சனி, 25 ஏப்ரல், 2015

மௌனம் காக்கும் இந்திய அரசும்  
டாக்டர் மன்மோகன்சிங்கைப் போற்றும் கேம்பிரிட்ஜ் 
பல்கலைக் கழகமும்!
தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கவும்! நினைவூட்டுகிறோம்!
---------------------------------------------------------------------------------------------------------
 நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------------------------
பஞ்சாப் பல்கலையில் எம்.ஏ முடித்தபின் மேற்படிப்புக்காக 
டாக்டர் மன்மோகன்சிங் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் 
பல்கலைக்குச் சென்றார். அங்குள்ள புனித ஜான் கல்லூரியில்
(St John's College) பொருளியல் படித்தார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்ட் 
பல்கலையிலும் படித்தார்.
**
தங்கள் கல்லூரியில் (புனித ஜான் கல்லூரி) படித்த மன்மோகன்சிங்  
இந்தியப் பிரதமர் ஆகிவிட்டார் என்று பெருமை கொண்ட அந்தக் 
கல்லூரி, மன்மோகன் சிங் பெயரில் ஒரு ஸ்காலர்ஷிப்பை 
வழங்குகிறது. இது Ph.D படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் ஆகும்.
படிப்புக்கான அனைத்துச் செலவுகளையும், உணவு-விடுதிக் 
கட்டணம் உட்பட இந்த ஸ்காலர்ஷிப் தருகிறது.
**
2008 அக்டோபர் முதல் வழங்கப் படும் இந்த ஸ்காலர்ஷிப் 
இந்திய மாணவர்களுக்கு மட்டுமே. பிற நாட்டினருக்கு இல்லை.
அறிவியல்-தொழில்நுட்பம், பொறியியல், பொருளாதாரம்,
சமூக அறிவியல் ஆகிய துறைகளில் இந்த ஸ்காலர்ஷிப் 
வழங்கப் படுகிறது. ஒரு துறையில், ஒரு மாணவருக்கு 
மட்டுமே இது வழங்கப் படும்.  இதுவரை சற்றேறக் குறைய 
இருபது மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற்றுள்ளனர்.
வருமானம் குறைந்த ஏழை மாணவர்களுக்கு மட்டுமே இந்த 
ஸ்காலர்ஷிப் வழங்கப் படுகிறது. பணக்கார மாணவர்கள் 
இதைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
**
ஐசக் நியூட்டன், ஜவகர்லால் நேரு, கணிதமேதை ராமானுஜன் 
ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் (டிரினிட்டி கல்லூரியில்) 
படித்தவர்கள். (நேரு பெயரிலும் ஒரு ஸ்காலர்ஷிப்பை கேம்ப்ரிட்ஜ் வழங்குகிறது). பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் 
மன்மோகன்சிங் தமது தகுதியாலும் திறமையாலும் அறிவின் 
சிகரத்தை எட்டியவர் என்பது பெருமைக்கு உரியது.
**
இந்த ஆண்டு M.Sc, ME/M.Tech படிக்கும் மாணவர்களே, (அவர்தம் 
பெற்றோர்களே), நன்கு படித்துத் தேறி, இந்த ஸ்காலர்ஷிப்பைப் 
பெறுங்கள். பணம் இல்லையே என்ற கவலை வேண்டாம். இந்த 
ஸ்காலர்ஷிப் ஏழை மாணவர்களுக்கு மட்டுமே. UG, PG இரண்டிலும் 
முதல் வகுப்பில் தேறி இருக்க வேண்டும். இது அடிப்படைத் தகுதி.
**
கல்லூரிப் பேராசிரியர்கள், PG மாணவர்கள், அவர்தம் 
பெற்றோர்கள் ஆகியோருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.
இந்த ஆண்டு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் 
வெற்றி பெற்று இந்த ஸ்காலர்ஷிப்பைப் பெற நான் மனசார 
வாழ்த்துகிறேன். நான்... அடுத்த பிறவியில் இந்த 
ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பித்து அதைப் பெறுவேன்.
**************************************************************
பின்குறிப்பு: டாக்டர் மன்மோகன்சிங்கைப் போற்றி 
ஸ்காலர்ஷிப் வழங்குகிறது வெளிநாட்டில் உள்ள 
பல்கலைக் கழகம். இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?
**************************************************************           


   
  

,          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக