வெள்ளி, 1 ஜனவரி, 2016

ஜெயலலிதா அறிவிப்பும் வைகோவின் கலக்கமும்!
---------------------------------------------------------------------------------
அதிமுக செயற்குழு  பொதுக்குழுக் கூட்டங்களில் பேசிய
ஜெயலலிதா ஒரு முக்கியமான முடிவை அறிவித்தார்.
"எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக் கூடிய தேர்தல்
உத்தி என்பது கிடையாது. எனவே சூழ்நிலையை உத்தேசித்து
தேர்தல் கூட்டணி பற்றிய முடிவு எடுக்கப் படும்" என்று
அறிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்
கட்சிகளின் டெல்லித் தலைமையை உற்சாகம் கொள்ள
வைத்து இருக்கிறது. உடனடியாக மாநிலத் தலைமைக்கு
இது குறித்து அறிவுறுத்திய எச்சூரியும் சுதாகர் ரெட்டியும்
வைகோவின் மக்கள் நலக் கூட்டணியில் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கட்சிகள்   நீடிக்க முடியாமல் போகலாம்
என்பதால், அதற்கேற்பக் காய் நகர்த்துமாறு வழிகாட்டி
உள்ளனர்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு தங்களுக்கான அழைப்பே
என்று கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிகளின் டெல்லித்
தலைமை கருதுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் என்றால்
கூட்டணி இல்லாமலேயே ரிஸ்க் எடுத்துப் போட்டியிடக்
கூடிய ஜெயலலிதா, சட்ட மன்றத் தேர்தலில் அவ்வாறு
எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டார் என்பதை அதிமுகவின்
கடந்த கால வரலாறு தெளிவுபடக் கூறுகிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, 37 இடங்களில்
வெற்றி பெற்ற சாதகமான நிலை இப்போது பெரிதும்
மாறி விட்டது என்பதை ஜெயலலிதா கணித்து இருக்கிறார்.
குறிப்பாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின்
வெள்ள பாதிப்புக்குப் பிறகு, அதிமுகவுக்கு எதிரான
மக்களின் கோபம் அதிகரித்து இருக்கிறது என்பதை
உளவுத்துறை அவருக்கு  உணர்த்தி இருக்கிறது.

அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மேற்கூறிய தீவிரமான
மாற்றங்களை எல்லாம் கணக்கில் எடுத்துள்ள
இடதுசாரிகளின் டெல்லித் தலைமை, வைகோவிடம்
இருந்து விடை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம்
எழுந்திருப்பதை மாநிலத் தலைமைக்குச் சுட்டிக்
காட்டி உள்ளனர். மாநிலத் தலைமையும் யதார்த்தத்தை
அனுசரித்து நடந்து கொள்ளத் தயார் ஆகி விட்டது.. 

இடதுசாரிகளின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த
வைகோ, இடதுசாரிகள் வெளியேறுவதால் ஏற்படும்
காலியிடத்தை நிரப்பும் பொருட்டு, காங்கிரசில்
இருந்து பிரிந்து தனிக்கட்சி  நடத்திக் கொண்டிருக்கும்
ஜி.கே.வாசனை வலியச் சென்று சந்தித்து, மக்கள் நலக்
கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் செய்தி அறிந்ததுமே மதிமுக தொண்டர்களும்
இரண்டாம் நிலைத் தலைவர்களும் தீயை மிதித்தது
போல அலறுகின்றனாறாம். ஒன்றரை லட்சம் ஈழத்
தமிழ்ச் சொந்தங்களை இனப்படுகொலை செய்த
காங்கிரஸ் கட்சி அரசில் அமைச்சராக இருந்த ஜி.கே
வாசன் கட்சியுடன் கூட்டு என்ற முடிவைக் கைவிட
வேண்டும் என்று வைகோவுக்கு கட்சித் தொண்டர்கள்
கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரசுடன் கூட்டு வைப்பது 
தற்கொலைக்குச் சமம் என்றும், தேர்தல் அரசியலில்
தோல்வி அடைந்து இருந்தாலும் ஈழ விடுதலைக்காகத்
தொடர்ந்து பாடுபடும் கட்சி என்ற நற்பெயர் மதிமுகவுக்கு
தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர்கள் மத்தியிலும்
இருந்து வருகிறது என்றும், வாசனுடன் கூட்டு வைத்து
அதையும் இழந்து விட வேண்டாம் என்றும் தொண்டர்கள்
வைகோவுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனர்.

மேலும் வெளிநாடுவாழ் புலம் பெயர்ந்த தமிழர்களும்
தமிழர்களின் செல்வாக்கு மிக்க அமைப்புகளும் இது
பற்றிக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திட்டமிட்டபடி வாசன் கட்சியுடன் வைகோ  கூட்டு
வைப்பாரேயானால், புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்
அமைப்புகள் வழங்கி வரும் தாராளமான நிதியுதவி
நின்றுவிடும் அபாயத்தையும் வைகோவின் நலம்
விரும்பிகள் அவருக்குச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதை ஆகிப்
போனதே என்று வைகோ மிகுந்த மனக் கிலேசத்தில்
இருக்கிறார்.  நாற்பத்தி எட்டு மணி நேரத்துக்குள்
நடந்துவிட்ட இந்த திடீர் திருப்பங்களை எவ்வாறு
சமாளித்து மீள்வது என்பது குறித்து நெருங்கிய
சகாக்களுடன் ஆலோசித்து வருகிறாராம் வைகோ.
************************************************************ 

 , 





     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக