புதன், 16 நவம்பர், 2016

பங்கேற்பு ஆவணம் என்றால் என்ன?
Participatory Note என்றால் என்ன?
கறுப்புப் பணத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டா?
---------------------------------------------------------------------------------------------
நரசிம்மராவ் 1991-96 காலக்கட்டத்தில், இந்தியப் பிரதமராக
இருந்தார். டாக்டர் மன்மோகன்சிங் அவரிடம்
நிதியமைச்சராக இருந்தார். இவர்கள் இருவரின்
காலத்தில்தான் இந்தியப் பொருளாதாரம் முற்றிலுமாக
வலதுசாரிப் பொருளாதாரமாக மாற்றப் பட்டது.
உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகியவை
நடைமுறைப் படுத்தப்பட்டன. அதுவரை இருந்து
வந்த, உச்சரிக்க மட்டுமே பயன்பட்ட சோஷலிசம்
என்னும் சொல் அறுத்து எறியப் பட்டது.

அப்போது உலக அளவில் இருந்து வந்த
"பங்கேற்பு ஆவணம்" (Participatory Note) என்ற
முறையை இந்தியாவில் 1992இல் அறிமுகப்
படுத்தினர் நரசிம்ம ராவும் மன்மோகனும்.

பங்கேற்பு ஆவணம் (Participatory Note) என்பது
வெளிநாட்டினர் இந்தியப் பங்குச் சந்தையில்
முதலீடு செய்வதை அனுமதிக்கும் ஒரு முறை ஆகும்.
FII (Foreign Institutional Investors) என்ற அமைப்பு இந்த
P Notesஐ வெளியிடுகிறது. இதன் மூலம் எந்த ஒரு
வெளிநாட்டவரும், தமது அடையாளத்தை வெளிக்
காட்டிக் கொள்ளாமல், தமது நிறுவனங்கள் பற்றிய
விவரங்களைத் தெரிவிக்காமல் இந்தியப் பங்குச்
சந்தையில் முதலீடு செய்யலாம். இந்தியப் பங்குச்
சந்தையைக் கட்டுப் படுத்தும் செபி அமைப்புக்கு
எந்த விவரமும் தெரிவிக்காமலேயே, எந்த ஒரு
வெளிநாட்டவரும் இந்தியாவில் முதலீடு செய்யலாம்.
இதற்கு அனுமதிப்பவை இந்த P Notes.
(SEBI = Securities and Exchange Board of India).

கறுப்புப்பணம் பற்றிய ஒரு வழக்கு உச்சநீதி மன்றம்
சென்றது. வழக்கு விசாரணையைத் தொடர்ந்து,
கறுப்புப் பணத்தைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வுக்
குழு (SIT) அமைக்கப் பட்டது. கறுப்புப் பணத்தின்
ஊற்றாக P Notes இருப்பது நாடு முழுவதும் அம்பலம்
ஆனது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்,
செபி அமைப்பானது P Notes மீது ஓரளவு தன்னுடைய
பிடியை ஏற்படுத்தும் நோக்கில் ஒருசில
கட்டுப்பாடுகளை விதித்தது.

என்றாலும், காங்கிரசின் நிதியமைச்சர் ப சிதம்பரமும்
சரி, பாஜகவின் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சரி,
P Notes மீது கைவைக்கப் பயந்தனர். P Notes மீது
கடிவாளம் போட்டால், அந்நிய முதலீடு வெகுவாகக்
குறைந்து விடுமோ என்று இருவருமே அஞ்சினர்.

P Notes மீது கை வைப்பது முதலாளித்துவப்
பொருளாதாரத்தில் சுலபமான ஒன்றல்ல.
கைவைக்காமல் விட்டாலும், P Notes பெருமளவு
கறுப்புப் பணத்தை உருவாக்கி, மொத்தப்
பொருளாதாரத்தையும் சீரழித்து விடும்.

"முன்னே போனால் கடிக்கும்; பின்னே வந்தால்
உதைக்கும்" என்பதுதான்  P Noteகளின் சுபாவம்.
என்றாலும், இன்றைய உலகமயப் பொருளாதாரத்தில்,
P Notesஐ இந்தியா போன்ற முதலாளித்துவப் பொருளியல்
நாடுகளால் ஒழித்து விட முடியாது. ஆனால், அவற்றைக்
கட்டுப் படுத்தலாம்; அவற்றின் மீது கடிவாளம்
இடலாம். அறிவுள்ள ஒரு நிதியமைச்சரும் மனஉறுதி
உள்ள ஒரு பிரதமரும் இருந்தால், P Noteகளுக்கு
மூக்கணாங்கயிறு போட்டு, நாம் விரும்பும்
திசையில் அவற்றைக் கொண்டு செல்லலாம்.

எனவே, P Notes ஒடுக்கப் பட வேண்டும். கருப்புப்பண
ஒழிப்பில் மெய்யான அக்கறை இருந்தால் மோடி
அரசு இதைச் செய்ய வேண்டும். பின்விளைவுகள்
இருக்கும்; மோசமாகவே இருக்கும். அவற்றை
எதிர்கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக