திங்கள், 4 ஜனவரி, 2016

வேத காலத்தில் அறிவியல்
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
நால்வகை வேதங்களான ரிக், யஜுர், சாமம், அதர்வணம்
ஆகியவை காலத்தால் முற்பட்டவை. இன்றிலிருந்து 2500
ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அதே நேரத்தில் சிந்து சமவெளி
நாகரிகத்துக்குப் பிற்பட்டவை. இவை யாவும் அறிவியல் வழி
நிரூபிக்கப் பட்டவை.

வேதங்களில் அறிவியல் சொல்லப் பட்டு இருக்கிறதா என்றால்,
விடை ஆம் என்பதுதான். வேதங்கள் என்பவை அக்கால சமூகத்தை
மக்கள் வாழ்வைப் பிரதிபலிப்பவை. எனவே அக்கால அறிவியலை
அவை பிரதிபலிக்கின்றன.

அக்காலச் சமூகம்  எண்ணியல், வடிவியல், வானியல், மருத்துவம்
 ஆகிய அறிவியல் துறைகளில்  எந்த அளவுக்கு அறிவைப் பெற்று
இருந்ததோ, அந்த அளவுக்கு அவை வேதங்களில் இடம்
பெற்றுள்ளன. எண்ணியல், வடிவியல், வானியல், மருத்துவம்
ஆகிய துறைகளில் அக்காலச் சமூகம் ஒரு தொடக்க நிலை
அறிவை மட்டுமே பெற்று இருந்தது. அந்தத் தொடக்கநிலை
அறிவு மட்டுமே வேதங்களில் இடம் பெற்றுள்ளது.

ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு வேதத்தில் சொல்லப்
பட்டுள்ளது என்றும் ஹெய்சன்பெர்க்கின் நிச்சயமின்மைக்
கோட்பாடு (uncertainity principle) வேதத்தில் இருக்கிறது
என்றும் கூறுவது உயர்வு நவிற்சி வகைப்பட்டதல்ல.
மாறாக, இகழ்ந்து ஒதுக்கத் தக்க பித்துக்குளித் தனம் ஆகும்.

இன்றுபோல் அல்லாமல், பண்டைய இந்தியா உலக
அறிவியலுக்குப் பெருங்கொடை அளித்துள்ளது. இது
உலகத்தாரால் ஏற்கப் பட்டும் உள்ளது. இந்தியாவின்
மெய்யான பங்களிப்பு குறித்து நாம் பெருமிதம்
கொள்ளலாம். அதை விடுத்து, எல்லாம் வேதங்களில்
இருக்கிறது என்று கூற முற்படுவது கடுமூடத்தனம் ஆகும்.

சிந்து சமவெளி நாகரிகக் காலத்தில் தொடங்கிய அறிவியல்
வளர்ச்சி வேத காலத்தைக் கடந்து பௌத்த காலத்தில்
(Buddhist period) உச்சம் அடைந்தது. இங்கு பௌத்த காலம்
என்பது புத்தர் வாழ்ந்து மறைந்த பின்னரும் நீடித்த
காலம் ஆகும். பௌத்தம் அரசியலில் செல்வாக்குப்
பெற்றிருந்த காலம் ஆகும்.

அறிவியலில் இந்தியாவின் பங்களிப்பில் பெரும்பகுதி
பௌத்த காலத்தில் நிகழ்ந்தது ஆகும். இதுதான் உண்மை.

இக்கட்டுரையின் ஒவ்வொரு வாக்கியமும் அறிவியல்
வழியால் நிரூபிக்கப் பட்ட செய்திகளைக் கொண்டதாகும்.
--------------------------------------------------------------------------------------------------
அடுத்து: ஆரிய பட்டர் குறித்து.
******************************************************************          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக