சனி, 16 ஜனவரி, 2016

 ஜல்லிக்கட்டுக்குத் தடையும்
நொறுங்கிப்போன இறையாண்மையும்!
-----------------------------------------------------------------
அமெரிக்க நிறுவனமான பீட்டா, தமிழ் நாட்டின் ஜல்லிக்
கட்டுக்குத் தடை வாங்கி விட்டது.  120 கோடி மக்களின் இந்திய
அரசு பிறப்பித்த ஜல்லிக் கட்டுக்கு அனுமதி வழங்கும்
உத்தரவு பீட்டாவின் முன் நொறுங்கி விட்டது. நொறுங்கியது
உத்தரவு மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மையும்தான். 

இந்தியாவில் ஆயிரக்கணக்கான என்.ஜி.ஓக்கள் எனப்படும்
அரசுசாரா நிறுவனங்கள் உள்ளன. இவை யாவும் அந்நிய
நாடுகளில் இருந்து நிதிஉதவி பெறுகின்றன. குறிப்பாக
அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனத்தின் பட்ஜெட்டில்
இருந்து இவற்றுக்கு நிதி வழங்கப் படுகிறது. இவ்வாறு
அந்நிய நிதி பெறும் என்.ஜி.ஒக்கள் இந்தியாவின்
அரசியலில் தலையிடுகின்றன. இந்தியப் பண்பாட்டைச்
சீரழிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம்தான் பீட்டா
(PeTA- People for ethical Treatment of Animals).

ஜல்லிக் கட்டுக்குத் தடை என்பது சாராம்சத்தில்
தமிழ்நாட்டின் சுதேசிக் காளை இனங்களை
அழிப்பதற்குச் சமம். காலப்போக்கில் நாட்டு மாடுகளின்
இனப்பெருக்கத்திற்கு, இறக்குமதி செய்யப்பட அந்நியக்
காளைகளையோ செயற்கைக் கருத்தரிப்பு முறைகளையோ
நாட வேண்டியது இருக்கும். இப்படி ஒரு நிலை
ஏற்பட வேண்டும் என்பதே பீட்டா போன்ற அமைப்புகளின்
வேலைத் திட்டம்.

விதைநெல்லைப் பொறுத்த மட்டில் ஆயிரக் கணக்கான
சுதேசி நெல் வகைகள் நம்மிடம் இருந்தன. இன்று வெகு
சிலவே எஞ்சி இருக்கின்றன. நாட்டுக் கோழி இனங்கள்
கணக்கின்றி இருந்தன.இன்று அருகி விட்டன. இதைப்
போலவே, சுதேசி மாட்டு இனங்களையும் அழிப்பதில்
முதல் வெற்றி கண்டு விட்டது தேச விரோத பீட்டா.

ஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டால் பதவி விலகுவேன் என்றார்
மத்திய அமைச்சர் பொன்னார். சொன்னசொல் தவற மாட்டார்
என்று நினைத்தோம். ஆனால் நாலாந்தர அரசியல்வாதி
என்று நிரூபித்து விட்டார்.

உச்சநீதி மன்றத்தில் தடையை நீக்கக் கோரி வழக்கு
வந்தபோது, தமிழக அரசு ஆஜர் ஆகி, சிறந்த வழக்கறிஞர்களைக்
கொண்டு வழக்கு நடத்தி இருந்தால் ஜல்லிக்கட்டு நடத்தி
இருக்க முடியும். ஆனால் செயல்படாத தமிழக அரசிடம்
இதை எதிர்பார்க்க முடியாது.

பீட்டா  போன்ற அமைப்புகளை எதிர்த்து மக்கள் கிளர்ந்து
எழ வேண்டும்.இவற்றைத் தடை செய்ய அரசுக்கு மக்கள்
நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறுவது
நம் பண்பாட்டின் அழிவுக்கு இட்டுச் செல்லும்.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக