திங்கள், 27 ஏப்ரல், 2015

தத்துவம் செத்து விட்டது!
உண்மையைச் சொல்லும் ஸ்டீபன் ஹாக்கிங்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------
சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் காலத்தில் 
தத்துவ ஞானிகள் உச்சத்தில், அறிவின் சிகரத்தில் 
கொலு வீற்று இருந்தனர். கலை, இலக்கியம், அறிவியல் 
உள்ளிட்ட வாழ்வியலின் எந்தத் துறையையும் விட,
தத்துவம் முதன்மையானதாக இருந்தது. பிற துறைகள் 
அனைத்துக்கும் தலைமை தாங்கி நின்றது.
**
 இந்தப் பிரபஞ்சம் எப்படி வந்தது? சூரிய சந்திர நட்சத்திரங்கள் 
எப்படித் தோன்றின? கடவுள் இருக்கிறாரா? அவர்தான் உலகத்தைப் 
படைத்தாரா? இவை போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் 
பதில் சொல்லும் ஆற்றலும் அருகதையும் உடையதாய் 
தத்துவம் விளங்கியது. கணிதம், அறிவியல், கலை, இலக்கியம் 
ஆகிய பிற துறைகள் யாவும் தத்துவத்தின் தலைமையை  
ஏற்றுக் கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து வந்தன.
அறிவியல் மொழியில் கூறுவதனால், தத்துவம் என்பது 
ஓர் அனைத்துக் கணமாகவும் (UNIVERSAL SET),  பிற துறைகள் 
அதன் உட்கணங்களாகவும் (SUB SETS) இருந்தன.
**
மேலும் அக்காலத்தில் தத்துவஞானிகளே விஞ்ஞானிகளாகவும் 
இருந்தனர். இதன் பொருள் தத்துவஞானிகள் விஞ்ஞானம் 
பயின்று இருந்தனர் என்பதாகும். உதாரணமாக, அரிஸ்டாட்டில் 
காலத்தில் (கிமு 384-கிமு 322), அவரே அக்காலத்தின் ஆகச் சிறந்த இயற்பியலாளர் (PHYSICIST). அவரே தத்துவஞானியும் ஆவார். 
அரிஸ்டாட்டில் மட்டுமின்றி, கிரேக்கத் தத்துவஞானிகள் பலரும்  
விஞ்ஞானிகளே. உதாரணம் பித்தகோரஸ்.
**
 காலம் மாறியது. அறிவியல் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது.
கோப்பர் நிக்கஸ்(1473-1543),கலிலியோ (1564-1642), நியூட்டன் 
(1642-1727) என்று வளர்ந்து கொண்டே வந்த அறிவியல், நியூட்டன் 
காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தது. இதையே 
சாஸ்திரிய (CLASSICAL) அறிவியலின் பொற்காலம் எனக் 
கருதலாம். நியூட்டனின் மறைவுக்குப் பின்னரும் அவரது 
இயற்பியலே (NEWTONIAN PHYSICS) மேலும் ஒரு நூற்றாண்டுக்கு 
அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரை (1900 வரை)
ஆட்சி செலுத்தியது, இக்காலம் முழுவதும் தத்துவமே 
அறிவுத் துறைகளின் தலைமையிடத்தில் இருந்து வந்தது.
**
நியூட்டன் கணித அறிஞர், இயற்பியலாளர் மட்டும் அல்ல, அவரே 
ஒரு தத்துவஞானியும் ஆவார். மேலும் நியூட்டன் காலத்து 
அறிவியல், சற்று முயன்றால் எல்லோரும் கற்றுக் கொள்ளும் 
படியாகவும், புரிந்துகொள்ளும்படியாகவும் இருந்தது. (ஒலியின்
வேகம் என்ன என்று அறிந்திராத காலம்தான் நியூட்டனின் காலம்.
நியூட்டன்தான் அதையும் கண்டு பிடித்தார். அதில் அவர் ஒரு
தவறு இழைக்க, பிரெஞ்சு அறிஞர் லாப்லேஸ் அதைத் திருத்தினார் 
என்பது வரலாறு).
**
இருபதாம் நூற்றாண்டு பிறந்தது முதலே அறிவியல் அசுர 
வேகத்தில் பாய்ந்து முன்னேறியது. மாக்ஸ் பிளான்க், நியல்ஸ் போர் 
ஆகியோரின் குவான்டம் கொள்கையும், ஐன்ஸ்டினின் சார்பியல் 
கொள்கையும் தோன்றின; வளர்ந்தன. இயற்பியல் என்பது 
சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாதபடி கடுமை 
அடைந்தது.
**
குறிப்பாக இந்த மில்லேனியத்தின்பின் (2000), ஜெனிவாவில் CERN 
மையம் மேற்கொள்ளும் LHC (Large Hadron Collider) பரிசோதனைகள், 
ஹிக்ஸ் போசான் கண்டறியப் படுதல், ஆகிய இத்தகைய வளர்ச்சியின் விளைவாக, சமகால இயற்பியலைப் பின்தொடரத் தத்துவத்தால்  
முடியவில்லை. அறிவியலின் வளர்ச்சியை ஒட்டியும் 
அதற்கு ஒத்திசைவாகவும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள 
இயலாமல் தத்துவம் வெகுதூரம் பின்தங்கி விட்டது. உண்மையில்,
தத்துவமானது, அறிவியலின் ஒரு நூற்றாண்டுக் கால வளர்ச்சியில் 
இருந்து தன்னைமுற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு விட்டது.  
**
இவற்றால் முதல் பத்தியில் சொன்ன பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆற்றல் கொண்டதாக தத்துவம் இல்லை. அது 
தன தலைமை இடத்தையும் இழந்து விட்டது. இனி இக்கேள்விகளுக்கு 
அறிவியல் அதாவது இயற்பியல் விடை சொல்லும். இயற்பியல் 
மட்டுமே விடையளிக்கும் ஆற்றலும் அருகதையும் கொண்டதாக விளங்குகிறது.
**
எனவேதான் ஸ்டீபன் ஹாக்கிங் தத்துவம் செத்து விட்டது என்று
கூறுகிறார். இது உண்மை. இதுதான் உண்மை.
பார்க்க: The Telegraph, UK dtd 27 April 2015.  
Stephen Hawking, the renowned physicist, has declared that “Philosophy is dead”.


Speaking to Google’s Zeitgeist Conference in Hertfordshire, the author of 'A Brief History of Time' said that fundamental questions about the nature of the universe could not be resolved without hard data such as that currently being derived from the Large Hadron Collider and space research. “Most of us don't worry about these questions most of the time. But almost all of us must sometimes wonder: Why are we here? Where do we come from? Traditionally, these are questions for philosophy, but philosophy is dead,” he said. “Philosophers have not kept up with modern developments in science. Particularly physics.”
************************************************************************                
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக