செவ்வாய், 15 நவம்பர், 2016

ரொக்கமாக உள்ள கறுப்புப் பணம் பூஜ்யமா?
யெச்சூரி கூறுவது உண்மையா?
-------------------------------------------------------------------------------------
கறுப்புப்பணம் என்பது ரொக்கப்பணமாக இல்லை
என்கிற பொய்மையை மக்களிடம் பரப்பி வருகிறார்கள்
பலர். கறுப்புப் பணம் ரொக்கமாக இல்லை என்கிறார்
சீத்தாராம் யெச்சூரி. ஒருவேளை அவரிடம் உள்ள
கறுப்புப் பணத்தைச் சொல்கிறாரோ என்னவோ!

திபங்கர் பட்டாச்சார்யாவும் இதையே கூறுகிறார்.
யார் இவர்? இவர் CPI ML (Liberation) குழுவின் தலைவர்.
கறுப்புப் பணமானது ரொக்கமாக, அதாவது ரூ 500,
ரூ 1000 நோட்டுகளாக இல்லை என்கிறார்கள் இவர்கள்.

இது உண்மையா? இல்லை. கறுப்புப் பணம்
ரொக்கமாகவும் இருக்கிறது என்பது உண்மை.
அப்படியானால் ரொக்கமாக உள்ள கறுப்புப் பணம்
எவ்வளவு? பூஜ்யம் என்கிறார்கள் யெச்சூரியும்
திபங்கரும். நாம் இதை மறுக்கிறோம்.

கறுப்புப்பணம் ரொக்கமாகவும் இருக்கிறது என்று
அடித்துக் கூறுகிறோம் நாம். இங்கு "ரொக்கமாகவும்"
என்பதில் ஓர் "உம்மை" இருக்கிறது. இது அனைவரின்
கவனத்திற்கும் உரியது. உம்மை பல வகைப்படும்
என்று தமிழ் இலக்கணம் பயின்றோர் அறிவர்.
இங்குள்ள வாக்கியத்தில் அது எண்ணும்மை
என்கிறோம். எண்ணும்மை என்றால் என்ன என்பது
குறித்தெல்லாம் இங்கு விளக்கப் போவதில்லை.
விளக்கம் வேண்டுவோர் பேராசிரியர் முனைவர்
ந தெய்வசுந்தரம் அவர்களிடம் பாடம் கேட்கவும்.

ரொக்கமாக உள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பது
குறித்து ரிசர்வ் வங்கியிடம் புள்ளி விவரங்கள்
உள்ளன. நாம் அவற்றையெல்லாம் சிரமப் பட்டுப்
படிக்க வேண்டாம். நம்பவும் வேண்டாம்.
ரொக்கமாக உள்ள கறுப்புப் பணத்தைக் கணக்கிட
ஒரு விதி உள்ளது. இது ஒரு கட்டை விரல் விதி
(thumb rule). இதன்படி, இந்தியாவில்,
(repeat இந்தியாவில்) உள்ள ரொக்க வடிவிலான
கருப்புப்பணத்தின் அள்வு எவ்வளவு குறைத்து
மதிப்பிட்டாலும் 10 சதத்திற்குக் குறையாது என்பதே
கட்டை விரல் விதி.

மேலும் சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்
போதோ, தீவிர அரசியல் செயல்பாடுகளின் போதோ,
நாடு தழுவிய பயங்கரவாதச் செயல்பாடுகளின் போதோ,
ரொக்க வடிவிலான கறுப்புப் பணத்தின் அளவு
அதிகரிக்கும் என்கிறது இக்கட்டை விரல் விதி.

எவ்வளவு அதிகரிக்கும்? 30 சதம் வரை அதிகரிக்கும்.
ஆக, எப்படிப் பார்த்தாலும், ரொக்க வடிவிலான
கறுப்புப் பணத்தின் அளவு குறைந்தபட்சமாக
10 சதமும் அதிகபட்சமாக 30 சதமும் மட்டுமே
இருக்கும். மீண்டும் சொல்கிறோம், இந்தக் கணக்கு
இந்தியாவைப் பொறுத்தது மட்டுமே.

ஏன் இந்தியாவுக்கு மட்டும் என்று அழுத்தம் தர
நேர்கிறது? காரணம் இதுதான். இந்தியாவில் பணப்
பரிவர்த்தனை ரொக்கமாக மட்டுமே நடைபெறுகிறது.

ரொக்கமில்லாப் பரிவர்த்தனை (cashless economy)
இந்தியாவில் மிகவும் குறைவு. அமெரிக்க, ஐரோப்பிய
நாடுகளில் ரொக்கமற்ற பரிவர்த்தனை மேலோங்கி
நிற்கிறது. இந்தியாவில் நகர்ப்புறத்தில் மட்டுமே,
படித்த இளைஞர்கள் டெபிட் கார்டுகள், கடன் அட்டைகள்,
net banking ஆகியவற்றின் மூலம் ரொக்கமற்ற
பரிவர்த்தனையில் ஈடுபடுகிறார்கள். மெத்தப்படித்த
வயதானவர்கள் net banking வேண்டாம் என்று
தவிர்த்து விடுகிறார்கள்.

SBI buddy, pay tm போன்ற ஏற்பாடுகள் குறித்து அறிந்தோரும்
அவற்றைப் பயன்படுத்துவோரும் இந்தியாவில்
மிகவும் குறைவு. அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றை
எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?

ரயில் டிக்கட் புக் பண்ணுவது, ரெட் பஸ் மூலம் பஸ்
டிக்கட் புக் பண்ணுவது, தியேட்டரில் சினிமாவுக்கு
டிக்கட் புக் பண்ணுவது, மின்சாரக் கட்டணம்,
மொபைல் கட்டணம் செலுத்துவது, துணி வாங்குவது
என்று பல்வேறு பணிகளை ரொக்கமற்ற முறையில்
(cashless) மேற்கொள்ளுவோர் இந்தியாவில் மிக மிகச்
சிலரே. எனவே, ரொக்கப் பரிவர்த்தனை மட்டுமே
மேலோங்கி நிற்கும் ஒரு நாட்டில் கறுப்புப்பணம்
மட்டும் ரொக்கமற்றதாக இருக்கும் என்று கருதுவது
மடமையில் எல்லாம் மடமை ஆகும்.

ஆக, ரொக்க வடிவிலான கறுப்புப் பணம் என்பது
பூஜ்யம் தான் என்று சீத்தாராம் யெச்சூரி முதல்
திபங்கர் பட்டாச்சாரியா வரையிலான அறிஞர்கள்
கூறுவது முற்றிலும் தவறு. இதை இக்கட்டுரையில்
நிரூபித்துள்ளோம். QED.
------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
---------------------------
"கறுப்புப்பணம் என்பது ஓர் ஆக்டோபஸ். அதாவது
ஆயிரங்கால் பூச்சி.இந்தப் பூச்சியின் சில கால்கள்
தற்போது வெட்டப் படுகின்றன. If you want to quantify it,
let it be, say, 100. மீதமுள்ள 900 கால்கள் வெட்டப்படவில்லை." 
---- வின் தொலைகாட்சி விவாதத்தில் நியூட்டன்
அறிவியல் மன்றம் கூறியது. யூடியூப் காணொளியாக
உள்ளது. இங்கு முன்னரே பகிரப்பட்டது.
******************************************************************

          

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக