திங்கள், 18 ஜனவரி, 2016

சஞ்சய்தத் பேரறிவாளன் ஒப்பீடு பயனற்றது!
செய்தக்க அல்ல செயக் கெடும்!
--------------------------------------------------------------------------------
சஞ்சய்தத்துக்கு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படும்
தண்டனைக் குறைப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின்கீழ் ஆவணங்களைக் கோரியுள்ளார்
பேரறிவாளன்.

பேரறிவாளனின் இந்தச் செயல் முற்றிலும் தவறானது
மட்டுமல்ல,  எதிர்மறையான விளைவைத் தரும்.
சஞ்சய் தத்துக்கு விதிக்கப் பட்டது வெறும் ஐந்தாண்டு
தண்டனை மட்டுமே. அதில் சுமார் மூன்றரை மாதங்கள்
வரை சலுகை காட்டப் படலாம் என்று பேசப் படுகிறதே
தவிர, சஞ்சய் தத் இன்னும் விடுதலை செய்யப் படவில்லை.

இதற்கு மாறாக, ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு,
நன்னடத்தை காரணமாக 10 அல்லது 12 ஆண்டுகளிலேயே
விடுவிக்கப்பட்ட பல கைதிகள் இந்தியாவின் எல்லாச்
சிறைகளிலும் உண்டு. ஏன் தமிழ்நாட்டிலேயே உண்டு.
அவர்களில் ஒருவரை முன்னுதாரணமாகக் காட்டி,
அதே போன்ற சலுகை தனக்கு மறுக்கப் படுவதைச்
சுட்டிக் காட்டி, முறையிடுவதுதான் பேரறிவாளனுக்கு
பயன் தருவதாக இருக்கும்.

சஞ்சய் தத்துடன் இவர் தன்னை ஒப்பிட்டுக் கொள்வது
எவ்விதத்திலும் இருவருக்கும் நன்மை பயக்காது.
2009இல் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவின் போது,
அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் கணக்கற்ற
சிறைக் கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கினார்.
ஆயுள் தண்டனை பெற்ற சில கைதிகள் கூட விடுதலை
ஆயினர்.

இதுபோன்ற நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, அதே
சலுகைகளை தனக்கும் நீட்டிக்கக் கோரி, மனு
அளிப்பதுதான் அவருக்கு உண்மையில் ஏதேனும்
நிவாரணத்தைப் பெற்றுத் தரும்.
   

மரண தண்டனை விதிக்கப் பட்ட பேரறிவாளனுக்கு
முதல் தண்டனைக் குறைப்பை உச்சநீதி மன்றம்
வழங்கியது. அப்போது அவரின் மரண தண்டனை
ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. தற்போது,
இரண்டாவதாக ஒரு தண்டனைக் குறைப்பை அவர்
கோருகிறார். 24 ஆண்டுகள் சிறையில் கழித்தைக்
குறிப்பிட்டு விடுதலையைக் கோரும் அவர்,
அதற்கு ஏற்ப உள்ள முன்னுதாரணங்களைக் காட்ட
வேண்டும். அப்படிப்பட்ட உதாரணங்கள் நிறையவே
இருக்கின்றன. 




1) வழக்கறிஞர்கள் தங்களையே நம்பி இருக்கும் கட்சிக்காரனின்
நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவார்கள்
என்று எவரேனும் நம்பிக் கொண்டு இருந்தால் அது தவறு.
2) இது போன்ற தேசத்தின் கவனத்தை ஈர்த்த வழக்குகளில்


(பேரறிவாளன்-சஞ்சய்தத்) தங்களின் பங்கேற்பை உறுதி
செய்வது, இதில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்ககள் பிரபலம்
அடைய முடியும்.
3) கர்நாடகச் சிறையில் அடைபட்டுக் கிடக்கும் வீரப்பனின்
கூட்டாளிகளில் சிலருக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை
விதித்தது. இந்நேரமோ அதற்கும் முன்னரோ அவர்கள்
தண்டனையை அனுபவித்து முடிந்து விடுதலை ஆகி
இருப்பார்கள். ஆனால் பலரின் ஆலோசனையையும் மீறி,
உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்
அவர்களின் வக்கீல்கள். விளைவு, ஆயுள் தண்டனை
மரண தண்டனை ஆனது. இது யார் தப்பு?
4) ஒரு விஷயத்தில் சரி-தவறு பற்றியோ லாப-நஷ்டம்
பற்றியோ முடிவு எடுப்பது நம்முடைய அறிவு சார்ந்த
விஷயம். இதற்கு வக்கீலாக இருக்க வேண்டியதில்லை.
சட்ட நுணுக்கத்தை நீதிமன்றத்தில் விளக்கிச்
சொல்வதற்கு மட்டுமே வக்கீல் தேவை.


யார் யாரெல்லாம் விடுதலை அடைந்தார்கள் என்று பலரை
பெயர் குறிப்பிட்டு இங்கே சொல்ல முடியும். அவ்வாறு சொல்வது
பலருக்கும் தர்ம சங்கடத்தை  ஏற்படுத்தும் என்பதால்
சொல்வதைத் தவிர்க்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக