புதன், 22 ஏப்ரல், 2015

பெரியார் வெறுப்பு அரசியல் நடத்தியவர்;நாத்திகர்.
ஆனால், சைவ சமய அறிஞர், திருமந்திரம் எழுதிய  
திருமூலர் பூணூலை அறுக்கச் சொல்கிறாரே! 
பார்ப்பனஅன்பர்களே பதில் என்ன?
----------------------------------------------------------------------------
கேப்டன் நியூஸ் டி.வி விவாதத்தில் 
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர் பி இளங்கோ 
தெரிவித்த கருத்து!
---------------------------------------------------------------------------------------
மூடம் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளின் 
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும் 
பீடொன்று இலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்து 
ஆடம்பர  நூல்சிகை அறுத்தல்  நன்றே.
   ----திருமூலர் இயற்றிய திருமந்திரம், செய்யுள்:241

மூடப் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தால் நன்மை 
விளையும் என்கிறார் இப்பாடலில்  திருமூலர்.

பதவுரை:
------------------- 
மூடம் கெடாதோர் -- மூடத்தனத்தை அகற்ற முயலாமல் 
முட்டாள்தனத்துடனே வாழும் பார்ப்பனர்கள்.   
சிகை நூல் -- உச்சிக்குடுமியும் பூணூலும் 
முதற்கொள்ளின்-- ( பூணூலும் உச்சிகுடுமியுமாக)
அப்பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்றால்.    
வாடும் புவியும் -- உலகம் துன்பம் அடையும்.
பீடு ஒன்று இலன் ஆகும்-- (மன்னன்) ஒரு பெருமையும் 
இல்லாதவனாக ஆகிவிடுவான்   
பேர்த்து உணர்ந்து -- ஆராய்ந்து அறிந்து 
நூல் சிகை அறுத்தல் -- பூணூலையும் உச்சிக் குடுமியையும் 
அறுத்தல். 
நன்றே -- நல்லது  ஆகும்.

பொழிப்புரை தேவை இல்லை என்று கருதுகிறேன்.
எனவே, நேரடியாக விளக்கவுரைக்கு வந்து விடுகிறேன்.

விளக்கவுரை:
---------------------- 
 இப்பாடலை இயற்றியவர் திருமூலர். பூணூலை அறுக்கச் 
சொல்லுபவர் திருமூலர். தந்தை பெரியாரோ, அறிஞர் 
அண்ணாவோ, கலைஞரோ பூணூலை அறுக்கச் சொல்லவில்லை.

திருமூலர் சைவ சமய அறிஞர். இவர் இயற்றிய திருமந்திரம் 
சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக அமைந்து 
உள்ளது. ( சைவ சமயப் பாடல்களின் தொகுப்பு திருமுறை 
என்று அழைக்கப் படும்).

சைவத் திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு. இவை "பன்னிரு 
திருமுறைகள்" என அழைக்கப் படுகின்றன. இவற்றைத் 
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. தொகுப்பித்தவர் 
இராசராச  சோழன்.
  
திருமந்திரம் 3047 பாடல்கள் கொண்டது. பன்னிரு திருமுறைகள் 
மொத்தமும் சேர்ந்து 18326 பாடல்கள் கொண்டவை. இப்பன்னிரு 
திருமுறைகளில் மூவர் தேவாரமும் அடக்கம். ( இங்கு மூவர் 
என்பது அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரையும் குறிக்கும்.)
அப்பர் என்பது நாவுக்கரசரைக்  குறிக்கும்.
ஆக, பூணூலை அறுக்கச் சொல்கிறார் திருமூலர். செயலில் 
காட்டி விட்டார்கள் பெரியாரியத் தோழர்கள்.
----------------------------------------------------------------------------------------------
பார்க்க: கேப்டன் நியூஸ் டி.வி விவாதம் 21.04.2015 
இரவு 9 to 10 மணி.
*******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக