சனி, 16 ஜனவரி, 2016

திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது ஆபத்தின் அறிகுறியா?
-------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
---------------------------------------------------------------------------------------------
திருச்செந்தூர் கடற்கரை அருகில் செவ்வாய் அன்று (12.01.2015)
நூற்றுக் கணக்கான திமிங்கலங்கள் வழி தவறிக்
கரை ஒதுங்கி உள்ளன. இவற்றில் 45 திமிங்கலங்கள்
இறந்து விட்டன. மீதியைக் கடலுக்குள் அனுப்பும்
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஓரளவு வெற்றியும் பெற்றன.

திமிங்கலங்கள் கடலின் அடியாழத்தில் வாழ்பவை. அவற்றை
பெரிய படகிலோ கப்பலிலோ ஏற்றிச் சென்று நடுக் கடலில்  .
விட வேண்டும். சராசரி இரண்டு டன் எடையுள்ள திமிங்கலங்களை மொத்தமாக ஏற்றிச் சென்று நடுக்கடலில் விடுவதற்கு உகந்த
கப்பல்களும் பயிற்சி பெற்ற ஊழியர்களும் இருந்தால் மட்டுமே
இத்தகைய முயற்சிகள் வெற்றி அடையும்.

திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்குவது  காலம்
காலமாக நடைபெற்று வரும் இயற்கை நிகழ்வு. இதில்
மனிதக் காரணிகள் எதுவும் இல்லை.

2015 பிப்ரவரியில் நியூசிலாந்து கடற்கரையில் 198 பைலட்
வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 100 இறந்தன.
நியூசிலாந்து கடற்கரையில் மட்டும் திமிங்கலங்கள்
கரை ஒதுங்கும் நிகழ்வுகள் ஆண்டுக்கு 85 நடக்கின்றன.

2013இல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில்
51 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 22 இறந்தன.

தைவான் கடற்கரை, ஆஸ்திரேலியக் கடற்கரை, கலிபோர்னியக்
கடற்கரை என்று உலகில் எங்கெல்லாம் கடற்கரைகள்
உள்ளனவோ அங்கெல்லாம் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி
இருக்கின்றன. இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது
குறித்த நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. நூற்றுக்
கணக்கான பதிவுகள் உள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கும் மொத்த நிகழ்வுகளில் 60 சதம்
பின்வரும் மூன்று கடற்கரைப் பகுதிகளில் நடக்கின்றன.
1) நியூசிலாந்து கடற்கரை 2) டாஸ்மேனியா கடற்கரை
3) வடகடல் பகுதி.

ஆஸ்திரேலியாவுக்குக் கீழ் டாஸ்மேனியா இருக்கிறது
(இந்தியாவுக்குக் கீழ் இலங்கை இருப்பது போல)
வடகடல் (North Sea) என்பது இங்கிலாந்து-ஸ்காட்லாந்து
ஒருபுறமும், நார்வே-டென்மார்க் மறுபுறமும் சூழ்ந்த
கடல். உண்மையில் இது அட்லாண்டிக் கடலின் ஒரு
பகுதியே.

மேற்கூறிய கடற்கரைகளில்,  பைலட் வகை திமிங்கலங்கள்
மட்டுமின்றி, ஸ்பெர்ம் வகை திமிங்கலங்களும்  கரை
ஒதுங்குகின்றன. ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் ராட்சத
அளவிலானவை. 50 அடி நீளமும் 40 டன் எடையும் உள்ளவை.
பைலட் வகை திமிங்கலங்கள் 20 அடி நீளமும் ஒரு டன்
முதல் 2 டன் வரையிலான எடை உள்ளவை. திருச்செந்தூர்
கடற்கரையில் ஒதுங்கியவை பைலட் வகையைச் சேர்ந்த
சிறிய திமிங்கலங்களே.

கரை ஒதுங்கக் காரணம் என்ன?
---------------------------------------------------
திமிங்கலங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை.
கடலில் இரை தேடும் போது, வழிகாட்டிக் கொண்டு முன்னே
செல்லும் திமிங்கலம் வழி தவறி விடுமானால், அதைப்
பின்பற்றிச் செல்லும் திமிங்கலங்களும் வழி தவறிப்போய்
கரை ஒதுங்குவது (mass stranding) உண்டு.

ஹேப் எனப்படும் (Harmful Algal Bloom) நோய்த்தொற்றை
ஏற்படுத்தும் கிருமிக் கூட்டம்  கடலில் படர்ந்து கிடக்கும். இவற்றால் திமிங்கலங்கள் நோய்த் தொற்றுக்கு இரையாகி
வழி தவறுவதும் இறப்பதும் உண்டு.
பசிபிக் பகுதியில் ஏற்படும் எல்நினோ நிகழ்வு காரணமாக
நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றமும் திமிங்கலங்கள்
வழி தவறித் திகைத்துப் போய் நிற்கக் காரணம் ஆகிறது.

பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கனன்று கொண்டிருக்கும்
எரிமலைகள் (active volcanoes) நிறைய உள்ளன.இதுவும்
திமிங்கலங்கள் கரை ஒதுங்கக் காரணம்  என்று விஞ்ஞானிகள்
கருதுகின்றனர்.

மிக அண்மைக்கால நிகழ்வான, அமெரிக்காவின் புளோரிடா
மாகாணத்தின் வடபகுதியில் உள்ள, பெர்டினாண்டோ கடற்கரையில்
2015இல் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் பல இறந்து விட்டன.
இறந்த திமிங்கலங்கள் உடற்கூறு ஆய்வுக்கு (necropsy)
உட்படுத்தப் பட்டன.  ஒரு வித நோய்க்கிருமிகள் (microbilli virus)
ஏற்படுத்திய நோயால் திமிங்கலங்கள் இறந்தன என்று
கண்டறியப் பட்டது.

திருச்செந்தூரிலும் இறந்த திமிங்கலங்களின் உடல்களின்
பகுதிகள் உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன.    

கூடங்குளம் அணுக்கழிவு காரணமா?
--------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலைக் கழிவைக் கடலில் கொட்டுவதால்
திமிங்கலங்கள் இறந்து போயின என்று கூறுவது முற்றிலும்
தவறு.

நெருப்பைப் பொட்டலம் கட்ட முடியுமா? ஒரு இஸ்திரிப்
பெட்டியில் உள்ள நெருப்புங் கங்குகளை காகிதத்தில்
பொட்டலம் கட்டி எடுத்துச் செல்ல முடியுமா? முடியாது.
அது போலவே அணுக்கழிவுகளை லாரியில் அல்லது
டிரக்கில் லோடு ஏற்றி, கடற்கரையில் லோடு இறக்கி,
கடலில் கரைத்து விட முடியாது.

ஒரு ஆலையின் கழிவுகளை, ஒரு
மருத்துவ மனையின் கழிவுகளை, ஒரு காய்கறிச்
சந்தையின் கழிவுகளைக் கையாள்வது போல,
அணுக்கழிவுகளைக் கையாள முடியாது.


அணுக்கழிவு என்பது அணுமின் உற்பத்திக்குப் பின்னர்
எரிந்து போன யுரேனியம் தண்டுகள்  உள்ளிட்டகடுமையான
கதிரியக்கத் தன்மையுள்ள தனிமங்களைக் கொண்டதாகும்.

அணுக்கழிவில் ஆல்பா பீட்டா மற்றும் காமா கதிர்கள் 
இருக்கும். இதை ஒரு இரும்புப் பெட்டியில் வைத்து 
மூடினாலும் பயனில்லை. ஏனெனில் காமா கதிர்கள் 
இரும்பைச் சுலபமாக ஊடுருவும் தன்மை கொண்டவை. 
மேலும் காமா கதிர்கள் ஒளியின் வேகத்தில், அதாவது 
ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் 
பரவக் கூடியவை. எனவே அணுக்கழிவைக் கடலில் 
கொட்டுவது கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க 
முடியாத விஷயம் என்பதை உணர வேண்டும்.

அவ்வாறு கூடங்குளம் அருகில் உள்ள கடலில்
அணுக்கழிவுகள் கொட்டப்பட்டு இருக்குமானால்,
திமிங்கலங்கள் மட்டுமல்ல, மனிதர்களும் கூட்டம் கூட்டமாக
மடிந்து இருப்பார்கள்.  ஏனெனில்,திமிங்கலங்களை மட்டும்
குறிவைத்துத் தாக்குகிற, ஏனைய உயிரினங்களை ஒன்றும்
செய்யாமல் விட்டு விடுகிற கதிரியக்கம் இந்தப்
பிரபஞ்சத்திலேயே கிடையாது.

அணுஉலை அணுமின்சக்தி என்பதெல்லாம் இரண்டாம் உலகப்
போரை ஒட்டி முதன் முதலாக 1940களில்தான் வந்தன.
ஆனால் திமிங்கலங்கள் வழி தவறிக் கரை ஒதுங்குவது
அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து
வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு
திமிங்கலங்கள் கரை  ஒதுங்குவது குறித்து
அரிஸ்டாட்டில் எழுதி உள்ளார்.


அணுஉலையில் இருந்து வெளியேற்றப் படும் சுடுநீர் காரணமா?
-------------------------------------------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும்
சூடான நீர் கடலில் கலப்பதால், கடலின் வெப்பநிலை
அதிகரித்து விட்டதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில்
கடலைக் கடந்த திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக இறந்து
விட்டதாகவும் கூறப் படுகிறது. இது உண்மையா என்று பார்ப்போம்.

கூடங்குளத்தில் இரண்டு அணுஉலைகள் உள்ளன.
 இதில் இரண்டாம் அணுஉலை இன்னும்
செயல்பட ஆரம்பிக்கவில்லை. இவ்வாண்டு மத்தியில்
(2016 மே-ஜூன்) செயல்படத் தொடங்கும் என்று
ராஜ்யசபாவில், பிரதமர் அலுவலக
இணையமைச்சர் ஜிதேந்திர சிங் 17.12.2015இல் கூறியுள்ளார்..

முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டு
ஜூன் 24, 2015 முதல் பராமரிப்புப் பணிகள் மட்டுமே
மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதாவது கடந்த
ஆறு மாத காலமாக கூடங்குளம் அணுஉலை மூடியே
கிடக்கிறது.

போன மாதம், டிசம்பர் 12, 2015 அன்று முதல்வர் ஜெயலலிதா
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மூடிக் கிடக்கும்
கூடங்குளம் அணுஉலையைத் திறக்குமாறு கோரினார்

ஆக, ஆறு மாத காலமாக மூடிக் கிடக்கும் கூடங்குளம்
அணு உலையில் இருந்து சூடான நீர் எப்படி கடலில்
கலந்திருக்க முடியும்?

எந்த ஒரு அணு உலையில் இருந்தும் வெளியேற்றப் பட்டு
கடலில் கலக்கும் நீரின் வெப்பநிலை
(temperature of water at the final discharge point) சுற்றுப்புற
வெப்பநிலையை விட 7 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே
அதிகமாக இருக்கும். அதாவது சுற்றுப்புற வெப்பநிலை
30 டிகிரி செல்ஷியஸ் என்றால், அணு உலையில் இருந்து
வெளியேற்றப்படும் நீர் அதிகபட்சமாக 37 டிகிரி
செல்ஷியஸ் மட்டுமே இருக்கும். இதை வைத்துக் கொண்டு
கடலை யாராலும் சூடாக்க முடியாது.  

1973இல் இதுபோல் திருச்செந்தூர்-மணப்பாடு கடற்கரையில்,
திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய செய்தியை
அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூர்கிறார்கள்.

1973இல் கூடங்குளம் அணுமின் நிலையம் இல்லை.
மேலும் அப்போது கல்பாக்கம் அணுமின்
நிலையமும் தொடங்கப் படவே இல்லை. இவ்வாறு
தமிழ்நாட்டில் எந்த அணு உலையும் இல்லாத போதே,
திமிங்கலங்கள் கரை ஒதுங்கின என்பது குறிப்பிடத் தக்கது.

மொத்தத்தில், திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது உலகம்
முழுவதும் தொன்றுதொட்டு நடந்து வரும் ஒரு நிகழ்வு.
இதில் அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பது தெளிவு.
----------------------------------------------------------------------------------------------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக