புதன், 13 ஜனவரி, 2016

திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்குவது  காலம்
காலமாக நடைபெற்று வரும் இயற்கை நிகழ்வு. இதில்
மனிதக் காரணிகள் எதுவும் இல்லை.

2015 பிப்ரவரியில் நியூசிலாந்து கடற்கரையில் 198 பைலட்
வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 100 இறந்தன.
நியூசிலாந்து கடற்கரையில் மட்டும் திமிங்கலங்கள்
கரை ஒதுங்கும் நிகழ்வுகள் ஆண்டுக்கு 85 நடக்கின்றன.

2013இல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில்
51 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 22 இறந்தன.

தைவான் கடற்கரை, ஆஸ்திரேலியக் கடற்கரை, கலிபோர்னியக்
கடற்கரை என்று உலகில் எங்கெல்லாம் கடற்கரைகள்
உள்ளனவோ அங்கெல்லாம் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி
இருக்கின்றன. இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது
குறித்த நிகழ்வுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. நூற்றுக்
கணக்கான பதிவுகள் உள்ளன.

இவ்வாறு கரை ஒதுங்கும் மொத்த நிகழ்வுகளில் 60 சதம்
பின்வரும் மூன்று கடற்கரைப் பகுதிகளில் நடக்கின்றன.
1) நியூசிலாந்து கடற்கரை 2) டாஸ்மேனியா கடற்கரை
3) வடகடல் பகுதி.
ஆஸ்திரேலியாவுக்குக் கீழ் டாஸ்மேனியா இருக்கிறது 
(இந்தியாவுக்குக் கீழ் இலங்கை இருப்பது போல)
வடகடல் (North Sea) என்பது இங்கிலாந்து-ஸ்காட்லாந்து
ஒருபுறமும், நார்வே-டென்மார்க் மறுபுறமும் சூழ்ந்த
கடல். உண்மையில் இது அட்லாண்டிக் கடலின் ஒரு
பகுதியே.

மேற்கூறிய கடற்கரைகளில்,  பைலட் வகை திமிங்கலங்கள்
மட்டுமின்றி, ஸ்பெர்ம் வகை திமிங்கலங்களும்  கரை
ஒதுங்குகின்றன. ஸ்பெர்ம் வகை திமிங்கலங்கள் ராட்சத
அளவிலானவை. 50 அடி நீளமும் 40 டன் எடையும் உள்ளவை.
பைலட் வகை திமிங்கலங்கள் 20 அடி நீளமும் ஒரு டன்
முதல் 2 டன் வரையிலான எடை உள்ளவை. திருச்செந்தூர்
கடற்கரையில் ஒதுங்கியவை பைலட் வகையைச் சேர்ந்த
சிறிய திமிங்கலங்களே.  

கரை ஒதுங்கக் காரணம் என்ன?
---------------------------------------------------
1) கடலடி நீரோட்டங்கள் 2) பசிபிக் பகுதியில் ஏற்படும்
எல்நினோ நிகழ்வு காரணமாக ஏற்படும் நீரோட்டங்களின்
மாற்றம் 3) HAB எனப்படும் (Harmful Algal Bloom) நோய்த்தொற்றை
ஏற்படுத்தும் கிருமிக் கூட்டம் (இது Red Tide, சிவப்பு அலை
என்று அழைக்கப் படும்). இவையும் இவை போன்ற
காரணங்களாலும் திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாகக்
கரை ஒதுங்குகின்றன. இது mass stranding எனப் படுகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக