ஞாயிறு, 10 ஜனவரி, 2016

எழுவர் விடுதலை ஏன் சாத்தியம் அற்றதாகவே இருக்கிறது?
---------------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------------------------------------
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு,
ஆயுள் தண்டனையை கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக 
அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை இன்னமும் 
கானல்நீராகவே இருக்கிறது. இந்த 2016ஆம் ஆண்டின் 
இறுதி மாதங்களில், இந்த ஏழு பேரும் 25ஆண்டுகள் 
சிறைவாசத்தை முடித்து விடுவார்கள். இவர்களின் 
விடுதலை ஏன் தாமதம் ஆகிறது?காரணங்களை அறிவோம்.

எழுவரின் விடுதலை என்பது ஒட்டு மொத்தத் தமிழ்ச் 
சமூகத்தின் கோரிக்கையாக இல்லை. தமிழ்நாட்டில் 
வாழும் அத்தனை தமிழர்களும் தங்களுக்கு இடையிலான 
வேற்றுமைகளைப் புறந்தள்ளி, ஒரே குரலில் ஒரே இலக்குடன் 
எழுவரின் விடுதலையைக் கோரி நிற்கவில்லை.

ஐயோ பாவம், என்ற சராசரித் தனமான ஒரு மனிதாபிமானம் 
என்பதற்கு அப்பால் இந்த எழுவர்பால் தமிழ்ச் சமூகத்திற்கு 
எவ்வித அக்கறையும் இல்லை.எழுவர் விடுதலையை    
வலியுறுத்தி, தமிழ்ச் சமூகத்தின் மொத்த வலிமையை 
இந்தக் கோரிக்கையின்பால் திரட்டி, மத்திய மாநில 
அரசுகளை நிர்ப்பந்திக்கும் விதத்தில் தமிழ்ச் சமூகம் 
இதுவரை உரத்துக் குரல் கொடுக்கவோ போராடவோ இல்லை.

நடந்தவை  எல்லாம் வெறும் அடையாளப் போராட்டங்களே.
பிரச்சார மதிப்புக்கு மேல்  (propaganda value) இவற்றால் 
எந்தப் பயனும் இல்லை.

எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் இயக்கங்கள், 
தலைவர்கள் அனைவரும் மைய நீரோட்ட அரசியலில் 
வலிமையுடன் இல்லை. இவர்கள் செல்வாக்கு ஏதுமற்ற 
உதிரிக் குழுக்களே.

மேலும் இவர்களும் அரசை நிர்ப்பந்திக்கும் விதத்தில் 
தீவிரமான போராட்டம் எதையும் நடத்தவில்லை.
தேர்தல் அரசியலில் தங்களுக்கு வாக்கு விழும் அளவுக்கு 
மக்கள் செல்வாக்கை உருவாக்கினால் போதும் என்ற 
தெளிவான திட்டத்துடன் இந்த உதிரிக் குழுக்கள்
இப்பிரச்சினையைக் கையில் எடுத்தார்களே தவிர,
இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற killer instinctஉடன் 
எழுவர் விடுதலையை அணுகவில்லை.

நாம் ஏற்கனவே கூறியபடி, தமிழ்ச் சமூகத்தின் மொத்த 
மனச்சாட்சியை இக்கோரிக்கை உலுக்கவில்லை. ஏன்?
ராஜீவ் படுகொலையை நியாயமானது என்று தமிழ்ச் 
சமூகம் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. எழுவர் 
விடுதலை பற்றிப் பேசும் எந்த ஒரு குழுவும் அல்லது 
தலைவரும் ராஜீவ் கொலை நியாயமானது என்று கூற 
முன்வரவில்லை. கூறவும் இல்லை.

 பொற்கோவிலுக்குள் புகுந்து நீலநட்சத்திர நடவடிக்கையை 
மேற்கொண்ட இந்திரா காந்தியை மொத்த சீக்கியச்
சமூகமும் வெறுத்தது. இந்திராவின் கொலையைக் 
கொண்டாடியது. இந்திராவைக் கொன்ற கொலையாளிகள் 
சீக்கிய சமூகத்தின் தியாகிகளாகப் போற்றப் பட்டனர்.
கொலையாளிகளின் குடும்பத்தாரை சீக்கிய சமூகம் 
ஆதரித்துப் பேணிக் காத்தது. அகாலிதளம் என்ற 
பஞ்சாப்பின் வலிமையான கட்சி அவர்கள்பால் 
உறுதியுடன் நின்றது.

தமிழ்ச் சமூகத்தின் நிலை இதுவல்ல. ராஜீவ் கொல்லப் 
பட்டவுடன், மொத்தத் தமிழ்ச் சமூகமும் ராஜீவ் பக்கம் 
நின்றது. ராஜிவுக்கு எதிரான கட்சியாகக் கருதப் பட்ட 
திமுக தேர்தலில் படுமோசமாகத் தோற்கடிக்கப் பட்டது.
திமுகவினர் பொதுவெளிகளில் தாக்கப் பட்டனர்.
அவர்களின் உடைமைகள் சேதப் படுத்தப் பட்டன.

இதெல்லாம் தமிழ்நாட்டின் வரலாறு. இவற்றை எல்லாம் 
கண்ணெதிரில் பார்த்தவர்கள் தமிழ் மக்கள்.

ஆக, ராஜீவ் படுகொலையை ஏற்காத தமிழ்ச் சமூகம்,
ராஜீவ் கொலையாளிகளை எப்படி ஏற்கும்? சுருங்கக் 
கூறின், சீக்கிய சமூகத்தின் பரிவுக்கும் அன்புக்கும் 
பாத்திரமாயினர் இந்திரா கொலையாளிகள். அதுபோல 
தமிழ்ச் சமூகத்தின் அன்புக்கும் பரிவுக்கும் பாத்திரம் 
ஆகவில்லை ராஜீவ் கொலையாளிகள்.

எனவே ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்
கோரி, ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஒருநாளும் 
ஒரு குடையின்கீழ் திரண்டு குரல் கொடுக்காது.
பிச்சை கேட்பவர்களுக்கு எட்டணா தர்மம் போடுகிற 
மனிதாபிமானம் என்ற அளவைத் தாண்டி, ராஜீவ் 
கொலையாளிகள் மீதான் பரிவு ஒருநாளும் பரிணாம 
வளர்ச்சி அடையாது.

சுருங்கக் கூறின், எழுவர் விடுதலை என்பது தமிழ்ச் 
சமூகத்தின் கோரிக்கையே அல்ல. அது  தமிழ்ச் 
சமூகத்தின் கோரிக்கையாக இருந்து இருக்குமேயானால்,
எப்போதோ இந்த எழுவரும் விடுதலை ஆகி இருப்பார்கள்.

இன்னும் காரணங்கள் உள்ளன. அவற்றை அடுத்த 
கட்டுரையில் பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------------------------

        


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக