வியாழன், 7 ஜனவரி, 2016

அரசியல்வாதி போலச் செயல்படும் முகநூல் அதிபர் மார்க்!
--------------------------------------------------------------------------------------------
இன்றைய (7 சனவரி, 2016) ஆங்கில இந்து ஏட்டில் மார்க்
கொடுத்துள்ள முழுப்பக்க விளம்பரத்தைப் பார்த்தேன்.
தமது Free Basics திட்டத்தை ஆதரித்து மார்க் எழுதியுள்ள
கட்டுரை அப்படியே விளம்பரமாகக் கொடுக்கப் பட்டுள்ளது.
ஒரு கட்டுரை முழுப்பக்க விளம்பரமாகக் கொடுக்கப்
படுவதை என் வாழ்நாளில் இன்றுதான் அறிகிறேன்.

ஏற்கனவே, 2015 டிசம்பர் 30 அன்று (அலலது 1) இதே மார்க்
ஒரு முழுப்பக்க விளம்பரத்தை ஆங்கில ஏடுகளில்
கொடுத்து இருந்தார் என்பதை வாசகர்களுக்கு நினைவு
படுத்துகிறேன்.

உலகில் எந்த ஒரு சமூக நலத் திட்டமும் இவ்வளவு
செலவில் விளம்பரம் செய்யப் பட்டதில்லை.
உண்மையிலேயே மார்க்கின் திட்டம் சமூகநலத் திட்டமாக
இருக்கும் பட்சத்தில், இவ்வளவு விளம்பரம் தேவையில்லை.

இன்றைய விளம்பரத்தில், நந்தன் நிலக்கேனியை, பெயர்
குறிப்பிடாமல் தாக்கியுள்ளார் மார்க். (நந்தன் நிலக்கேனி
இந்தியாவின் தொழில்நுட்ப அறிஞர். டாக்டர் மன்மோகன்
சிங்கின் நண்பர். ஆதார் திட்டத்தின் தந்தை)

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில், மார்க்கின் Free Basics
திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதிய நிலக்கேனி
அத்திட்டம் ஒரு வேலியிடப்பட்ட தோட்டம் என்று
வர்ணித்து இருந்தார்.(It is a walled garden).

தமது விளம்பரத்தில் நிலக்கேனிக்குப் பதில் கொடுக்கும்
விதமாக, அவரது walled garden என்ற கருத்துக்கு மறுப்புத்
தெரிவித்துள்ளார் மார்க்.

கலைஞருக்கு ஜெயலலிதா மறுப்பு, மோடிக்கு ராகுல்
மறுப்பு என்ற பாணியில் நிலக்கேனிக்கு மார்க்
மறுப்புக் கொடுத்துள்ளார். கலைஞர்-ஜெயலலிதா,
மோடி-ராகுல் ஆகியோர் இந்திய மக்களின் தலைவர்கள்;
இந்தியர்கள். ஒருவருக்கொருவர் மறுப்புக் கொடுக்கும்
உரிமை உள்ளவர்கள்.

ஆனால், இந்தியரான நிலக்கேனிக்கு வெளிநாட்டவரான
மார்க் மறுப்புக் கொடுப்பது-- அதுவும் இந்தியப்
பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் மறுப்புக் கொடுப்பது
நியாயம் அல்ல. இது இந்திய அரசியலில் தலையிடுவது
ஆகும்.

இந்தியாவில் இணைய நடுநிலை என்ற விஷயத்தில்,
இந்திய சமூகத்தின் கருத்து என்ன என்பதைத்
தெரிவிக்குமாறு இந்திய ,அரசு தன்னுடைய மக்களைக்
கேட்கிறது. இந்திய மக்கள் கருத்துக் கூறுகிறார்கள்.
இது முழுக்க முழுக்க இந்திய அரசுக்கும் இந்திய
மக்களுக்கும் இடையிலான விஷயம். இதில்
அந்நியரான மார்க் தலையிடுவது எப்படி நியாயமாகும்?
After all, மார்க் ஒரு வியாபாரிதானே! இவர் எப்படி
இந்திய அரசியலில் தலையிடலாம்?

வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்காரன்
எப்படி ஆட்சியைப் பிடித்தான் என்பது இப்போது நன்றாக
விளங்குகிறது.

மார்க்கின் Free Basics திட்டத்தை எதிர்த்து முறியடிப்போம்!
இணைய நடுநிலையைப் பாதுகாப்போம்!!
--------------------------------------------------------------------------------------------- 
   

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக