செவ்வாய், 5 ஜனவரி, 2016

இணைய நடுநிலை என்றால் என்ன?
அதற்கு நேர்ந்துள்ள ஆபத்துக்கள் என்ன?
------------------------------------------------------------------
உலகெங்கும் பெரிதும் பேசப்படும் பொருளாக
இணைய நடுநிலை (net neutrality) ஆகியுள்ளது.
திறந்த மற்றும் சுதந்திரமான (open and free internet) இணையத்தை
உத்தரவாதம் செய்யக்கோரி உலகெங்கும் உள்ள இணையப்
பயனர்கள் தங்கள் அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, இணைய நடுநிலையைப்
பாதுகாக்கும் வலுவானசட்டங்களை இயற்றுமாறு அமெரிக்காவின்
தொலைதொடர்பு ஆணையத்துக்கு (Federal Communications Commission)
பாரக் ஒபாமா உத்தரவு இட்டுள்ளார்.

அமெரிக்கா சீனாவுக்கு அடுத்த படியாக இணையப் பயன்பாட்டில்
மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவிலும் இணைய
நடுநிலையைப் பாதுகாக்கக் கோரும் குரல்கள் ஓங்கி
ஒலிக்கின்றன. இணைய நடுநிலையைச் சீர்குலைக்கும்
திட்டமாகக் கருதப் படும் சமூக வலைத்தளமான முகநூல்
(Facebook) நிறுவனத்தின்  "இலவச இணைய அடிப்படைகள்"
(Free Basics) என்ற திட்டத்தை இந்தியத் தொலைதொடர்பு
ஒழுங்குமுறை  ஆணையம் (Telecom Regulatory Authority of India) அனுமதிக்கவில்லை.

வெவ்வேறு இணைய தளங்களுக்கு வெவ்வேறு கட்டணம்
வசூலிக்கலாம் என்ற கோட்பாடு (differential pricing) இணைய
நடுநிலையைச் சீர்குலைத்து விடும் என்று உலகெங்கும்
உள்ள இணையப் பயனர்கள் கருதுகிறார்கள். இக்கோட்பாடு
குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது டிராய். மக்களின்
கருத்தைப் பொறுத்தே டிராய் முடிவெடுக்க உள்ளது.

இச்சூழலில், இணைய நடுநிலைக்கு ஆபத்தை ஏற்படுத்துவது யார்?
அந்த ஆபத்தில் இருந்து மீள்வது எப்படி? என்ற கேள்விகளுக்கு
விடை காணவும் .இணைய நடுநிலை குறித்த சரியான
ஒரு புரிதலை அடையவும் இணையத்தின் தோற்றம்
வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

இணையம் தோன்றியது எப்படி?
--------------------------------------------------------
குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதைப் போல,
ஆர்ப்பாநெட் (ARPANet) என்பதில் இருந்து தற்போதைய
இணையம் (internet)  பிறந்தது. ஆர்ப்பாநெட் என்பது அமெரிக்க
ராணுவப் பயன்பாட்டுக்கானது. ARPANet என்பது
Advanced Research Projects Agency Network என்பதன் சுருக்கமே.
இது ஒரு எளிய கணினி வலைப்பின்னல் மட்டுமே. இதன்
முதல் தகவல் பரிமாற்றம் 1969 அக்டோபரில் நடந்தது.
இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் இருவர்.
லியனார்ட் கிளின்ராக் (Leonard Kleinrock),
வின்டன் செர்ஃப் (Vinton Cerf) ஆகியோரே அவர்கள்.

இணையம் தனி ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டதல்ல.
பல்வேறு காலக்கட்டத்தில் பலரின் பங்களிப்போடு
இணையம் பிறந்தது. Packet switching என்ற தொழில்நுட்பமும்
TCP/IP என்ற கட்டளைத் தொகுப்பும் இணையத்தின்
அடித்தளங்கள் ஆகும். இதில் TCP/IP என்பது Transmission Control
Protocol மற்றும் Internet Protocol ஆகிய இரு கட்டளைத்
தொகுப்புகளின் கூட்டு ஆகும். இதை  உருவாக்கிய
வின்டன் செர்ஃப், பாப் கஹன் (Bob Kahn) ஆகிய இரு
அமெரிக்கர்களும் இணையத்தின் முன்னோடிகள் ஆவர்.

1969ஐ இணையத்தின் தொடக்கமாகக் கொண்டால் 1970களில் எல்லாம் இணையம் மிக மெதுவாகத்தான் வளர்ச்சி அடையத்
தொடங்கியது. அமெரிக்க ராணுவத் துறையினர், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் என்னும் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே
இணையம் அடைபட்டுக் கிடந்தது.1980களில்தான்
ஐரோப்பாவுக்குச் சென்றது. டிம் பெர்னஸ் லீ (Tim Berners Lee)
என்னும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி  www எனப்படும்
"வைய விரிவு வலை"யை (world wide web) கண்டுபிடிக்கும்
வரை, இணையம் என்பது சராசரி மனிதனின்
பயன்பாட்டுக்கு வரவில்லை.

அ) உலகளாவிய தகவல் மூலாதாரங்களை அடையாளம் காணவல்ல
URL (Uniform Resource Locater), URI (Uniform Resource Identifier)
ஆ) HTML (Hyper Text Markup Language) என்னும் பதிப்பிக்கும் மொழி
இ) HTTP(Hyper Text Transfer Protocol) என்னும் கட்டளைத் தொகுப்பு
ஆகிய மூன்று தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு
வையவிரிவுவலையை உருவாக்கினார் லீ.

1989இல் லீ உருவாக்கிய வையவிரிவுவலை 1991 ஆகஸ்ட் 6
அன்று செயல்பாட்டுக்கு வந்தது. உலகின் முதல் வலைத்தளம்
(website) ஐரோப்பிய CERN மையத்தில் அன்றுதான் தொடங்கப்
பட்டது.

தொடர்ந்து அமெரிக்காவின் மொசாய்க் இணைய உலாவி
(Mosaic web browser) வையவிரிவு வலையுடன் இணைந்தது.
இவ்விரண்டின் கூட்டால் மிக எளிதாக இணையம்
கோடிக்கணக்கான மக்களை எளிதில் சென்று அடைந்தது.
1998இல் கூகுள் தேடுபொறியின் வரவுடன்  இணையத்தில்
இருந்து தகவல்களைப் பெறுவது ஒரு நொடிக்கும் குறைவான
நேரத்தில் சாத்தியம் ஆனது.

சுருங்கக் கூறின், இணையம் என்பது வலைப்பின்னல்களின்
வலைப்பின்னல் (network of networks). தமக்குள்ளே தகவல்களைப்
பரிமாறிக் கொள்கிற ,ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கணினி வலைப்பின்னல்களின் தொகுப்பு. வையவிரிவுவலை,
இணைய உலாவிகள், தேடுபொறிகள் ஆகியவற்றின் வாயிலாக
இணையம் வேலை செய்கிறது. இதுதான் இணையத்தின்
மிகச் சுருக்கமான வரலாறு.

உச்சந்த்தலையில் இருந்து உள்ளங்கால் வரை 
இணையம் இலவசமே!
----------------------------------------------------------
இணையம் ஆகப் பரவலான பயன்பாட்டுக்கு வந்ததற்கு
முக்கியக் காரணமாக அமைந்த வையவிரிவு வலையை
இலவசமாக வழங்கினார் டிம் பெர்னஸ் லீ. அதற்கான
காப்புரிமையை அவர் கோரியிருந்தால் பில் கேட்ஸ் போன்று
அவரும் ஒரு கோடீஸ்வரர் ஆகியிருக்கக் கூடும். ஆனால் தமது  கண்டுபிடிப்பால் மொத்த மானுடமும் பயனுற வேண்டும்
என்ற உன்னத நோக்குடன் அவர் வலையை உலகிற்குக்
கொடையளித்தார்.

இணைய உலாவிகளான (browsers) மொசில்லா பைர்பாக்ஸ்,
கூகுள் நிறுவனத்தின் குரோம், ஒபேரா ஆகியவை
open source ஆகும். அதாவது இலவசம் ஆகும். மைக்ரோசாப்ட் 
நிறுவனத்தின்  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற உலாவியும் 
இலவசமே. ஆயின் இது அவர்களின் OS உடன் ( operating system) 
சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது (inbuilt).  இந்த உலாவிகள் இல்லாமல் இணையத்தில் சஞ்சரிக்க இயலாது..

1998இல் வந்த கூகுள் தேடுபொறி இலவசமே. அதுபோலவே
யாஹூ தேடுபொறியும் இலவசமே. ஒரு நொடிக்கும்
குறைவான நேரத்தில் நாம்தேடும் தகவல்களை
இணையத்தில் பெற முடிகிறதே, அதற்குக் காரணமான
தேடுபொறிகளின் சேவை இலவசமே. கூகுள் தேடலில்
newton என்று எழுதி முடித்து தேடல் பொத்தானை
அழுத்தியதுமே,20 கோடியே 70 லட்சம் முடிவுகள்
0.37 நொடிக்குள் கிடைக்கின்றன. இந்த ராட்சச வேகத்தைச்
சாத்தியமாக்கும் தேடுபொறிகளின் சேவை கட்டணமற்றதே.

அடுத்து, இணையத்தில் உள்ள தகவல் திரட்டு முற்றிலும்
இலவசமே. விக்கிப்பீடியா உலகின் பல மொழிகளில்
பல்வேறு பொருட்களில் கட்டுரைகளைத் தருகிறது.
288 மொழிகளில் விக்கிப்பீடியா பதிப்புகள் உள்ளன.
ஆங்கிலத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள்
உள்ளன. நாளொன்றுக்கு 800 கட்டுரைகள் வீதம் ஆங்கிலத்தில்
எழுதப்பட்டு விக்கிப்பீடியாவில் திரட்டப் படுகின்றன.

ஒரு உதாரணத்திற்காக மட்டுமே விக்கிப்பீடியாவைக்
குறிப்பிட்டோம். இணையத்தில் உள்ள தகவல் திரட்டு
மொத்தமும் முற்றிலும் இலவசமே. எந்த ஒரு வலைத்
தளத்தையும் வலைப்பூவையும் எவரும் இலவசமாகவே
பார்க்க முடியும்.

இணையத்தில் வீடியோ காட்சிகளைக் கொண்ட யூடியூப்
முற்றிலும் இலவசமே. யூடியூபை கூகுள் நிறுவனம்
வாங்கிய பிறகு, அதில் விளம்பரங்கள் காட்டப் படுகின்றன.
விளம்பரங்களை பார்க்க விரும்பாதோர் அதை விலக்கி
விடலாம். அதற்கான விலக்கல் பொத்தான் (skip option)
யூடியூபில் உண்டு. எனினும் மிக அதிகம் பார்க்கப்படும்
வீடியோக்களில் இந்த விலக்கல் பொத்தான் அனுமதிக்கப்
படுவதில்லை. அதாவது அந்த விளம்பரங்களை பயனர்கள்
பார்த்துத்தான் ஆக வேண்டும்.இவ்வாறு விளம்பரங்கள் மூலம்
கிடைக்கும் வருவாய் வாயிலாக நிறுவனங்கள் இந்தச்
சேவையை நடத்துகின்றனவே தவிர, பயனர்களிடம்
கட்டணம் வசூலிப்பதில்லை. யூடியூப் மூலமாக ஒரு 
முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்க முடியும், இலவசமாக.

மேலும், முகநூல், ட்விட்டர், வாட்சப், இன்ஸ்டாகிராம் 
போன்ற சிறப்புத் தளங்களும் இலவசமே. இவை OTT சேவைகள் 
(Over-The-Top services) என இணைய மொழியில் வழங்கப் 
படுகின்றன. 

இவை தவிர, பல்வேறு செயலிகள் (applications) இணையத்தில் 
கிடைக்கின்றன. அவற்றை இலவசமாக நமது கணினியில் 
நிறுவிக் கொள்ளலாம். எந்த ஒரு ஆவணத்தையும் PDF வடிவில் 
மாற்றித்தரும் Adobe Reader, VLC media player, கோப்புகளை 
இறுக்கமாகக் கட்டித் தரும் WinRAR, வைரஸ் எதிர்ப்பு 
மென்பொருளான Avast, எல்லா உலாவிகளுக்கும் தேவையான 
Flash Player (இது இல்லாமல் வீடியோக்களைத் தெளிவாகப் 
பார்க்க முடியாது), உலகெங்கும் இணையம் வழியாகப் 
பேச உதவும் ஸ்கைப் முதலியன முற்றிலும் இலவசமே. 

இவ்வாறு தகவல் களஞ்சியம், உலாவிகள், தேடுபொறிகள்,
வையவிரிவுவலை, OTT சேவைகள், செயலிகள் என 
அனைத்துமே இணையத்தில் இலவசமாகவே 
கிடைக்கின்றன. இணையத்தின் அசுரத் தனமான 
வளர்ச்சிக்குக் காரணமும் இதுவே.
----------------------------------------------------------------------------------------------------
தொடரும் 
--------------------------------------------------------------------------------------------------------.   


,       































         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக