புதன், 6 ஜனவரி, 2016

continuation of previous part: 

இலவச இணையம் என்பதன் பொருள் என்ன?
-----------------------------------------------------------------------
 முன்பத்திகளில் கூறப்பட்ட இலவச இணையம் என்ற
கருத்தை அதன் சரியான பொருளில் வாசகர்கள் புரிந்து
கொள்ள வேண்டும். உலகில் எந்த நாட்டு அரசும் இணையத்தை
நடத்தவில்லை. இணையம் முற்றிலும் தனியாரால்
நடத்தப் படுவது. இணையத்தின் வலைச்சேவை வழங்கும்
நிறுவனங்கள் அனித்தும் தனியார் நிறுவனங்களே. இவை
தர்ம ஸ்தாபனங்கள் அல்ல; லாபம் கருதும் நிறுவனங்களே.
சராசரிப் பயனர்களுக்கு இணையச் சேவையை இலவசமாக
வழங்கும் இந்நிறுவனங்கள், விளம்பரங்கள் மூலமும்
பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் சேவைக்குக் கட்டணம்
வசூலிப்பதன் மூலமும் வருவாயும் லாபமும் ஈட்டுகின்றன.

உதாரணமாக, நிறுவனங்களுக்கு வழங்கப் படும் மின்னஞ்சல்
உள்ளிட்ட செயலிகளுக்கு (Google Apps) கூகுள் கட்டணம்
வசூலிக்கிறது. ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 10 அமெரிக்க
டாலர் என்பது போன்ற பல்வேறு கட்டண விகிதங்கள் உள்ளன.

இணைய நடுநிலை என்றால் என்ன?
----------------------------------------------------------
வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு குன்றின் மீது நின்று
கொண்டு ஆகாயத்தைப் பார்க்கிறீர்கள். கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை நீங்கள் விரும்பியபடி ஆகாயத்தைப்
பார்க்கலாம். இது போலவே, ஏதேனும் ஒரு ISP நிறுவனத்திடம்
இருந்து இணைய இணைப்பை நீங்கள் பெற்றுக் கொண்டால்,
உங்கள் கணினியிலோ அல்லது மொபைலிலோ, நீங்கள்
விரும்பும் எதையும் இணையத்தில் பார்க்க முடியும்.

விக்கிப்பீடியா, யூடியூப், முகநூல் என்று நீங்கள் விரும்பும்
எதையும் பார்க்கிறீர்கள். ஃபிளிப்கார்ட்டில் உத்தரவு
கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்குகிறீர்கள். எந்த ஒன்றுக்கும்
தனிக்கட்டணம் இல்லை. அதாவது, முகநூல் பார்க்கத்
தனிக் கட்டணம், யூடியூப் பார்க்கத் தனிக் கட்டணம்
என்றெல்லாம் கிடையாது. இணையச் சேவை வழங்கும்
நிறுவனத்திடம் ஒரு பிராட்பேன்ட் இணைப்பை மாதம்
ரூ 750 செலுத்திப் பெற்றுக் கொண்டால் போதும். அல்லது
உங்களின் மொபைலில் ரூ 200 செலவில் 1 GB data பெற்றுக்
கொண்டால் போதும். இணையத்தில் நீங்கள் விரும்பும்
எதையும் பார்க்க முடிகிறது.

எந்த ஒரு வலைத்தளமும் மற்றதை விட, அதிக வேகத்தில்
வருகிறது என்ற புகார் இல்லை. எல்லா வலைத்தளங்களும்
சம வேகத்தில் கிடைக்கின்றன. எந்த ஒரு வலைத்
தளத்திற்கும் இணையத்தில் முன்னுரிமை கிடையாது.
இத்தகைய பாரபட்சமற்ற நிலைதான் இணைய நடுநிலை
என்று சொல்லப் படுகிறது.

இணைய நடுநிலைக்கு யாரால் ஆபத்து?
-----------------------------------------------------------------
இந்தியாவில் இக்கட்டுரை எழுதும் இந்த நிமிடம் வரை
இணைய நடுநிலை முழுசாக இருக்கிறது. சேதாரம்
அடையவில்லை. ஆயின் இணைய நடுநிலைக்கு யாரால்
ஆபத்து?

இணையத்தையும் சராசரிப் பயனரையும் இணைக்கும்
வேலையை "இணையச் சேவை வழங்குநர்கள்"
(Internet Service Providers) என்னும் நிறுவனங்கள் செய்கின்றன.
GPRS, EDGE, 3G,  LTE, 4G ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சி
காரணமாக இன்று மொபைல் பேசிகளிலும் இணையத்தைப்
பார்க்க முடியும். கணினி,லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றில்
இணையத்தைப் பார்ப்பதற்கும் மொபைல் பேசிகளில்
பார்ப்பதற்கும் இடையிலான வேறுபாடு திரையின்
அகலம் மட்டுமே. உலகெங்கும் இணைய நடுநிலையை 
ஆபத்துக்கு உள்ளாக்குவன இணையச் சேவை வழங்கும் 
நிறுவனங்களே. 

"இணையப் போக்குவரத்து முழுவதையும் சமமாக நடத்தத் 
தேவையில்லை; வெவ்வேறு வலைத் தளங்களுக்கு 
வெவ்வேறு  கட்டணம் வசூலிக்கலாம்; OTT சேவைகளுக்கு 
சிறப்புக் கட்டணம் விதிக்கலாம். நாங்கள் விரும்பும் சில 
தளங்களை இலவசமாகத் தருவதன் மூலம் அவற்றுக்கு 
முன்னுரிமை தர விரும்புகிறோம்"என்றெல்லாம் சேவை 
வழங்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் மொபைல் சேவை மற்றும் பிராட்பேண்ட் சேவை
வழங்கும் தனியார் நிறுவனங்கள் சில ஒன்றிணைந்து
COAI (Cellular Operators Association of India) என்ற அமைப்பை
1995இல் உருவாக்கின. இந்த அமைப்பை ஏர்டெல் நிறுவனம்
கட்டுப்படுத்துகிறது. இதில் அரசுத்துறை நிறுவனங்களான
BSNL மற்றும் MTNL ஆகியவை உறுப்பினராக இல்லை.

இந்த 'காய்' அமைப்பு வெவ்வேறு வலைத்தளங்களுக்கு
வெவ்வேறு கட்டணம் விதிக்க வகை செய்யும்
differential pricing என்ற முறைக்கு அனுமதி வழங்குமாறு
டிராய் அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இக்கோரிக்கையை ஏற்காவிட்டால் இணையக் கட்டணத்தைத்
தாறுமாறாக உயர்த்த நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.        
காய் அமைப்பின் இக்கோரிக்கை ஏற்கப் பட்டால்,
இணைய நடுநிலை பெரிதும் சீர்குலையும்.

கடந்தகாலச் சீர்குலைவு முயற்சிகள் 
-------------------------------------------------------------- 
இப்போதுதான் என்றில்லாமல், கடந்த 2015 ஏப்ரலிலேயே
பூஜ்ய மேடை (zero platform) என்ற திட்டத்தை ஏர்டெல் நிறுவனம்
அறிமுகப்படுத்தி இணைய நடுநிலையைச் சீர்குலைக்க
முயன்றது. இந்தியாவின் தொலைதொடர்புத் துறையானது
இத்திட்டம் இணைய நடுநிலைக்கு எதிரானது என்று கூறி,
இதுகுறித்து முடிவு செய்யும் பொறுப்பை டிராய் அமைப்பிடம்
ஒப்படைத்தது.  ஒரு சில வலைத் தளங்களை பயனர்களுக்கு
ஏர்டெல் இலவசமாக வழங்குவதே இத்திட்டம். இதில்
சேரும் வலைத்தளங்களிடம் இருந்து ஏர்டெல் பணம்
பெற்றுக் கொண்டு, அத்தளங்களை பயனர்களுக்கு
இலவசமாகவும் அதிவேகத்திலும் வழங்கும்.

இதன் மூலம் இணையப் போக்குவரத்தில் தெளிவாக
ஒரு பாரபட்சம் ஏற்பட்டு விடுகிறது. இத்திட்டத்தில்
சேராத வலைத்தளங்களுக்கு சமவாய்ப்பு மறுக்கப் படுகிறது.
ஆரம்பத்தில் இத்திட்டத்தில் இணைந்த ஆன்லைன் வணிகத் 
தளமான ஃபிளிப்கார்ட், பயனர்களின் கடுமையான
எதிர்ப்பைத் தொடர்ந்து இத்திட்டத்தில் இருந்து விலகி
விட்டது.

முகநூலின் இலவசத் திட்டம் (Free Basics)
----------------------------------------------------------------------  
தற்போது முகநூல்  அதிபர் மார்க் சக்கர்பெர்க் "இலவச
இணைய அடிப்படைகள்" (Free Basics) என்ற ஒரு திட்டத்தை
முன்மொழிந்துள்ளார். வளரும் நாடுகளில் உள்ள இணைய
வசதி பெறாத ஏழை மக்களுக்கு , குறைந்த பட்சமாக
ஒரு சில இணையச் சேவைகளை வழங்குவது இத்திட்டத்தின்
நோக்கம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்துள்ளார்.
அக்டோபர் 2014இல் முகநூல் நிறுவனம் கொண்டு வந்த
internet.org திட்டத்தின் புதிய பதிப்பே இப்போதைய
இலவச இணைய அடிப்படைகள் திட்டமாகும்.
         .
இத்திட்டத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம்
கூட்டாளியாகச் சேர்ந்துள்ளது. ஆனால் இன்றுவரை
டிராய் அமைப்பு முகநூலின்  இத்திட்டத்திற்கு இந்தியாவில்
அனுமதி தரவில்லை. இத்திட்டம் இணைய நடுநிலையை
மோசமாகச் சீர்குலைத்து விடும் என்று பயனர்களும்
இணைய நடுநிலை ஆதரவாளர்களும் எழுப்பி வரும்
எதிர்ப்பே டிராய் அமைப்பின் இந்த முடிவுக்குக் காரணம் ஆகும்.

முகநூல் அதிபர் மார்க்கின் இலவசத் திட்டம் உண்மையிலேயே
இலவசமா, அப்படியானால் எந்த அளவு இலவசம் என்று
பரிசீலித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒருவர் அன்னதானம்
செய்யப் போவதாக அறிவித்தால் முழுச் சாப்பாடு கிடைக்கும்
என்று எண்ணித்தான் மக்கள் சாப்பிடப் போவார்கள்.
ஆனால், அன்னதானப் பிரபுவான மார்க் அவர்களோ,
"முழுச் சாப்பாடு கிடையாது; ஒரு அகப்பை புளியோதரை
மட்டுமே தரப்படும்" என்கிறார்.

மார்க்கின் திட்டம் வரம்புகளற்ற இணையத்தை வெட்டிக்
குறுக்கி சுண்டைக்காய் அளவு தரும் திட்டம். அத்திட்டத்தில்
வீடியோக்கள் கிடையாது என்று கூறப் படுவதால்,
மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் யூடியூப் போன்ற
தளங்களைப் பார்க்க முடியாது. ஆக இத்திட்டம் இணைய
நடுநிலையையும் பாதிக்கும்; மக்களுக்கும் போதிய
பயன் தராது.

சர்வதேச அளவிலான சமூகநலத் திட்டங்களை ஐ.நா
சபையின் உறுப்புக்களான யுனெஸ்கோ, யுனிசெப் போன்ற
அமைப்புகள் நிறைவேற்றி வருகின்றன. ஏனெனில் ஐ.நா
என்பது பன்னாட்டு அரசுகளின் அமைப்பு; சமூக நோக்கம்
கொண்ட அமைப்பு. ஐ.நா.வின் சமூகநலத் திட்டங்கள்
போன்றதல்ல மார்க்கின் இலவச இணையத் திட்டம்.
அது வெறும் வியாபாரத் தந்திரமே. எனவே இந்தியாவின்
இணையப் பற்றாக்குறையைத் தீர்க்க வந்த தேவதூதராக
மார்க்கைக் கருதுவது அறியாமையே.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் போன்று
லாபவேட்கையுடன் செயல்படுகிறார் முகநூலின் மார்க்.
மைக்ரோசாப்டின் ஏகபோகத்தை உடைப்பதற்காகவே
பல நிறுவனங்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும்
பல்வேறு பயன்பாடுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
மொசில்லா பைர்பாக்ஸ் என்ற இணைய உலாவி அப்படித்தான்
இலவசமாக (open source) வழங்கப் பட்டது. இது மைக்ரோசாப்டின்
உலாவியான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் ஏகபோகத்தைத்
தகர்த்தது. இதையெல்லாம் மார்க் எண்ணிப் பார்ப்பது நல்லது.

வாட்சப் நிறுவனத்தை பிப்ரவரி 2014இல் 19 பில்லியன்
அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் தோராயமாக
1,18,000 கோடி ரூபாய்) முகநூல் அதிபர் மார்க் விலைக்கு
வாங்கி விட்டார். சிறிய மீனைத் திமிங்கலம் விழுங்கி 
விட்டது. வாட்சப்பை பயன்படுத்துவோர் ஒரு மாதத்தில்
45 கோடி என்ற உண்மை பிரமிப்பைத் தந்ததால், அதை
மார்க் வாங்கிப் போட்டு விட்டார். இவ்வாறு
லாபவேட்கையே குறியாக உள்ள மார்க்கின் 'இலவச
இணைய அடிப்படைகள்' திட்டம் எவ்வாறு இந்தியாவின்
இணைய வறுமையை ஒழிக்கும் என்று சிந்திக்க வேண்டும்.


சேவை வழங்குநர்களின் வாதம்
------------------------------------------------------ 
தங்கள் தரப்பு வாதமாக, சேவை வழங்குநர்கள் கூறுவது
என்ன? இதுவரை குறுந்தகவல்களை (sms) மொபைல்பேசி
மூலமாகவே மக்கள் கொடுத்து வந்தனர். வாட்சப் வந்த
பிறகு, அதில் தனிக் கட்டணமின்றி எல்லோரும்
குறுந்தகவல்களை அனுப்புவதால் எங்களின் வருவாய்
பெரிதும் குறைந்து .விட்டது. அடுத்து, ஸ்கைப் போன்ற
தளங்கள் மூலமாக இந்தியாவுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும்
தனிக் கட்டணமின்றிப் பேசிக் கொள்வதால், எங்களின்
வருவாய் கடுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டது
என்கிறார்கள் சேவை வழங்குநர்கள்.

வாட்சப், ஸ்கைப் போன்ற OTT சேவைத் தளங்கள் பெருஞ்
செலவில் நாங்கள் அமைத்துள்ள  டவர்கள் முதலான அகக்
கட்டுமான வசதிகளைப் பயன்படுத்தித்தான் தங்களை
வளர்த்துக் கொண்டுள்ளனர். மேலும் சேவை வழங்கும்
உரிமமத்தை பெருந்தொகைக்கு நாங்கள் ஏலத்தில்
எடுத்துள்ளோம்.இவ்வாறு எங்களின் செலவில் இவர்கள்
வளர்ந்துள்ளதால், OTT தளங்களுக்கு நாங்கள் கட்டணம்
விதிப்போம் என்கிறார்கள் சேவை வழங்குநர்கள்.

இந்த வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில், அதற்காக இணைய நடுநிலையைச்
சீர்குலைப்போம் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இணைய நடுநிலைக்குச் சேதாரம் ஏற்படுத்தாமலே
 வருவாய் ஈட்டப்  போதிய வழிகள் உள்ளன. இன்னமும்
பிராட்பேன்ட் வசதி கிடைக்கப் பெறாத பகுதிகளுக்குத்
தங்களின் சேவையை விஸ்தரிப்பதன் மூலமாகவும்
தங்களின் சந்தாதாரர் அடித்தளத்தை அதிகரிப்பதன்
மூலமாகவும் சேவை வழங்குநர்கள்  அதிக வருவாயும்
கொழுத்த லாபமும் ஈட்ட முடியும். ஏனெனில் இந்திய
பிராட்பேன்ட் சந்தை விற்பவனின் சந்தைதான் (sellers market).

"காய்" அமைப்பில் உள்ள எந்த ஒரு தனியார் சேவை வழங்கும்
நிறுவனமும் கிராமப்புறங்களில் பிராட்பேன்ட் சேவை
வழங்குவதில் அக்கறை காட்டுவதில்லை. சேவை உரிமம்
வழங்கும் அரசு, ஒரு குறிப்பிட்ட அளவு கிராமப்புற
சேவையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று
விதித்த நிபந்தனையை இவர்கள் பூர்த்தி செய்வதில்லை.
சதைப் பற்றான நகர்ப்புறங்களில் சேவை வழங்கப்
போட்டி போடும் இவர்கள் கிராமப் புறங்களைக்
கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னமும் அரசுத்
துறை நிறுவனமான BSNL மட்டுமே கிராமப் புறங்களில்
பிராட்பேண்ட் சேவை அளித்து வருகிறது.கிராமங்களுக்குச்
செல்ல மாட்டோம்; அதற்குப்பதிலாக இணைய நடுநிலையின்
மீது கத்தியைப் பாய்ச்சுவோம்  என்று இவர்கள் கூறுவதை 
ஏற்க முடியாது.

இணைய நடுநிலையின் பன்முகப் பரிமாணம் 
-------------------------------------------------------------------------
இதுகாறும் கூறியவற்றால் இணைய நடுநிலை என்பதை 
இலவசம் எதிர் கட்டணம் என்ற ஒற்றை முரணாகப் புரிந்து 
கொள்ளக் கூடாது. இணையத்தின்  தளங்களுக்கு இடையில் 
பாரபட்சத்தை ஏற்படுத்துவதும், சில தளங்களுக்கு 
முன்னுரிமை என்றும் மற்றத் தளங்களுக்குப் பின்னுரிமை 
என்றும் பாகுபடுத்துவதும் சேவை வழங்கும் நிறுவனங்களின் 
தயவில் பயனர்களை வைத்துவிடும். சுதந்திரமான இணையம் 
என்பது எட்டாக்கனி ஆகிவிடும். இணையத்தில் புதிய 
நிறுவனங்கள் (start-ups) தோன்றி வளர இயலாது.

சேவை வழங்குநர்கள் நினைத்தால் எந்த ஒரு ஆன்லைன் 
வணிக நிறுவனத்தையும் வாழவைக்கலாம் அல்லது 
வீழ்த்தலாம் என்ற நிலை உருவாகி விடும். சுருங்கக் கூறின்,
சேவை வழங்குநர்களான சமூகப் பொறுப்பற்ற தனியார் 
நிறுவனங்கள்  இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு 
ஏரியா தாதாக்கள் போலச் செயல்பட முனைவார்கள்.

எனவே இணைய நடுநிலையைப் பாதுகாப்பது என்பதில் 
எள்ளளவும் சமரசத்திற்கு இடமில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------      .





       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக