புதன், 20 ஜனவரி, 2016

பெருவழக்கே ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
பெருவழக்காக முடியாச் சொற்கள் மொழியை வளர்ப்பதில்லை.
மொழி குறித்த விவாதத்தில் தாங்கள் கூறும் உடன்கட்டை
போன்ற எடுத்துக் காட்டுகள் பொருந்தா. நிற்க.
**
மொழி என்பது இயல்பிலேயே சமூகத் தன்மை கொண்டது.
பெருவழக்கு என்பது மொழியின் சமூகத் தன்மையின்
அடையாளம் ஆகும். ஐன்ஸ்டினுக்கும் எட்டிங்டனுக்கும்
மட்டுமே புரிந்து இருந்ததாகக் கருதப் படும் சார்பியல் கோட்பாடு
மக்களால் புரிந்து கொள்ளப் படாத நிலையிலும் நின்று நிலவுகிறது.
ஆனால் மொழி இதைப் போன்றது அன்று. மக்களால் பேசப்
பட்டால் மட்டுமே மொழியால் நிலைத்து நிற்க இயலும்.
**
எனவேதான் பெருவழக்கைப் புறக்கணித்து விட முடியாது.
டில்லி, டிகிரி, டீச்சர் ஆகியவை பெருவழக்காகி விட்டன.
ஆனால், ற்றி,ற்றி,இ (TTE) என்பது என்றுமே பெருவழக்காக
முடியாது.   

பழுகுதமிழே முதன்மையானது. அதற்குப் பொருந்தவே
கணினித் தமிழ் உருவாக்கப் பட வேண்டும், காலுக்குத்
தகுந்த செருப்பு என்பது போல. உங்கள் அனைவரின்
முயற்சிக்கும் நன்றி.  இன்னும் பல ஆய்வுகள் தேவை
என்ற தங்களின் கூற்றை வழிமொழிகிறேன். தமிழுக்குப்
புதிய இலக்கணம் சமைக்க வேண்டும் என்பதில்
உறுதியாக இருக்கிறேன். அத்துச் சாரியை போன்றவை
இன்று தேவையில்லை என்றும் அது நீக்கப் படுவதில்
தவறில்லை என்றும் கருதுகிறேன்.



இளையீர், தாங்கள் எல்லாம் கணினி நிபுணர்கள்; மென்பொருள்
நிபுணர்கள். யான் இவற்றில் ஒரு எளிய அறிமுகம் மட்டுமே
உடையவன். ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளாக மாணவர்களுடன்
நெருக்கமாகப் பழகியும் ஊடாடியும் வருகிறேன். அவர்கள்தாமே
எதிர்காலத் தமிழர்கள். அந்தப் பட்டறிவில் இருந்தும், சிலவற்றை 
ஆய்ந்து தெளிந்ததில் இருந்தும்  என் முன்வைப்புகளை
(PROPOSALS) கூறி உள்ளேன். இவைதாம் முடிந்த முடிவுகள்
என்று வாதிடவில்லை. ஆனால் இந்த முன்வைப்புகளைப்
புறந்தள்ள இயலாது என்று மட்டுமே வலியுறுத்துகிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக