செவ்வாய், 19 ஜனவரி, 2016

பிரபாகரன் இனி தேசியத் தலைவர் அல்ல!
ராஜபக்சேதான் இனி தேசியத் தலைவர்!
இலங்கை நாடாளுமன்றத்தில் சம்பந்தர் புகழாரம்!
------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
------------------------------------------------------------------------------------
பிரபாகரன் அவர்களைப் பற்றி எப்போது குறிப்பிட 
நேர்ந்தாலும் தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் 
அவர்கள் என்றுதான் குறிப்பிட்டு உள்ளேன். மேடைப் பேச்சிலும்,
கட்டுரை எழுத்திலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் 
இவ்வாறுதான் வாய் நிறையக் குறிப்பிட்டு வருகிறேன் பல 
ஆண்டுகளாக.

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய, ஈழத் 
தமிழர்களின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற 
எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய சம்பந்தர் ஐயா அவர்கள் 
இனப்படுகொலைக் குற்றவாளியான ராஜபக்சேவை 
தேசியத் தலைவர் என்று குறிப்பிட்டு, புகழாரம் சூட்டி 
உள்ளார்.

இது அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. 
தமிழ் ஈழ மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப் 
பட்டுள்ள சம்பந்தர் ஐயா அவர்கள்தான் ஈழ மக்களின் 
பிரதிநிதியே தவிர, இங்குள்ள நாம் அல்ல. ஈழத் 
தமிழர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்களின் 
எதிர்காலத்திற்கு குரல் கொடுக்கும் உரிமை உள்ளவர் 
சம்பந்தர் ஐயா அவர்கள்தானே தவிர, நாம் அல்ல.

அவர்கள் சமாதானம் ஆகி விட்டார்கள். சிங்களர்களும் 
ஈழத் தமிழர்களும் இணக்கம் கண்டு விட்ட பிறகு,
இனி ஈழப் பிரச்சினையில் அந்நிய நாட்டவர்கள்,
தமிழநாட்டுத் தமிழர்களாகிய நாம் உட்பட, சொல்வதற்கோ 
தலையிடுவதற்கோ ஒன்றும் இல்லை. மீறித் தலையிடுவது 
ஈழத்தமிழர்களின் மனப்போக்கிற்கு எதிரானது.

ஆக, மறைந்த பிரபாகரன் அவர்கள் இனிமேலும்  தேசியத் 
தலைவர் அல்ல. மஹிந்த ராஜபக்சேதான் தேசியத் 
தலைவர். தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இனி 
ராஜபக்சேவே தேசியத் தலைவர். இதுதான் யதார்த்தம்.
இதுதான் நிதர்சனம்.

இங்கு "What is rational is real and what is real is rational" என்ற ஜெர்மானிய 
அறிஞர் ஹெகல் கூறியது பொருந்துகிறது. (பார்க்க: 1821இல் 
ஹெகல் எழுதிய Preface to the philosophy of Right என்ற நூல்).
(தமிழில்: எது யதார்த்தமானதோ அது பகுத்தறிவோடு 
பொருந்துவது; எது பகுத்தறிவோடு பொருந்துவதோ அது 
யதார்த்தமானது.

அதாவது சம்பந்தர் ஐயா கூறுவது யதார்த்தமானது. எனவே 
அது பகுத்தறிவோடு பொருந்தி நிற்பது. அதாவது, மாறிய 
சூழ்நிலையில் இதுவே சரியானது.

சம்பந்தர் ஐயா மேலும் கூறுகிறார் தனித் தமிழ் ஈழம் என்ற 
கோரிக்கையை இனி நாங்கள் முன்னெடுக்க மாட்டோம் என்று.
அதாவது, "புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்" என்ற 
கோரிக்கையும் முடிவுக்கு வந்து விட்டது. அதாவது தனி 
ஈழக் கோரிக்கை இறந்து போய் விட்டது.

ஈழ அரசியலில் ஒரு அடிப்படையான மாற்றம் (paradigm shift)
ஏற்பட்டு உள்ளது என்பதை சம்பந்தர் ஐயாவின் 
நாடாளுமன்றப் பேருரை சுட்டிக் காட்டுகிறது. இது 
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கான அறிவிப்பும் ஆகும்.  
மாறிய சூழ்நிலையில் ஈழத் தமிழர்கள் தங்களின் 
நிலைபாட்டை மாற்றிக் கொண்டார்கள் என்பதை 
உலகுக்கு அறிவிக்கும் முயற்சியாகத்தான் சம்பந்தர் 
ஐயா இதை இலங்கை நாடாளுமன்றத்திலேயே உரத்துக் 
கூறி இருக்கிறார்.

இதன் பொருள் தெளிவானது. தமிழ்நாட்டில் உள்ள 
ஈழ ஆதரவுப் போலிகள் இனி வாயை மூடிக் கொண்டு 
இருக்க வேண்டும் என்றும் ஈழ விடயத்தில் தலையிடக் 
கூடாது என்றும் அடித்துக் கூறுகிறார் சம்பந்தர். இது 
சம்பந்தருடைய சொந்தக் கருத்து அல்ல என்றும் 
இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களின் 
கருத்து என்பதும் குறிப்பிடத் தக்கது.

எந்த ஒன்றுக்கும் ஒரு ஆரம்பம், ஒரு வளர்ச்சி, ஒரு உச்சம்,
ஒரு சரிவு, ஒரு முடிவு என்ற கட்டங்கள் உண்டு. உலகில் 
இதற்கு விதிவிலக்கு இல்லை. ஆக, ஈழம் என்பது தோன்றி,
வளர்ந்து, உச்சம் கண்டு, சரிந்து இன்று இறந்தும் விட்டது.
இதுதான் உண்மை.
---------------------------------------------------------------------------------------------  

   .   


    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக