வெள்ளி, 24 ஏப்ரல், 2015

விண்வெளியில் ஒரு தொலைநோக்கி!
அதுதான் ஹப்பிள் தொலைநோக்கி!!
இதன் வெற்றிக்குக் காரணம் என்ன?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------
(1990 ஏப்ரல் 24 அன்று, ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் 
நிறுவப்பட்டது. இந்த ஆண்டு 2015 ஏப்ரல் 24 அன்று, இது நிறுவப் 
பட்டு, கால் நூற்றாண்டு காலம் நிறைந்து விட்டது. இது குறித்த 
சிறப்புக் கட்டுரை)
--------------------------------------------------------------------------------------------------------    
1) ஆர்க்கிமிடிஸ், ஆரியபட்டர் காலத்தில் தொலைநோக்கி 
என்பதே கிடையாது. வெறுங்கண்ணால் பார்த்துத்தான் வானியல் 
உண்மைகளை அவர்கள் கண்டறிந்தார்கள்.
2) கலிலியோ காலத்தில்தான் தொலைநோக்கி, விஞ்ஞானிகளால்  
பயன்படுத்தப் படுவது தொடங்கியது. பின்னர் நியூட்டன் 
காலத்தில் அதி உயர் திறன் உடைய தொலைநோக்கிகள் 
பயன்பாட்டுக்கு வந்தன. நியூட்டன் தாமே ஒரு தொலைநோக்கியை 
வடிவமைத்தார். அது ஒரு REFLECTING TELESCOPE ஆகும்.
இன்றும் கிண்டி பிர்லா கோளரங்கத்தில் நியூட்டனின் 
பிரதிபலிப்புத் தொலைநோக்கிகள் தான் பயன்படுகின்றன.
**   
புரிந்து கொள்ள வசதியாக, தொலைநோக்கிகளை இரண்டாகப் 
பிரிக்கலாம்.
1) பூமியில் நிறுத்தப் படும் தொலைநோக்கி:
----------------------------------------------------------------------------
 இதன் மூலம் வான் பொருட்களின் துல்லியமான 
பிம்பங்களைப் பெற முடியாது. தூரத்துக் கோள் ஒன்றில் 
இருந்து (உதாரணம்: வியாழன் கோள்) புறப்பட்டு வரும் 
ஒளியானது பூமியின் வளி மண்டலத்தைக் கடக்கும்போது 
பலமுறை பிரதிபலித்தலுக்கு உள்ளாவதால், கிடைக்கும் 
பிம்பம் துல்லியமாக இருப்பதில்லை.
**
2) விண்வெளியில் நிறுத்தப் படும் தொலைநோக்கி:    
-----------------------------------------------------------------------------------
இதன் மூலமாக மட்டுமே வான் பொருட்களின் (CELESTIAL 
BODIES) துல்லியமான மெய்யான பிம்பங்களைப் பெற முடியும்.
ஏனெனில், பூமிக்கு மேலே நல்ல உயரத்தில், பூமியின் 
வளி மண்டலத்தைக் கடந்து, தொலைநோக்கியை நிறுத்தும்போது,
வான் பொருட்களில் இருந்து புறப்படும் ஒளியானது 
பிரதிபலித்தலுக்கு உள்ளாவது இல்லை. இதனால் பிம்பங்களின் 
துல்லியம் சாத்தியப் படுகிறது.
**
நீண்ட காலமாகவே, பூமியில் இருந்து விடுபட்டு, பூமியின் 
வளி மண்டலத்தின் தொல்லை இல்லாமல், விண்வெளியில் 
ஒரு நல்ல இடத்தில், தொலைநோக்கியை அமைக்க வேண்டும் 
என்ற அவா விஞ்ஞானிகளிடம் இருந்தது. இந்த அவா நிறைவேறி 
இன்றுடன் (24.04.2015) இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஹப்பிள் தொலை நோக்கியானது, பூமியின் மேற்பரப்பில் 
இருந்து, 552 கி.மீ  உயரத்தில், விண்வெளியில் நிறுவப்பட்டு 
உள்ளது. இதன் மூலம் மில்லியன் கணக்கில் துல்லியமான 
பிம்பங்கள் கிடைத்து உள்ளன. (மில்லியன்= 10 லட்சம்).
**
எனவே, ஹப்பிள் தொலைநோக்கியின் வெற்றிக்குக் காரணம்,
அது பூமியில் அல்லாமல், விண்வெளியில் 552 கி.மீ 
உயரத்தில் நிறுவப் பட்டதுதான். ஹப்பிள் தொலைநோக்கி 
நிலையாக ஓர் இடத்தில் நிற்பது அல்ல. அது பூமியைச் சுற்றிக் 
கொண்டே வருகிறது. ஒரு முறை பூமியைச் சுற்றி முடிக்க 
அதற்கு 97 நிமிடங்கள் ஆகின்றன. சுற்றும் வேகம் வினாடிக்கு 
8 கி.மீ.
----------------------------------------------------------------------------------------
தொடரும் 
------------------------------------------------------------------------------------------------  
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக