செவ்வாய், 26 ஜனவரி, 2016

சோற்று மூட்டைக்குள் பெருச்சாளி!
---------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------
அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது சோற்று மூட்டைக்குள்
பெருச்சாளியை வைத்துக் கட்டுவது போல் ஆகும். அவரால்
தெற்கில் சிறிது ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் வடக்கிலும்
ஒட்டு மொத்தத்திலும் கட்சிக்கு இழப்பே அதிகம். நிகர லாபம்
என்பது அவரால் கட்சிக்கு ஒருபோதும் கிடைக்காது. ஆனால்
நிகர நஷ்டம் ஏற்படும்.

அவரைக் கட்சியில் சேர்க்காமல் போனால் ஒன்றும் குடி
முழுகி விடாது. அவரால் கட்சிக்கு இனிமேல் எவ்வித
சேதாரத்தையும் ஏற்படுத்த முடியாது. தன்னால்
ஏற்படுத்தக் கூடிய மொத்த சேதாரத்தையும் ஏற்கனவே
ஏற்படுத்தி விட்டார். இனி அவரிடம் ஒன்றும் இல்லை.

அவர் ஒரு spent force. அதாவது தீர்ந்து போன பேட்டரி செல்.
எந்த ஒரு தனி மனிதனை விடவும் அமைப்பு பெரிது.
எந்த ஒரு தனி மனிதனும் அமைப்புக்கு எதிராக ஒன்றும்
பெரிதாகச் செய்து விட முடியாது. அவர் இப்போது அடங்கி
அமைதியாக இருக்கிறார். அவருடைய கதையை அப்படியே
முடித்து விட வேண்டும். அவருக்கு மறுவாழ்வு கொடுக்கத்
தேவையில்லை. பாம்புக்குப் பால் வார்க்க வேண்டாம்.

ஒரு கட்சிக்கு சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால்,
அதற்குத் திறமை வேண்டும். அந்தத் திறமை மட்டுமல்ல
எந்தத் திறமையும் அவரிடம் கிடையாது.அவர் நாலு வரி கூட
சொந்தமாகப் பேசும் அளவு மூளை உடையவர் அல்லர்.
எழுத்தாளரும் அல்லர். பிரச்சினைகளைக் கையில் எடுத்து
கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் அளவு ஆற்றல் உள்ளவரும் 
அல்லர்.

அவருக்குப் பயந்து கொண்டு கட்சியை நடத்த வேண்டும்
என்று எந்த அவசியமும் இல்லை. கட்சியில் சேர்க்கா விட்டால்
கொஞ்ச நேரம் கத்துவார். பின் அடங்கிப் போவார்.

திறமையும் ஆற்றலும் உள்ள நபர் என்றால், புதிதாகக்
கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. அது அவரால்
முடியவில்லை அல்லவா! எனவே அவருக்குப் பயந்து
கொண்டோ அல்லது அவரையும் சேர்த்துக் 
கொண்டால்தான் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்
என்றோ கருதிக் கொண்டு அவரைச் சேர்ப்பது தற்கொலை
முயற்சியே ஆகும்.

கட்சி நல்ல ஒற்றுமையுடன்தான் இருக்கிறது. இவரைச்
சேர்த்தால்தான் ஒற்றுமை ஏற்படும் என்ற நிலையில்
கட்சி இல்லை. எனவே அவரைச் சேர்க்க வேண்டியது இல்லை.

மீறிச் சேர்த்தால், இன்று ஆதரவு தரும் பலதரப் பட்ட
பிரிவினரும் ஆதரவைத் தரவே மாட்டார்கள். அந்தப்
பெண்மணியைச் சகிக்க முடியாது என்பதால்தான் இன்று
பலரும் தலைவரை ஆதரிக்கிறார்கள். இவரைச் சேர்ப்பதன்
மூலம் அந்தப் பெண்மணிக்கும் தலைவருக்கும் எந்த
வேறுபாடும் இல்லை என்பதே உறுதிப் படும்.
*********************************************************
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக