ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு 
நெய்க்கு அலைய வேண்டாம்!
---------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-----------------------------------------------------------------------------
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே 
வருகிறது. மிகப் பெரிய பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் 
சிங்கின் ஆட்சியில் தொடங்கி இன்று வரை, இந்தப் பற்றாக்குறை 
அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது; குறைந்தபாடு இல்லை.
இதற்குத் தீர்வாக மோடி அரசு ஒரு திட்டத்தை முன்மொழிகிறது.
கோவில்களின் நிலவறைகளிலும் பேழைகளிலும் காலம் காலமாகத் 
தூங்கும் தங்கத்தை அரசு பெற்றுக் கொண்டு பயன்படுத்துவது என்பதே 
அந்தத் திட்டம்.
**
இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள, நடப்புக் கணக்குப் 
பற்றாக்குறை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம்.
இது ஆங்கிலத்தில், CAD, அதாவது CURRENT  ACCOUNT DEFECIT
என்று அழைக்கப் படுகிறது. ஓர் நாட்டின் வர்த்தகத்தில், ஏற்றுமதியை 
விட, இறக்குமதி அதிகமாக இருக்கும் என்றால், அந்த நிலை CAD ஆகும்.
**
வளமான பொருளாதாரம் என்றால், அதன் அடையாளம், இறக்குமதியை 
விட ஏற்றுமதி அதிகமாக இருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் 
ஏற்றுமதியும் இறக்குமதியும் சமமாக இருக்க வேண்டும். ஆனால்,
இந்தியாவில் இறக்குமதி அதிகமாகவும், ஏற்றுமதி குறைவாகவும் 
இருந்து வருகிறது. இதன் காரணமாக CAD எனப்படும் நடப்புக் 
கணக்குப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் இந்தியப் பொருளாதாரம் சரிந்து கொண்டே வருகிறது.
**
இதைச் சரி செய்யும் முயற்சியாக, மோடி அரசு கோவில் தங்கத்தை 
எடுத்துப் பயன்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகச் 
செய்திகள் கூறுகின்றன. இத்திட்டம் வரவேற்கத் தக்க திட்டமே.
**
ஆண்டொன்றுக்கு சற்றேறக் குறைய ஆயிரம் டன் தங்கத்தை 
இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் இறக்குமதியில் 
பெரும் பங்கு வகிப்பது தங்கமும் நிலக்கரியும்தான். எனவே தங்க இறக்குமதியைக் குறைப்பதன் மூலம், சரிந்து விழும் இந்தியப் 
பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியும்.
**
கோவில்களில் இருந்து விருப்பத்தின் பேரில் தங்கத்தைப் 
பெற்று, அதற்கு உரிய வட்டியை அளித்து, பெற்ற தங்கத்தை 
உருக்கி, நகைக் கடைக்காரர்களுக்கு அரசு வழங்கும். தற்போது,
இந்தியாவின் எல்லா நகைக்கடைக் காரர்களும் இறக்குமதியான 
தங்கத்தை வைத்துத்தான் நகை செய்கிறார்கள். இந்த நிலை 
முடிவுக்கு வரும்.
**
அரசின் இந்தத் திட்டத்துக்கு சில கோவில்களின் நிர்வாகிகள் 
ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறோம்.
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு ஏன் 
அலைய வேண்டும்? உள்ளூரில் கோடிக் கணக்கான டன் தங்கம் 
இருக்கும்போது, ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்? எனவே 
இத்திட்டத்தை வரவேற்போம். இத்திட்டத்தை முழுமூச்சாக 
எதிர்க்கும் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் பிற்போக்குக் 
கருத்துக்களை முறியடிப்போம்!
************************************************************************888  



       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக