள் வேலைபார்க்கும் எங்கள் துறையில், தீபாவளி
டியூட்டி போடப்பட்ட பெண்கள், தங்களின் டியூட்டியைப்
பார்க்குமாறு (look on) கேட்டுக் கொண்டதன்பேரில், தீபாவளி
டியூட்டி செய்தேன். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பெண்களின்
கோரிக்கையை ஏற்று, தீபாவளியன்று டியூட்டி பார்ப்பது
எனக்கு வழக்கமாகிப் போனது.

ரயில் பயணம் செய்வோர் முன்கூட்டியே பெர்த்
ரிசர்வ் செய்வதைப் போல, நவம்பரில் வரும்
தீபாவளிக்கு, ஆகஸ்ட் மாதமே என்னிடம் கோரிக்கை
வைத்தவர்களால் நான் திணறித்தான் போனேன்.

தீபாவளி டியூட்டி ஏற்பாடு செய்பவர்கள் பின்வருமாறு
செய்வார்கள்: முந்திய நாள் நைட் டியூட்டி (இரவு 8 மணி
முதல் மறுநாள் காலை 8 மணி வரை), அதைத் தொடர்ந்து
தீபாவளிக்கான டியூட்டி (காலை 7 முதல் 15 மணி வரை)
என்று ஏற்பாடு செய்வார்கள். இவ்வாறு பல தீபாவளி
நாட்கள்  அலுவலகத்திலேயே இனிமையாகக்
கழிந்திருக்கின்றன.ஒரு கட்டத்தில் நான் கடவுளுக்குச்
சமமாகக் கருதப் பட்டேன்.

ஒருமுறை தீபாவளி டியூட்டியின்போது, அலுவலகத்தின்
பழைய ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தபோது, தொடர்ந்து
25 ஆண்டுகளாக நான் தீபாவளியன்று டியூட்டி செய்திருப்பதை
அறிய நேர்ந்தது. இதைத் தொடர்ந்து இதற்காக ஒரு விழா
எடுக்கப் பட்டது. அலுவலகத்தின் மூத்த தோழர் எஸ்,
வெங்கட்ராமன் அண்ணாச்சி (SFMSS CONTROL ROOM)
விழா நடத்தி என்னை கௌரவித்தார்.

நிர்வாகம் என்னை General Shiftக்கு மாற்றும் வரை (10-18 duty)
எல்லா தீபாவளிகளிலும் தவறாமல் டியூட்டி பார்த்தேன்.
General shiftகளின்போது, தீபாவளியன்று டியூட்டி பார்க்க
இயலாமல் போனதை ஒரு பேரிழப்பாகவே நான் உணர்ந்தேன்.

என் பள்ளிப் பருவத்திலேயே எனக்கு  தீபாவளி மீது, அதன்
கவர்ச்சியையும் மீறி, ஒரு இளக்கார உணர்வு இருந்தது.
அதற்குக் காரணம் எங்கள் ஊரின் (நெல்லை, வீரவநல்லூர்)
திக-திமுக தோழர்களுடன் எனக்கிருந்த நெருக்கம். பின்னர்
கல்லூரிக் காலத்தில், மார்க்சிஸ்ட் தலைவர்களுடன்
நெருங்கிய தொடர்பில் இருந்தேன்.

பின்னர், தொலை தொடர்புத் துறையில் பணியாற்றிய
போது, தொழிற்சங்க இயக்கத்திலும் மார்க்சிய லெனினிய
இயக்கத்திலும் வேலை செய்ததால், பண்டிகைக்
கொண்டாட்டங்களுக்கு எதிரான மனநிலை மென்மேலும்
உறுதிப் பட்டது.

பத்தாண்டுகளுக்கு முன், மானுடவியல் சமூகவியல் குறித்து
நிறைய நூல்களைப் படித்தேன். அயோத்திதாசரின் நூல்களையும்
படித்தேன். மானுட சமூகத்தில் ஒரு பண்டிகை எப்படித்
தோன்றுகிறது, நிலைபெறுகிறது என்பது குறித்த  அறிவியல்
பூர்வமான விளக்கங்கள் அந்நூல்களில் இருந்தன.

தீபாவளியின் மீது போர்த்தப் பட்டிருக்கும் நரகாசுரன் கதை
ஒரு அற்பத்தனமான மூடத்தனம் நிறைந்த ஒரு கட்டுக்கதை.
இது ஒரு அண்மைக்கால இடைச்செருகல். நரகாசுரனோடு
எவ்விதத் தொடர்பும் இல்லாமலேயே தீபாவளியைத்
தமிழர்கள் கொண்டாடி இருக்கின்றனர் என்பதை அயோத்தி
தாசரும் சில தமிழறிஞர்களும் உறுதிப் படுத்தி உள்ளனர்.
இதுவே தீபாவளி குறித்த உண்மை வரலாறு ஆகும்.

தீபாவளியைக் கொண்டாடுபவருக்கும் அதை எதிர்ப்பவருக்கும்
நரகாசுரன் கதையே அடிப்படையாக இருக்கிறது.
மத மூடர்களும் போலிப் பகுத்தறிவுவாதிகளும், நரகாசுரன்
கதையை நம்புவதன் மூலம் சமமான அளவு மூடத்தனம்
கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.
********************************************************************   





              


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக