வியாழன், 14 ஜனவரி, 2016

வதந்தியைப் பரப்புவோர் கம்பி எண்ண  நேரிடும்!
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி
நிறுத்தப்பட்டு உள்ளபோது, சுடுநீரைக் கடலில்
கலப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
கூடங்குளம் அணு உலையில் இருந்து கொதிநீரை
அளவு கடந்து வெளியேற்றிக் கடலில் கலப்பதால்,
கடலின் வெப்பநிலை அதிகரித்து விட்டதாகவும்,
இதன் காரணமாக அப்பகுதியில் கடலைக் கடந்த
திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக இறந்து
விட்டதாகவும் ஒரு மோசமான வதந்தி சில
சமூக விரோதிகளால் பரப்பப் படுகிறது.

இது கயமைத் தனமான பொய் மட்டுமல்ல, இவ்வாறு
வதந்தி பரப்புவது  மோசமான கிரிமினல் குற்றமும் ஆகும்.
இதில் உண்மை என்ன என்று பார்ப்போம்.

கூடங்குளத்தில் இரண்டு அணுஉலைகள் உள்ளன.
(Unit-1 and Unit-2). இதில் இரண்டாம் அணுஉலை இன்னும்
செயல்பட ஆரம்பிக்கவில்லை. இவ்வாண்டு மத்தியில்
(2016 மே-ஜூன்) செயல்படத் தொடங்கும் என்று அரசு
ராஜ்யசபாவில் அறிவித்துள்ளது. (பிரதமர் அலுவலக
இணையமைச்சர் ஜிதேந்திர சிங் 17.12.2015இல் கூறியது).

முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டு
ஜூன் 24, 2015 முதல் பராமரிப்புப் பணிகள் மட்டுமே
மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதாவது கடந்த
ஆறு மாத காலமாக கூடங்குளம் அணுஉலை மூடியே
கிடக்கிறது.

போன மாதம் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், பிரதமர்
மோடிக்கு எழுதிய கடிதத்தில், மூடிக் கிடக்கும்
கூடங்குளம் அணுஉலையைத் திறக்குமாறு கோரினார்
(டிசம்பர் 12, 2015).

ஆக, ஆறு மாத காலமாக மூடிக் கிடக்கும் கூடங்குளம்
அணு உலையில் இருந்து சூடான கொதிநீர், அதுவும்,
அளவுக்கு அதிகமாக எப்படி கடலில் கலந்திருக்க முடியும்?
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?

வெறும் அறியாமை காரணமாக மட்டும் இவ்வாறு வதந்தி
பரப்புகிறார்கள் என்று கூற முடியாது. இவர்களுக்குப்
பின்னணியில் இருப்பது யார், இவர்களின் தீயநோக்கம்
என்ன என்பதெல்லாம் அறிந்து, இது போன்ற தேச விரோத,
மக்கள் விரோதக் கயமையைக் கருவறுக்க வேண்டியது
அரசின் பொறுப்பு மட்டுமல்ல; குடிமைச் சமூகத்தின்
கடமையும் ஆகும்.
************************************************************************
     
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக